திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்படும் வருவாய் கிராமங்களில் வேளாண்மை உதவி அலுவலர்கள் மூலம் ‘‘ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் அதிகமாக சாகுபடி செய்யப்படும் பயிரில் 5 முதல் 10 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கத் திடல் அமைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயிருக்கான நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சலுக்கான ரகங்கள், விதை நேர்த்தி, விதை விதைப்பு ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள், மண் பரிசோதனை அடிப்படையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் இச்செயல் விளக்கத் திடலில் செயல்படுத்தி ஒவ்வொரு நிலையிலும் சாகுபடி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இச்செயல் விளக்கத்திடலில் செயல்படுத்தப்படும் அனைத்து தொழில் நுட்பங்களையும் அக்கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் கண்டறிந்து விழிப்புணர்வு பெற்று அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து குறைந்தபட்சம் 15 முதல் 20 சதவீதம் கூடுதல் உற்பத்தி பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். எனவே இத்திட்டம் 747 வருவாய் கிராமங்களில் 70 வேளாண்மை உதவி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது என திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன் தெரிவித்துள்ளார்.
The post திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.