×
Saravana Stores

வாக்களித்த மை அடையாளத்தை காட்டினால் உணவகங்களில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்: செங்கல்பட்டு கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, ஏப். 14: செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் கைவிரலில் வைத்த மை அடையாளத்தை காட்டினால் உணவங்களில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. அதனால், 100 சதவீதம் வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வைத்து தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மாணவ – மாணவிகளுக்கு கலாச்சார போட்டிகள் நடத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், அரசு களப்பணியாளர்களின் மூலம் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வாக்குப்பதிவு செய்துவது குறித்து விழிப்புணர்வு அளித்தல், சுயஉதவி குழுக்களை கொண்டு மாவட்ட அளவில் ரங்கோலி போட்டிகள் நடத்துதல், மனித சங்கலி, பைக் பேரணி போன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, போலீசார் என பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலை முன்னிட்டு, வருவாய் துறை, கல்வித் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு, தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், தபால் ஓட்டு போடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் கைவிரலில் வைத்த மை அடையாளத்தை காட்டினால் உணவங்களில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று செங்கல்பட்டு கலெக்டர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் திருவிழா, தேசத்தின் திருவிழா. 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். ஏப்ரல் 19ம் தேதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிடச் செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்படிருந்தது.

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இருசக்கர வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு செய்யும் பேரணி நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தேர்தலின்போது 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை தண்ணீர் கேனில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் கவிதா, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு: புகார் எண்கள் அறிவிப்பு
காஞ்சிபுரம்: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம்தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அனைவரும் வாக்களிக்க காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். ஏப்ரல் 19ம்தேதியன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவதை கண்காணிக்க ஏதுவாக மற்றும் இது தொடர்பாக புகார்களை தெரிவிப்பதற்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்கள், தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடர்பான புகார்களை காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காஞ்சிபுரம் 9442832516, தொழிலாளர் துணை ஆய்வர் காஞ்சிபுரம் – 9789948409, தொழிலாளர் துணை ஆய்வர் பரங்கிமலை – 9840811411 என்ற எண்ணிலும், செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்தவர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி), செங்கல்பட்டு – 9940856855, தொழிலாளர் உதவி ஆய்வர் செங்கல்பட்டு -9585521537, முத்திரை ஆய்வர் செங்கல்பட்டு – 8148737993 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

The post வாக்களித்த மை அடையாளத்தை காட்டினால் உணவகங்களில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்: செங்கல்பட்டு கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Collector ,Chengalpattu ,District ,Collector ,S. Arunraj ,Chengalpattu district ,Mamallapuram ,Tamil Nadu… ,Sengalpattu ,Dinakaran ,
× RELATED மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...