×

நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்

*மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

கடலூர் : தமிழகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நேற்று தபால் வாக்கு பதிவு நடைபெற்றது.

அதன்படி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 2,234 போலீசார், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 668 போலீசார், வெளி மாவட்டங்களில் பணிபுரியும் 202 போலீசார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 112 பேர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் 120 பேர் என மொத்தம் 3,336 பேர் தபால் வாக்கு செலுத்துவதற்காக அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி கடலூர் தாலுகா அலுவலகத்தில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 810 போலீசார் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று காலை கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம், தாலுகா அலுவலகத்திற்கு வந்து தபால் வாக்கு செலுத்தினார். அதனை தொடர்ந்து போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர்.

அப்போது மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அருண் தம்புராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அபிநயா, தாசில்தார் பலராமன், டிஎஸ்பி பிரபு, தேர்தல் துணை தாசில்தார் சந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அதேபோல் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் நேற்று காவல் துறையினருக்கான தபால் வாக்கு பதிவு நடைபெற்றது.

விருத்தாசலம்: விருத்தாசலம் காவல் துறையினருக்கான தபால் வாக்கு பதிவு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தபால் ஓட்டு பெட்டி திறக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட காவல்துறையினர் 146 பேர் வாக்குப்பதிவு சீட்டு பெற்று தபால் வாக்குகளை செலுத்தினர். விருத்தாசலம் தாசில்தார் உதயகுமார் மற்றும் வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சிதம்பரம்: சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் ஆகியோருக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நடந்தது. இதனை உதவி ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஷ்மி ராணி, வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். காவல்துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வரிசையில் நின்று தபால் வாக்கை பதிவு செய்தனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர் appeared first on Dinakaran.

Tags : Election ,Cuddalore ,Parliamentary General Election ,Tamil Nadu ,Cuddalore district administration ,
× RELATED கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில்...