×

கம்பராமாயண நுணுக்கங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வாருங்கள்! கம்பரை அவர் அனுபவித்த ராமாயணப் போக்கிலேயே அனுபவிக்கலாம்!
அயோத்தியில் ஓடும் ‘சரயு’ எனும் நதியில் இருந்தே தொடங்கலாம். சரயு எனும் நதி மக்களுக்குத் தாய் போன்றது. மலையில் உற்பத்தியாகி ஓடி, கடலிலே சேரும் அந்த சரயு நதி வெள்ளமாகப் பெருகியது. அது அளவில்லாத வேதங்களாலும் சொல்வதற்கு அரிய பரம்பொருளைப்போல் இருந்தது. தொடக்கத்தில் ஒன்றாக இருந்த சரயு நதி, பின்பு பல பிரிவுகளாக ஏரி-குளங்கள்-கிணறுகள் முதலான நீர் நிலைகளில் பரவியது. அது, ஒன்றேயான பரம்பொருளைப் பல்வேறு சமயங்களும், ‘‘என் தெய்வம்! என் தெய்வம்!’’ என்று சொல்வதைப்போல இருந்தது.

எங்கு உற்பத்தியானது? எப்படி உற்பத்தியானது? எப்போது உற்பத்தியானது? – என்று சொல்ல இயலாத நீர் ஓடி, ஏரி-குளம்- ஆறு எனப் பல இடங்களிலும் நிறைந்து, ஏரி நீர்-குளத்து நீர்- கிணற்று நீர்-ஆற்று நீர் எனப் பலவிதமான பெயர்களைப் பெற்றதைப் போல-என்கிறார் கம்பர்.

கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக்
கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும் இயம்ப அரும்
பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றேயாகித் துறைதொறும்
பரந்த சூழ்ச்சி
பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும்
போல் பரந்ததன்றே
(கம்ப ராமாயணம்-பால காண்டம்)

யாராலும் விவரித்துச் சொல்லமுடியாத பரம்பொருள், அந்தந்த சமய-மதங்களுக்கு ஏற்பப் பெயர்களைப் பெறுகிறார் என்ற ஓர் அற்புதமான கருத்தை, மனித மனங்களில் பதிய வைக்கிறார். இது பதிந்தால், இதை உணர்ந்தால் சமயச் சண்டைகள் வருமா?இவ்வாறு பாடிய கம்பர், சரயு நதியின் போக்கைச் சொல்லும் விதமாக, உயிரின் தன்மையைப் பாடுகிறார். சரயு நதியின் வெள்ளம், காடுகள்- சண்பகச் சோலைகள் – தடாகங்கள் – மணற்கேணிகள் – பாக்குக் காடுகள் – வயல்கள் – வனங்கள் ஆகியவைகளில் எல்லாம் புகுந்து ஓடி, உடம்புகள் தோறும் உயிர் புகுந்து உலாவுவதைப்போல உலாவியது.

நீர் இல்லாவிட்டால் உலகமே உயிரற்றதாகிவிடும்; எல்லா ஜீவராசிகளுக்கும் நீர்தான் உயிர் என எச்சரிக்கும் இப்பெரும் கருத்து, ‘நீரின்றி அமையாது உலகு’ எனும் திருக்குறளின் எதிரொலி.

தாதுகு சோலை தோறும் சண்பகக் காவு
தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணல்
தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனம்தொறும் வயல்கள்
தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாவிய
தன்றே
(கம்ப ராமாயணம்-பால காண்டம்)

அடுத்து ஓர் இயற்கை நிகழ்வை வர்ணித்த கம்பர், அதில் ஒரு மாபெரும் உண்மையையும் மறைத்து வைக்கிறார். சாதாரணமாகப் பெண்களின் நடையை வர்ணிக்கும்போது, ‘‘அவள் அன்னத்தைப்போல் நடந்தாள்’’ என்றுதான் இலக்கிய நூல்கள் வர்ணிக்கும். ஆனால், கம்பரோ, ‘‘அயோத்தி பெண்களின் நடையைப் பார்த்த அன்னங்கள், ‘இவர்களின் நடையைப்போல நாம் நடக்க வேண்டும்’ என்று நினைக்கின்றன’’எனப் பாடுகிறார்.

அவ்வாறு நினைத்த அன்னங்கள்,தங்கள் குஞ்சுகளைத் தாங்கள் இருந்த நீர்நிலையிலேயே விட்டுவிட்டு, அயோத்தி பெண்களைப்போல நடைபயில முயல்கின்றன.
அப்போது அந்த நீர்நிலைக்கு வந்த ஓர் எருமை மாடு அதில் இறங்க, எருமையின் கால்கள் சேற்றில் அகப்பட்டுக் கொண்டன.அந்த நிலையில் எருமைக்குத் தன் கன்றின் நினைவு வந்துவிட்டது. உடனே அது கனைத்துக்கொண்டு தன் மடியில் இருந்த பாலை, அப்படியே தண்ணீரில் பொழிந்து விட்டது.

அங்கு ஏற்கனவே இருந்த அன்னக்குஞ்சுகள் தண்ணீரில் பொழியப்பட்ட பாலைப் பிரித்து உண்டுவிட்டு, அங்கிருந்த தாமரை மலர்களில் தூங்க ஆரம்பித்தன.தூங்கும்போது தாலாட்டு வேண்டுமல்லவா? அன்னக்குஞ்சுகள் தூங்கும்போது, பச்சை வண்ணத்தேரைகள் (தவளைகளில் ஒருவகை) கத்துவது தாலாட்டைப் போல இருக்கிறது.

சேலுண்ட ஒண் கணாரின் திரிகின்ற
செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய
மழலைப்பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக்
கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரை
தாலாட்டும் பண்ணை
(கம்ப ராமாயணம்-பால காண்டம்)

கம்பர் பாடிய இப்பாடலின் கருத்தை அப்படியே வண்ண ஓவியமாக மனக்கண் முன் நிறுத்திப்பார்த்தால், அயோத்தியின் வளமை புரியும். அதே சமயம் இப்பாட்டில், மிகவும் நுணுக்கமான ஒரு தகவலையும் பதிவு செய்திருக்கிறார் கம்பர். மாட்டின் பால், அதன் கன்றுக்கோ அல்லது அதை வளர்ப்பவருக்கோ போய்ச்சேர வேண்டும். ஆனால் இங்கோ, இருவருக்கும் சேராமல், அன்னக் குஞ்சுகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இதை மனதில் பதியவைத்துக் கொண்டால், அயோத்தியில் நடக்கப்போகும் ஒரு நிகழ்வைக் கம்பர் சூசகமாகச் சொல்வது புரியும்.

அயோத்தியின் அரசாட்சி – மணி மகுடம், தசரதரின் எண்ணப்படி ராமருக்குக் கிடைக்கவில்லை; கைகேயியின் விருப்பப் படி பரதனுக்கும் கிடைக்கவில்லை; பாதுகைக்குப் போயிற்று. கம்பரின் நுணுக்கமான பாடல்களில் இதுவும் ஒன்று. அடுத்து அயோத்தியை வர்ணிக்கிறார் கம்பர். காலம் இல்லாதது அகாலம்; நீதி இல்லாதது அநீதி; தர்மம் இல்லாதது அதர்மம்; அதுபோல யுத்தம் இல்லாதது அயோத்தி. இதைக் கம்பர் விவரிக்கும் அழகே தனி! அயோத்தியில் ஈகை என்பதே இல்லை. காரணம்? வறுமை என்பதே இல்லை. தேவை என அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவசியமே இல்லை. அதன் காரணமாகக் கொடுப்பவரும் இல்லை. பகைவர்களே இல்லாததால், வலிமை-பராக்கிரமம் என்பதும் இல்லை.

யாருமே பொய் பேசாததால், உண்மையில்லை. அதாவது, ‘‘இவர்தான் உண்மை பேசுபவர்’’ எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அனைவரும் சத்திய சந்தர்கள்.
எல்லோருமே கல்வி – கேள்விகளில் தலைசிறந்து விளங்கியதால், அறிவின்மை என்பதே இல்லை.

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை
இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்
(கம்ப ராமாயணம்-பால காண்டம்)
அடுத்து, கம்பர் சொல்லும் ஓர்
அற்புதத்தகவல் – ஐம்படைத் தாலி!

குழந்தைகளுக்கு எந்த விதமான நோயும் திருஷ்டி தோஷங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஐம்படைத்தாலி என்பதைக் கட்டுவார்கள். அதில் மகாவிஷ்ணுவின் சங்கு – சக்கரம் – கதை – வில் – வாள் எனும் ஐந்து ஆயுதங்களும் இடம் பெற்றிருக்கும். காப்பாக ஐம்படைத்தாலி அணிந்த குழந்தைகளின் மார்பில் வாய் எச்சில் ஒழுகி, அப்படியே ஐம்படைத் தாலியில்
விழுவதாகப் பாடுகிறார் கம்பர்.

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகும் மக்களை…
(கம்ப ராமாயணம்-பால காண்டம்)

இதே தகவல் ‘மழலை சின்னீர் ஐம்படை நனைப்ப’ என்று மணிமேகலையிலும் இடம் பெற்றுள்ளது. குழந்தையின் வாயில் இருந்து ஒழுகும் நீரை ‘சின்னீர்’ எனப் பெயரிட்டு அழைக்கிறது மணிமேகலை. இப்படிப்பட்ட அயோத்தியை தசரதர் ஆண்டு வந்தார்; நலம் நிறைந்த நாட்டை நன்றாகவே ஆண்டு வந்தார். மக்களைக் குறையில்லாமல் அரசாண்ட தசரதருக்கு, ஒரு பெரும் குறை இருந்தது. அது குழந்தையில்லாக் குறைதான். தசரதர் தன் குறையைக் குல குருவான வசிஷ்டரிடம் போய்ச்சொல்லி முறையிட்டார்.

மன்னரும் தன் சீடருமான தசரதரின் குறை கேட்ட குலகுரு வசிஷ்டர், கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முன்னம் நடந்த நிகழ்ச்சிகள் நினைவிற்கு வந்தன. அந்த நிகழ்வுகளில் ராமரின் வருகையைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் தாமரைகளைக் கொண்டு வந்து நிறுத்தி, அதன் பின்பே ராமரது வருகையைப் பற்றிப் பாடுகிறார் கம்பர்.

தாமரை வந்தால், ராமர் வருவார் எனப்
பதிவு செய்கிறார் கம்பர்.
ராவணனின் கொடுமையால் கடுந்துயர்
அடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம்
சென்று முறையிட்டார்கள்.
அப்போது வருகை புரிந்த மகாவிஷ்ணு
வைக் கம்பர் வர்ணித்த விவரங்கள்:

கருநிற மேகம் போன்ற திருமேனியைக் கொண்ட திருமால், தாமரை மலர்த் தொகுதியை மலர்த்திக்கொண்டு தோன்றினார். திருமாலின் கைகள், திருவடிகள், கண்கள், வாய் முதலான அனைத்தும் தாமரை மலர்கள் போல் விளங்கத் தோன்றினார்; சங்கு ஒரு கரத்திலும் சக்கரம் ஒரு கரத்திலும் கொண்டு தோன்றினார்; மலர்ந்த தாமரை மேல் எழுந்தருளியிருக்கும் லட்சுமி தேவி
யுடன் செம்பொன்னாலான குன்று போலத் திருமேனி கொண்ட கருடன் மேல் வந்து தோன்றினார்.

கருமுகில் தாமரைக்காடு பூத்து நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏடலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம்பொற்
குன்றின் மேல்
வருவ போல் கலுழன் மேல் வந்து
தோன்றினான்
(கம்ப ராமாயணம்-பால காண்டம்)

இவ்வாறு தரிசனம் தந்த மகாவிஷ்ணு, அந்தத் தேவர்களுக்கு ஓர் உத்தரவும் இட்டார். ‘‘தேவர்களான நீங்கள் அனைவரும் வானரங்களாகிக் காடுகள், மலைகள், மலையடிவாரங்கள் ஆகியவற்றில் போய்ச் சேனையோடு அவதாரம் செய்யுங்கள்!’’ என்றார்.

‘‘வானுளோர் அனைவரும் வானரங்களாய்
கானிலும் வரையிலும் கடி தடத்திலும்
சேனையோடு அவதரித்திடுமின் சென்று’’ என
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான்
(கம்பராமாயணம் – பாலகாண்டம்)

‘‘யாம் தசரதருக்கு மகனாய்த் தோன்றி, அந்த அரக்கர் கூட்டத்தை அழிப்போம்!’’ என்றார் திருமால்.அது மட்டுமல்ல! திருமால் தான்மட்டும் தனியாக வருவதாகச் சொல்லவில்லை; கூடவே, தன்னுடன் இருக்கும் சங்கு-சக்கரம்-ஆதிசேஷன் எனும் மூன்றும், ராமராக வரும் தமக்குத் தம்பிகளாகப் பிறந்து, தன் அடிச்சுவட்டையே பின் பற்றுவார்கள்’’ என்றும் கூறினார்.

வளையொடு திகிரியும் வடவை தீதர
விளை தரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளைஞர்கள் என அடிபரவ ஏகி நாம்
வளை மதில் அயோத்தியில் வருதும் –
என்றனன்
(கம்ப ராமாயணம் – பாலகாண்டம்)

ராவண சங்காரத்திற்காக மகாவிஷ்ணு, ராமராக வருவது சரி! சங்கு-சக்கரம்-ஆதி
சேஷன் எனும் மூன்றும் ஏன் மனிதர்களாகப் பிறக்க வேண்டும்?

தேவர்கள் ஏன் வானரங்களாகப் பிறக்க வேண்டும்?

ராவணன் பிரம்மதேவரிடம் வரம் பெறும்போது, மனிதர்களையும் குரங்குகளையும் அற்பமாக எண்ணி அவர்களை ஒதுக்கி விட்டான்; அதனால், ‘‘முனிவர்-தேவர்-அசுரர்களால் எல்லாம் எனக்கு மரணம் வரக்கூடாது’’ என்பதை வரமாகப் பெற்றான்.

அதன் காரணமாகவே தேவர்கள் வானரங்களாகவும் மகாவிஷ்ணு மனிதராக – ராமராகவும் அவதாரம் செய்தார்கள்.அது மட்டுமல்ல! மகாவிஷ்ணு, தான்மட்டும் தனியாக வருவதாகச் சொல்லவில்லை; தன்னுடன் இருக்கும் சங்கு – சக்கரம் – ஆதிசேஷன் எனும் மூன்றும், ராமராக வரும் தனக்குத் தம்பிக ளாகப் பிறந்து, தன் அடிச்சுவட்டையே பின் பற்றுவார்கள்’’என்றும் கூறினார். ராவணனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு, ராமராக வருவது சரி! சங்கு – சக்கரம் – ஆதிசேஷன் – எனும் மூன்றும் ஏன் மனிதர்களாகப் பிறக்க வேண்டும்?

ஒரு சமயம்… தன் கரங்களில் உள்ள சங்கு-சக்கரங்களை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, பாதுகைகளை ஒரு புறமாக ஒதுக்கி விட்டு, மணிமகுடத்தைக் கழற்றி வைத்தார்.
அதன்பின் அலையாழி அறிதுயிலும் மாயன் என்பதற்கு ஏற்ப, ஆதிசேஷன் மீது படுத்து அறிதுயில் கொள்ளத் தொடங்கினார்.சற்று நேரத்தில் சங்கும் சக்கரமும் பாதுகையை இழிவாகப் பேசத் தொடங்கின; ‘‘வாசலில் இருக்க வேண்டிய நீ, எப்படி இங்கு வரலாம்?’’ என்று தொடங்கி, மேலும் மேலும் கடுமையாகப் பேசின.

அவைகளுக்கு உதவியாக மணிமகுடமும் சேர்ந்து, பாதுகையை இழிவாகப் பேசியது.பாதுகை மிகவும் பொறுமையாக அமைதியாகப் பதில் சொன்னது; ‘‘நான் என்ன செய்ய முடியும்? என்னை இங்கே கொண்டு வந்தது பகவானின் செயல்’’ என்றது. பாதுகையின் வார்த்தைகளை, மற்றவைகளால் தாங்க முடியவில்லை; மேலும் தொடர்ந்தன. அப்போது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து எழுந்து, பாதுகைக்கு ஆறுதல் கூறினார்.

பிறகு மற்றவை பக்கம் திரும்பி, ‘‘சங்கே! சக்கரமே! நீங்கள் இருவரும் பாதுகையை இழிவாகப் பேசியதால், பதினான்கு ஆண்டுகள் இந்தப்பாதுகையைப் பூஜைசெய்ய வேண்டும் நீங்கள்! மணிமகுடமே! தவறு செய்த அவைகளுக்கு உறுதுணையாக நீ பேசியதால், பதினான்கு ஆண்டுகள் இந்தப்பாதுகையின் மீது இருக்க வேண்டும் நீ!’’ என்றார் மகாவிஷ்ணு.அதன் காரணமாகவே சங்கும் சக்கரமும் பரத-சத்துருக்னர்களாகப் பிறந்து, பாதுகையைப் பூஜித்தன; மணி மகுடம் பாதுகை மீதிருந்து அதை அலங்கரித்தது.

யாராக இருந்தாலும் சரி! இழிவாகப் பேசக்கூடாது எனும் பெரும் படிப்பினையை ஊட்டும் கதை இது. (இந்தக் கதை கம்பரோ வால்மீகியோ சொல்லாதது. அதேபோல், ஆதிசேஷன் லட்சுமணனாக வந்ததற்கும் மகான்கள் சில காரணங்களைச் சொல்லி இருக்கிறார்கள். அவை பின்னால் இடம் பெறும்).இதற்கு மேல், தேவர்களில் யார்யார் யார்யாராக வந்து பிறந்தார்கள் என்பதைப் பட்டியல் இடுகின்றார் கம்பர். தேவர்களுக்கு அரசரான தேவேந்திரன், ‘‘பகைவர்களுக்கு இடி போன்ற வாலியும் அவன் மகன் அங்கதனுமாக எனது அம்சம் அவதரிக்கும்’’ என்றார்.

சூரிய பகவான், ‘‘என் அம்சமாக வாலியின் தம்பி சுக்ரீவன் அவதரிப்பான்’’ என்றார்.

அக்கினி பகவானும், ‘‘என் அம்சமாக நீலன் பிறப்பான்’’ என்றார்.

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான்
எனது கூறு
மருவலர்க்கு அசனியன்ன வாலியும் மகனும்
என்ன;
இரவி மற்றெனது கூறு அங்கு அவர்க்கு
இளையவன்;
அரியும் மற்றெனது கூறு நீலன் என்று
அறைந்திட்டானால்
(கம்ப ராமாயணம்-பால காண்டம்)

வாயு பகவான், ‘‘எனது அம்சமாக மாருதி-அனுமன் அவதரிப்பான்’’ என்றார்.
மற்றத் தேவர்கள், ‘‘நாங்களும் வானரங்
களாகப்போய் அவ தரிப்போம்’’ என்றார்கள்.

வாயு மற்றெனது கூறு மாருதி எனலும்
மற்றோர்
காயும் மற்கடங்களாகி காசினி அதனின் மீது
போயிடத் துணிந்தோம் என்றார்
(கம்ப ராமாயணம்-பால காண்டம்)

பிரம்மதேவர், ‘‘நான் ஏற்கனவே ஜாம்பவானாகப் பிறந்திருக்கிறேன்’’ என்றார். வால்மீகி சொன்ன பட்டியலை அனுசரித்துக் கம்பர் சொன்னபட்டியலைப் பார்த்தோம். இதே பட்டியலை அருணகிரிநாதரும் திருப்புகழில் கூறுகிறார்.

சூரியன் சுக்ரீவனாகவும் இந்திரன் வாலியாகவும் தோன்றி, வெற்றிக்குரங்கு அரசர்களாக இருந்தார்கள். ஈடு இணையில்லாத மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் அவதரித்த பிரம்ம தேவர் கரடிமுகம் கொண்ட ஜாம்பவானாகச் சேனைகளுக்குத் தலைவனாகத் தோன்றினார். அக்கினி பகவான் நீலனாகவும் ருத்திரர் சிறப்பு வாய்ந்த அனுமாராகவும் அவதரித்தார்கள். ஒப்பில்லாத தேவர்கள் எல்லோரும் இவ்வாறு பூமிக்கு வந்து சேர்ந்தார்கள்.இவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்த ராமர்,அசுரர்களை அழித்தார். (அருணகிரிநாதர் சொல்லும் இந்தப்பட்டியல் கொண்ட திருப்புகழ்)

இரவி யிந்திரன் வெற்றிக்குரங்கின்
அரசரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கிணக் கர்த்தனென்றும்
நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற் சிறந்த
அனுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தில் வந்து புனமேவ
அரியதன் படைக் கர்த்தரென்று
அசுரர்தங் கிளை்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின்
மருகோனே
(கருவடைந்து – திருப்புகழ்)
வால்மீகி முதல் கம்பர், அருணகிரி
நாதர் வரை இந்தத் தேவ-வானரங்களின் பட்டியலை ஏன் வெளியிட வேண்டு்ம்? மனித இனத்திற்கு மிகப்பெரும் பாடத்தைச் சொல்வதற்காகவே!நாம் அனைவரும் படாதபாடு பட்டுக் கடுமையாக உழைக்கிறோம். யாருக்காக?அடுத்தவர்க்காக; நம் குடும்பத்தாருக்காக. அவர்களைக் காப்பாற்றுவதற்காக நாம் படும் அவலங்கள் ஏராளம்! ஏராளம்!‘‘நாம பட்ற கஷ்டத்த நம்ம குடும்பம், நம்ம கொழந்தங்களும் ஏன் படணும்?’’ என்று சொல்லவும் செய்கிறோம்.

நாம் படும் கஷ்டங்களை அவர்களும் படவேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணமல்ல. யாரைக் காப்பாற்றப் படாதபாடுபட்டு உழைக்கிறோமோ, அதில் உள்ள சாதக-பாதகங்களை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாழ்வியல் நுணுக்கங்களை உணர்வார்கள்.இதன் காரணமாகவே, தேவர்கள் ராவணனிடம் இருந்து தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டியபோது, தான் ராமராக வந்து அவதாரம் செய்வதாகச் சொன்ன மகாவிஷ்ணு, அந்தத் தேவர்களையும் வானரங்களாக வந்து பிறக்கச் சொன்னார்.
தேவர்கள் வானரங்களாக வந்து பிறக்க, இதுவே காரணம்.

இப்படி மகாவிஷ்ணு வந்ததும் வாக்கு தந்ததும், அதன் தொடர்பான நிகழ்வுகளும் அப்படியே வசிஷ்டருக்கு ஞான திருஷ்டியில் நிழலாடின. பிறகென்ன? வசிஷ்டரின் சொற்படித் தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்.தசரதரின் மனைவியரான கோசலைக்கு ராமரும்; கைகேயிக்குப் பரதனும்; சுமித்திரைக்கு லட்சுமண – சத்ருக்னர்களும் அவதரித்தார்கள். கம்ப ராமாயண நுணுக்கங்கள் பல. நாம் பார்த்ததோ சில.

தொகுப்பு: பி.என். பரசுராமன்

The post கம்பராமாயண நுணுக்கங்கள் appeared first on Dinakaran.

Tags : Kambar ,Sarayu ,Ayodhya ,River Sarayu ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்