பழநி, ஏப். 15: திண்டுக்கல் மாவட்டம், பழநியின் மைய பகுதியில் காந்தி மார்க்கெட்டில் காய்கறி, பலசரக்கு கடைகள் என 600க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தற்போது இங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சில கடைகள் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பல கடைக்காரர்கள் தங்களது கடைகளின் முன்பு ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இரும்பு கம்புகளை போட்டு தடுப்புகள் அமைத்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் கடைகளுக்கு பொருட்கள் இறக்க வரும் லாரிகள் பகல் நேரங்களில் சாலைகளை ஆக்கிரமித்து நின்று விடுகின்றன. இதனால் பகல் நேரங்களில் இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து போலீசார் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை காந்தி மார்க்கெட்டில் லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.
கடைகளுக்கு முன்பு போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை அகற்ற வேண்டுமென அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் இந்த உத்தரவு தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. பகல் நேரத்திலேயே கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் காந்தி மார்க்கெட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பழநி காந்தி மார்க்கெட்டில் பகலில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை appeared first on Dinakaran.