×
Saravana Stores

திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பிரசாரம் உத்திரமேரூர் ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் ஒன்றியம் உருவாக்கப்படும்: சுந்தர் எம்எல்ஏ வாக்குறுதி

உத்திரமேரூர், ஏப்.14: உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் என திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் திமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம், ஒழையூர், ரெட்டமங்கலம், தோட்டநாவல், திருமுக்கூடல், பழவேரி, பினாயூர், சாத்தனஞ்சேரி, சின்னாலம்பாடி, பாலேஸ்வரம், புலிப்பாக்கம், சாலவாக்கம், எடமச்சி, சித்தனக்காவூர், சிறுபினாயூர் உள்ளிட்ட கிராமங்களில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ஒழையூர் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் செல்வத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் திமுக ஒன்றிய நிர்வாகிகள் பொக்லைன் இயந்திரத்தில் பன்னீர் ரோஜா மலர்களை கொண்டு வந்து வேட்பாளர் மீது தூவி வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால்தான், மோடியை வீட்டுக்கு அனுப்ப முடியும். இல்லையென்றால் உங்களது உரிமை பறிக்கப்படும். இங்கு ஏராளமான பெண்கள் கூடியுள்ளீர்கள், உங்களுக்கு சொத்தில் சமபங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு, பெண் கல்வி ஆகிய உரிமைகளை பெற்றுத் தந்தது திராவிட அரசு. இதைவிட ஒரு படி மேலாக பெண்களுக்கு அரசு பேருந்து இலவச பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் செல்வத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என பேசினார்.

இதனைத் தொடர்ந்து வேட்பாளர் செல்வம் எம்பி பேசுகையில், ‘இந்த நாடாளுமன்ற தொகுதியில் உள்ள புக்கத்துறை, உத்திரமேரூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால், இந்த ஒன்றியத்தில் உள்ள கிராம மக்கள் வைக்கும் கோரிக்கைகளை ஒன்றிய நிதியைப் பெற்றுத்தந்து விரைவாக செய்து முடிப்பேன்’ என உறுதி கூறினார். இந்த வாக்கு சேகரிப்பில் ஒன்றிய செயலாளர் குமார், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் எழிலரசன், கருணாகரன், மேகநாதன், தேவராஜ், ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் வசந்தி குமார், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், செயற்குழு உறுப்பினர் இரா.நாகன், நிர்வாகிகள் வெங்கடேசன், சத்யா சக்திவேல், ரவி, மணி, பாலமுருகன், முனுசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பிரசாரம் உத்திரமேரூர் ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் ஒன்றியம் உருவாக்கப்படும்: சுந்தர் எம்எல்ஏ வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : DMK ,Selva ,Uttaramerur union ,Chalavakkam union ,Sundar MLA ,Uthramerur ,Kanchipuram South District ,Uthramerur union ,Chalavakkam panchayat union ,Kanchipuram ,Shalavakkam Union ,Sundar ,MLA ,Dinakaran ,
× RELATED புற்றுநோயால் உயிரிழக்கும் 70%...