பெரம்பலூர்: மக்களுக்கு, தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட ஒரு துணிவு வேண்டும் என பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டையூர் பகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து பேசிய பாரிவேந்தர், பிரதமர் மோடி தூய்மையான ஆட்சியை கொடுத்துள்ளதாகவும், உலக நாடுகள் அவரை பெருமை கொள்வதாகவும் புகழாரம் சூட்டினார். மேலும் தமிழ்நாட்டில் எல்லா அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டை ஆளும் கட்சி ஊழலில் அதிகமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில், தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறு புத்தகத்தை வெளியிட ஒரு துணிவு வேண்டும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கோணப்பாதை கிராமத்தில் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு பேசிய அவர், கல்விக்கான தெய்வம் சரஸ்வதி என்றும், அதற்காக தாமரையை மறந்துவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். சுட்டெரிக்கும் சூரியனை மறந்துவிட வேண்டும் என்றும் கூறினார். மேலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை என அறிவுறுத்திய பாரிவேந்தர், அனைவரும் வரும் 19-ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
திருச்சி மாவட்டம் சிக்கத்பூர் பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியினர் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைதொடர்ந்து பேசிய அவர், ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக்கி, அவர்கள் குடும்பங்களில் விளக்கேற்றி உள்ளதாகக் கூறினார். பிரதமர் மோடி வந்த பிறகு இந்தியாவின் பெயரும், பெருமையும் அதிகரித்து உள்ளதாகவும், நல்லவர்களை MPயாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஊழல் கட்சிதான் இன்று தமிழ்நாட்டை ஆள்கிறது எனவும், ஊழல் கட்சியிலிருந்து வருபவர்கள் ஊழல் வாதிகள் எனவும் விமர்சித்தார். இதையடுத்து தன்னை வெற்றி பெறச் செய்தால் சிக்கதம்பூர் கிராமத்தில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், மாவீரன் சுந்தரலிங்கத்திற்கு சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
The post மக்களுக்கு, தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட ஒரு துணிவு வேண்டும்: பாரிவேந்தர் appeared first on Dinakaran.