×

ஒன்றிய பா.ஜ அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் கோவையில் குறுந்தொழில் நிறுவனங்கள் தள்ளாடுகின்றன

கோவை, ஏப். 14: கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நேற்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம், பாரதிநகர், சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர், நஞ்சுண்டாபுரம் பகுதியில் வாக்காளர்களிடம் பேசியதாவது:
இப்பாராளுமன்ற தேர்தல், முக்கியத்துவம் வாய்ந்தது. என்ன காரணம் என்று கேட்டால், கொடுத்து அழகு பார்ப்பது திமுக அரசு. ஆனால், அதை தடுத்து குஜராத்துக்கு கொண்டு செல்வது ஒன்றிய பா.ஜ அரசு. இதை நீங்கள் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். அவர்கள், ஏதேதோ செய்தது போல மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

ஒன்றிய பா.ஜ ஆட்சியில், கடந்த 10 ஆண்டில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதுதான் சாதனை. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. அபரிமிதமான ஜி.எஸ்.டி வரியை விதித்து, தொழில்நகரமான கோவையில் பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்களை அழித்துவிட்டனர். மிச்சம் மீதியுள்ள நிறுவனங்களும் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. வளமாக இருந்த கோவையில் தற்போது பணப்புழக்கம் குறைந்து விட்டது. காரணம், ஒன்றிய பா.ஜ அரசுதான்.

இந்த தேர்தல், கொடுப்பவர்களுக்கும், அதை தடுப்பவர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் போன்றது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை மனதில் நிலைநிறுத்தி, வாக்களியுங்கள்.தாய்மார்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். பா.ஜ.வினர் பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என மனக்கோட்டை கட்டுகிறார்கள். நம் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்றார். ஆனால், இன்று நம் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து குஜராத் மாநிலத்துக்கு கொண்டு செல்கிறார். இந்த துரோகிகளை நாம் அடையாளம் காண வேண்டும்.

நம் உரிமையை, நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது. அதற்காக போராடும் நம் முதல்வருக்கு நாம், பக்கபலமாக இருக்க வேண்டும். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை வெற்றிபெற செய்யுங்கள். உங்களில் ஒருவனாக இருந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். அதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

அதிமுகவினர் எதற்காக இத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. யார் பிரதமராக வர வேண்டும்? யார் பிரதமராக வரக்கூடாது? என அவர்களால் சொல்ல முடியவில்லை. திக்கு தெரியாத காட்டில் தவித்ததுபோல் தவிக்கிறார்கள். அவர்கள், புறம்தள்ளப்பட வேண்டியவர்கள். மக்கள் விரோத, பாசிச பா.ஜ.வுடன் கள்ள உறவு வைத்திருப்பவர்கள் நமக்கு தேவையில்லை. அவர்கள், நம் மாநிலத்துக்கு துணையாக இருக்க மாட்டார்கள். நம் உரிமையை காப்பாற்ற மாட்டார்கள். அதிமுகவிற்கும் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு கணபதி ராஜ்குமார் பேசினார்.

பிரசாரத்தில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி, திமுக பகுதி செயலாளர் ஷேக் அப்துல்லா, தொகுதி பொறுப்பாளர் மணிசுந்தர், வார்டு செயலாளர்கள் அமானுல்லா, மியான்குமார், மாநகராட்சி கவுன்சிலர் ரேவதி, திமுக நிர்வாகிகள் முரளி, கோவை அபு, சாரமேடு இஸ்மாயில், செந்தில், கரும்புக்கடை சாதிக் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

The post ஒன்றிய பா.ஜ அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் கோவையில் குறுந்தொழில் நிறுவனங்கள் தள்ளாடுகின்றன appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Union BJP government ,DMK ,Ganapathi Rajkumar ,Nanjundapuram ,Bharathinagar ,Saramedu ,Singhanallur ,
× RELATED கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும்...