×

ஏன் ? எதற்கு ? எப்படி ?

?வீட்டின் நுழைவு வாயிலில் படிகாரம் கல் கட்டுவதன் மூலம் என்ன பலன்கள் கிடைக்கும்?
– ஜெயக்குமரன், திருநெல்வேலி.

வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் நுழையாமல் தடுக்கும் சக்தி படிகாரக் கல்லிற்கு இருப்பதாக நாம் நம்புகிறோம். அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அது ஆன்டி செப்டிக் போன்று செயல்படுவதால், நோய்க்கிருமிகளை உள்ளே வராமல் தடுக்கிறது. இதைத்தான் நமது பெரியவர்கள் படிகாரக்கல் கட்டுவதால் திருஷ்டி தோஷம் எதுவும் உண்டாகாது என்று சொல்லி வைத்தார்கள்.

?ஒருவருக்கு திருஷ்டி ஏற்பட்டால் அதை போக்குவது எப்படி?
– வண்ணை கணேசன், சென்னை.

திருஷ்டியால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு ஏற்றாற்போல் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். சாதாரணமாக திருஷ்டி உண்டாகும் என உணரும்போது, உப்புச் சுற்றிப் போடுதல், ஆரத்தி எடுத்தல் போன்றவற்றை செய்தால் போதுமானது. அதே நேரத்தில், திருஷ்டி கடுமையாக இருக்கும் என்று உணர்ந்தால், சுதர்ஸன ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம் போன்றவற்றை சாஸ்திரம் அறிந்தவர்களைக் கொண்டு நடத்திடல் வேண்டும். திருஷ்டியினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், சரபேஸ்வரர் ஹோமம் செய்து கலச தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து கொள்ளல் வேண்டும். சூலினி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர் ஆகிய தேவதைகளின் வழிபாடு திருஷ்டி தோஷத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வரும் திறன் படைத்ததாகும். பாதிப்பிற்கு ஏற்றாற்போல் பரிகாரத்தை தீர்மானம் செய்ய, வேதம் படித்த அறிஞர்களின் துணையை நாடுவது நல்லது.

?தீபாராதனையின்போது மூலவர் மீதிருந்து பூ விழுந்தால், நல்ல சகுனமா?
– அ.யாழினி பர்வதம், சென்னை.

நிச்சயமாக. தீபாராதனை நடந்து கொண்டிருக்கும்போது, பூ விழுந்தால் நாம் எதை நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோமோ, அது நடந்துவிடும் என்று புரிந்துகொள்ளலாம். அதனால்தான் அதுபோன்ற நேரத்தில் நல்லதையே மனதில் தியானிக்க வேண்டும். எதிர்மறை சிந்தனைகளுக்கு தீபாராதனை நேரத்தில் கண்டிப்பாக இடமளிக்கக் கூடாது.

?இறைவனின் சாந்நித்யம் பெற பக்தர்கள் செய்ய வேண்டியது என்ன?
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

சாந்தித்யம் என்பது வேறு. அருள் என்பது வேறு. நீங்கள் இறைவனின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உள்ளம் உருக உண்மையாக பக்தி செலுத்தினாலே போதுமானது, இறைவனின் அருளைப் பெற்றுவிடலாம். தெய்வ சாந்நித்யம் உள்ள இடமே சந்நதி என்று அழைக்கப்படுகிறது. நம் எல்லோருடைய உள்ளத்திலுமே இறைவன் குடியிருக்கிறான். நமக்குள் குடியிருக்கும் இறைவனை நாம்தான் உணருவதில்லை. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை உணர இயலும்.

?அம்மன் புடவைகளை ஏலத்தில் எடுத்து பெண்கள் உடுத்தலாமா?
– முருகன்.

உடுத்தலாம். அம்மனுக்கு சாற்றிய புடவையை பெண்கள் வாங்கி உடுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. இந்த உலகில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என அத்தனையும் இறைவனால் படைக்கப்பட்டவையே. அம்பிகைக்கு நைவேத்தியம் செய்த உணவினை பிரசாதமாக எண்ணி வரிசையில் நின்று வாங்கி சாப்பிடும்போது, அம்மனுக்கு சாற்றிய புடவையை வாங்கி அணிந்து கொள்வது மட்டும் எவ்வாறு தவறாகும்? மனிதர்களாகிய நாம் அணிந்து பார்த்த வஸ்திரத்தை அது புதிதாய் இருந்தால்கூட அம்பிகைக்கு அர்ப்பணிக்கக் கூடாது. மாறாக அம்மன் வஸ்திரத்தை பெண்கள் வாங்கி உடுத்துவதால் நன்மையே உண்டாகும். மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற நாட்களில் பெண்கள் தாராளமாக அம்மனுக்குச் சாற்றிய புடவையை அணிந்து கொள்ளலாம். குறிப்பாக, பூஜை செய்யும் நேரங்களில் உடுத்துவது மிகவும் நல்லது.

?நாம் உடுத்திய பழைய கிழிந்த உடையை கால் மிதியாக வீடு துடைக்க பயன்படுத்தலாமா?
– எம்.பிரபாகரன், திருப்பத்தூர்.

பயன்படுத்தலாம். ஆனால், அதற்கு முன்னதாக அதனை நன்றாக துவைத்து சூரிய ஒளியில் காய வைத்திருக்க வேண்டும். சூரிய ஒளி என்பது படும்போது அதில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கிவிடுகிறது. நாம் உடுத்திய துணியை துவைக்காமலும், சூரிய ஒளியில்நன்றாகக்காய வைக்காமலும்,எக்காரணம் கொண்டும் வீடு துடைக்க பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அது எதிர்மறையான பலன்களைத் தந்துவிடும்.

?எவ்வளவு சம்பாதித்தாலும் வீண் விரயம் ஏற்படுகிறது. தடுக்க என்ன வழி?
– பொன்விழி, அன்னூர்.

நம்முடைய சம்பாத்யத்தில் மாதந் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை தான தர்மத்திற்காக என்று தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். எடுத்து வைப்பதோடு மட்டுமல்லாமல் உதவி தேவைப்படுபவர்களுக்கு அதனை தானமாகவோ அல்லது தர்மமாகவோ கொடுத்துவிடுங்கள். மனதார நீங்கள் தானமும் தர்மமும் செய்யச் செய்ய உங்கள் கணக்கில் புண்ணியம் என்பது சேர்வதோடு வங்கிக் கணக்கிலும் சேமிப்பு என்பதும் உயரக் காண்பீர்கள். இறைக்கிற ஊற்றுதான் சுரக்கும். தான தர்மம் செய்வதால், வீண் விரயம் என்பதும் தடுக்கப்படும்.புண்ணியமும் வந்து சேரும்.

?தெற்கு நோக்கி வீற்றிருக்கும் அனுமனை வணங்கினால் கூடுதல் பலன் கிட்டும் என்று சொல்கிறார்களே, ஏன்?
– ராஜேந்திரன், மேல்புவனகிரி.

அப்படியெல்லாம் விதிகள் ஏதுமில்லை. அனுமன் எந்த திசையை நோக்கி வீற்றிருந்தாலும் வணங்கலாம். இலங்கை என்பது இங்கிருந்து தென் திசையில் அமைந்திருப்பதால் விஸ்வரூப ஆஞ்சநேயரை அவ்வாறு தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி ஆஞ்சநேய ஸ்வாமி எந்த திசையை நோக்கி வீற்றிருந்தாலும் அவரை வணங்கலாம். அனுமனை வணங்குவதால் மனோபலமும், உடல்பலமும், புத்திபலமும் கூடும். மனம், வாக்கு, காயம் அதாவது சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒருமித்து செயல்பட அனுமன் வழிபாடு என்பது துணை நிற்கும்.

 

 

The post ஏன் ? எதற்கு ? எப்படி ? appeared first on Dinakaran.

Tags : Jayakumaran, ,Tirunelveli ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!