நீலகிரி: நீலகிரி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நீலகிரியிலும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் திமுகவின் ஆ.ராசா, மறுபக்கம் பாஜகவின் எல்.முருகன், இதற்கு நடுவில் அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என களமிறங்கியிருப்பதால், நீலகிரி தொகுதியே ஸ்டார் தொகுதியாகிவிட்டது. எப்போதுமே நீலகிரியில் வெளியூர் வேட்பாளர்கள்தான் அதிக முறை வென்றுள்ளதால், இந்த முறையும் அப்படியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பாஜக வேட்பாளர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.. இதெல்லாம் இந்த முறை தேர்தலில் கூடுதல் ஸ்பெஷலாகிவிட்டது. இந்நிலையில், நீலகிரி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு;
* உதகையில், திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, ‘திரைப்பட நகரம்’ அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்.
* உதகையில் சர்வதேச தரத்தில் ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம்’ உருவாக்கப்படும்.
* உதகை காந்தல் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.
* மின் இணைப்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்கும் சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நீலகிரி மாவட்ட மக்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள HPF தொழிற்சாலையானது நவீன தொழிற் பூங்காவாக (IT Park) அமைத்து தரப்படும்.
* மேட்டுப்பாளையம் – கோவை ரயில் இருப்புப்பாதை இரட்டை வழி பாதையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* உதகை நகர் பகுதியில் சுற்றுலா வாகனங்களுக்கு மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்.
* தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* நிலக்கடலை, பாக்கு மற்றும் செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற்று ஏற்றுமதியை ஊக்குவித்து, உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் இன பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி சுற்றுலா மையம், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
* மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும்.
* 6 சட்டமன்ற தொகுதிகளிலும் முகாம் அலுவலகம் திறக்கப்படும்.
* 6 தொகுதிகளிலும் மகளிர்க்கு தனி கல்லூரி அமைக்கப்படும்.
* உதகையில் மூடப்பட்ட எச் பி எஃப் தொழிற்சாலையில் ஐடி பூங்கா திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நீலகிரியில் ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* மேட்டுப்பாளையம், அவிநாசி, சத்தியமங்கலம் , உதகை ஆகிய பகுதிகளில் அதிநவீன கால்நடை மருத்துவமனை அமைத்து தரப்படும்.
* வெற்றி பெற்ற 500 நாட்களில் 59 வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
The post உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் எல்.முருகன்..!! appeared first on Dinakaran.