×
Saravana Stores

மதுரவாயல் அருகே கூரியர் அலுவலகத்தில் தீ விபத்து

 

பூந்தமல்லி, ஏப். 15: மதுரவாயல் அருகே கூரியர் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. சென்னை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கூரியர் நிறுவனம் மற்றும் கிடங்கு உள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலுவலகத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மளமளவென பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து தகவல் அறிந்து பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கூரியர் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், டேபிள்கள், டெலிவரி செய்ய வைத்திருந்த பார்சல் பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. குடோனுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பல கோடி மதிப்பு பொருட்கள் தப்பியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மதுரவாயல் அருகே கூரியர் அலுவலகத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Madurawayal ,Poontamalli ,Maduravayal ,Noombal ,Chennai.… ,Dinakaran ,
× RELATED லாரி மீது ஆட்டோ மோதி பாட்டி, பேத்தி பரிதாப பலி