×

சித்தலிங்கங்கள்

சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள சிவலிங்கங்கள் பலவகைப்படுகின்றன. ஒருவருடைய முயற்சியின்றி, தானே அன்பர்களுக்கு இயற்கையாகத் தோன்றி அருள்பாலிக்க, சிவபெருமான் வெளிப்பட்ட லிங்கங்கள் ‘‘சுயம்புலிங்கங்கள்’’ என்று அழைக்கப்படுகின்றன. பார்வதிதேவி, தேவர்கள், ரிஷிகள், அரசர்கள், ராட்சதர்கள் முதலியோர் சிவபூஜை செய்ய அமைத்த லிங்கங்கள் ‘‘பிரதிஷ்டாலிங்கங்கள்’’ எனப்படும். இவை அமைத்தவர்களின் பெயரையொட்டி முறையே, தேவிலிங்கம், தைவிக லிங்கம், காணலிங்கம், ஆரிஷலிங்கம், ராஜலிங்கம், ஆசுரலிங்கம் எனப் பலவாறு பெயர் பெறுகின்றன. இவையனைத்தும் பூமியில் கிடைக்கும் உயர்ந்த வகைக் கற்கள், மருந்துகள், மரம், சுதை முதலியவற்றால் செய்யப்பட்டனவாகும்.

இதற்கு முற்றிலும் மாறானவை “சித்தலிங்கங்களாகும்’’. சித்தர்கள், மூலிகைகள், ரசங்கள்,பாஷாணங்கள் இவற்றைத் தங்கள் அரிய முயற்சியில் கண்டு பிடித்து சித்த நெறிமுறையால் ஒன்று கூட்டி, அதனைச் சிவலிங்கங்களாக அமைத்துள்ளனர். இந்த லிங்கங்களின் மீது காற்றின் சேர்க்கை காரணமாக படியும் ஒரு வகையான மருந்துப்படிவு நாம் இவற்றிற்குச் செய்யும் பால் அபிஷேம், பஞ்சாமிர்த அபிஷேகம், நீர் முதலியவற்றில் கலந்துவிடும். அவற்றை உண்பதாலும், பருகுவதாலும் உடலிலுள்ள தீராத வியாதிகளும், மன உளைச்சல்களும் தீரும் என்பது கண்கூடான நம்பிக்கையாகும்.

சிவதலங்களில் சித்தர்கள் இடிகற்களைப் பயன்படுத்திச் சிவலிங்கங்களை அமைந்துள்ளனர். இடிகற்கள் என்பவை, விண்ணில் சுற்றும் கற்கள்: இடியால் தாக்குண்ட பின் பூமியில் விழுவனவாகும். இவை அபூர்வ சக்திகளையுடையன என்று நம்புகின்றனர். சித்தர்கள் இக்கற்களைத் தேடிக் கண்டுபிடித்து அதில் லிங்கம் செய்து அதற்குக் கோயில் அமைத்துள்ளர். காஞ்சீபுரத்தில் இடிகல்லால் அமைந்த சிவலிங்கம் சித்தீசுவரர் என்ற பெயரில் அமைந்திருக்கக் காணலாம். சிதம்பரத்தையடுத்த திருக்கழிப்பாலையில் சித்த மருந்துகளால் செய்யப்பட்ட லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை அமைத்தபிறகு இதன் தலைப்பகுதி உடைந்துவிட்டது. அதனால் அதன் உள்ளே இறுகாமலிருந்த மருந்துப்பொருள் வழிந்து வெளியே வந்து விட்டது. பிறகு அந்த மருந்துக்கலவை படிப்படியாகக் குளிர்ந்து கெட்டியாக இருப்பதைக் காணலாம். இது கபிலர் என்ற சித்தரால் அமைக்கப்பெற்ற சிவலிங்கமாகும். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருப்பாசூர் கூவம் முதலான அனேக தலங்களில் இருப்பன இத்தகைய சித்த மருந்துவ முறையில் அமைந்த லிங்கங்களேயாகும்.

இவை சித்தர்களின் அனுபவஞானத்திற்கேற்ப மூவகைப்படும். இவை சூரியகலை ஞானம், சந்திரகலை ஞானம், அக்னிகலை ஞானம் என்ற மூன்று கலைகளின் மூலமாகச் செய்யப்படுகின்றன. சூரியகலையில் செய்யப்பட்ட லிங்கங்கள் செம்மை நிறம் படைத்தவை. சந்திர கலையில் படைக்கப் பெற்றவை வெண்மை நிறம் கொண்டவை. அக்னி கலையில் செய்தவை கருஞ்சிவப்பு அல்லது நிறம் மாறும் தன்மை கொண்டவை. திருக்கழிப் பாலையிலுள்ள லிங்கம் சந்திரகலை ஞானத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதாகும். இதைக் குறிக்கவே மூலத்தானத்தில் சந்திரசேகரின் வடிவம் காட்டப்பட்டுள்ளது என்பர்.பழனியில் போகர் பழனியாண்டவரையும், பதினெண் சித்தர்கள் திருச்செங்கோட்டில் அர்த்த நாரீசுவரரையும் அமைத்துள்ளதைக் காணலாம். இந்த அர்த்தநாரீசுவரர் வெள்ளைப்பாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளார். இது சூரியகலை, சந்திரகலை என்ற இரண்டு கலைஞானங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட தென்பர்.

மேலும் சித்தர்கள், மக்கள் நலம் கருதி நிறுவப்பட்ட இத்தகைய லிங்கங்களுக்கு “யந்திரத்தாபனம்’’ செய்தும், மந்திர உச்சாடனம் செய்தும், அபூர்வ சக்திகளைக் கூட்டியுள்ளனர். இவற்றைத் தேடிச் சென்று மனத்தை ஒரு முகப்படுத்தி வணங்கி வரும் மக்களுக்கு, இவை இப்பொழுதும் நல்ல பயன்களைத் தந்து அருள்பாலிப்பது கண்கண்ட உண்மையாகும்.

 

The post சித்தலிங்கங்கள் appeared first on Dinakaran.

Tags : Shiva ,Lord ,Goddess ,Parvati ,Devas ,Rishis ,Kings ,Giants ,Siddha Lingam ,
× RELATED சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியூர் கடலில் வலைவீசும் படலம் கோலாகலம்