×

பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்

சேண்பாக்கம்

அனைத்தின் மூலமாவும், பேரண்டத்தையே அசைவிக்கும் சக்தியாகவும், யாவினுள்ளும் உள்ளூர விளங்கும் விநாயகர் தன் விளையாடலை தொடங்கினார். விநாயகர் என்றாலே தனக்கு மேல் நாயகர் என்று எவருமிலர் என்று பொருள். தானே அனைத்திற்கும் முதல் நாயகனாக, எங்கும் மூத்த பிரானாக பிரகாசிக்கிறார். அந்தப் பிரகாசத்தின் ஓரு கீற்று பாலாற்றின் வெண்மையில் பட்டுத் தெறித்தது. மூலச் சக்தியின் கிரணங்கள் பதினொன்றாய் பெருகி பூமலர்வதுபோன்று அழகு மூர்த்தங்களாக பூமிக்குள்ளிருந்து மலர்ந்தது.

மலர்ந்ததின் வாசம் பாரையே தம் திருப்பாதங்களால் வலம் வந்த ஆதிசங்கரரின் உள்ளத்தை நிறைத்தது. அருகே அழைத்தது. அந்த மகான், விண்நிறைந்த நாயகன் மண்ணுக்குள் மறைந்திருப்பதை தம் மனக்கண்ணில் கண்டுற்றார். தன் உற்றாரோடு வேகமாய் விநாயகனை தரிசிக்க தொடர்ந்து நடந்தார். ஆற்றின் விரைவோடு செண்பகவனத்தினுள் புகுந்தார். கானகத்தின் மையமாய் மலர்ந்திருந்த மூத்தநாயகனை பார்த்தவர் சிலிர்த்தார்.

தன் வயம் இழந்து கண்களை மூடினார். ஓம் எனும் பிரணவரூபமாய் வளைந்திருக்கும் அம்மூர்த்தங்களிலிருந்து வெளிப்படும் ஓம் எனும் நாதம் தம் அகக்செவியில் பரவுவதை உணர்ந்து உள்ளம் குளிர்ந்தார். முற்றிலுமாய் தன்னை அவரிடம் கொடுத்திட்டார். செண்பகவனச் செல்வன் அந்த மகானை இன்னும் செம்மையாக்கினார். ஆதிசங்கரரும் செண்பக மலர்களைப் பறித்து பாதத்தில் சொரிந்தார். வன்னி இலைகளைக் கிள்ளி மாலையாகத் தொடுத்தார். விநாயகரின் அண்மையில் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். அருட் சக்கரம் இன்னும் வேகமாய் சுழன்றது. ஆதிசங்கரரின் குருபரம்பரையை குன்றிலிட்ட விளக்காக பிரகாசப்படுத்திய மகாப்பெரியவர் என்று எல்லோரும் தொழுது நின்ற ஸ்ரீ சந்திரசேகரசரஸ்வதி சுவாமிகளின் சிரசைச் சுற்றி நின்றது.

வேலூர் நகரத்தில் முகாமிட்ட திருமடம் சேண்பாக்கம் வழியே காஞ்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. விநாயகனின் தூல சொரூபமாக விளங்கும் யானையின் மீது பால
பெரியவர் அமர்ந்திருந்தார். சேண்பாக்கம் செல்வநாயகன் அந்த யானையை செல்ல விடாது தடுத்தான். திருமடம் அதிர்ந்தது. யானை ஓரடி எடுத்து வைக்க தவித்தபோது யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல முன்னும் பின்னும் அலைந்தது. மகாபெரியவர் கண்கள் மூடினார். நினைவு அடுக்குகளை மெல்ல மேலேற்றினார்.

ஏன் யானை நகர மறுக்கிறது என்று மருகினார். சட்டென்று, இதயத்தாமரையில் ஒளிர்ந்த சந்திரனின் மையத்தில் விநாயகர் சிரித்தார். பழைய நினைவு ஒன்று பூத்துக் கிளர்ந்தது. கண்கள் திறந்து மகாப்பெரியவர் மெல்லப் பேசினார்.‘‘ஸ்ரீ மடத்தின் ஓரு பிரார்த்தனையாக நூற்றியெட்டு தேங்காய்களை சிதறுகாயாக போடுவதாக வேண்டிக்கொண்டது மறந்துபோய்விட்டது. அதை சேண்பாக்க செல்வவிநாயகர் தம் சொரூபமான யானையாகவே வந்து நினைவூட்டுகிறார். பிரார்த்தனையை நிறைவேற்றினால் யானை நகரும்’’என்றார்.

அந்தக் கணமே நூற்றியெட்டு தேங்காய்களை சிதறச்செய்தவுடன் யானை சட்டென்று ஒயிலாக நடந்தது. மக்கள் மகிழ்ந்தார்கள். மகாப்பெரியவரின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்கள். செல்வவிநாயகரைப்பற்றி மேலும் விவரங்கள் கேட்க, விநாயகர் அவர் வாக்கில் அமர்ந்தார். தானாக தன்னைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.‘‘இங்கு ஸ்வயமாய் பதினோரு விநாயகர்கள் துளிர்த்ததால் இவ்வூருக்கு ஸ்வயம்பாக்கம் என்று பெயர். ஸ்வயம்பாக்கமே சேண்பாக்கம் என மாறியது. எந்த மூர்த்திகளுமே சிற்பி அடித்துப் பண்ணியதில்லை. சிவனுக்கு ஏகாதச ருத்ரர்கள் எனும் பதினோரு மூர்த்தங்கள் கொண்ட அமைப்பு உண்டு.

அதேபோல், இங்கு ஏகாதச விநாயகர்கள் உண்டு. ஆதிசங்கரர் தரிசித்தபிறகு, அந்த விளையாட்டுப் பிள்ளை விளையாட ஆரம்பித்தார். எல்லோர் விக்னங்களையும் விலக்க தனிக்கோயிலில் குடிகொள்ள ஆவல் கொண்டார். சட்டென்று நடுவாந்தரத்தில் பூமி மட்டத்தோடு மட்டமாக இருந்த மூர்த்திகள் மூடிக்கொண்டது. மண்ணுக்கு அதிபதி என்று அழைக்கப்படும் அவர் தன்னை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டார். அது 1677 ம் வருடம்.

துக்கோஜி என்ற மராட்டிய மந்திரி அந்த வழியாக ஒரு இரவு வேளையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். டக்கென்று அச்சு முறிந்து வண்டி நின்றுவிட்டது. அச்சிறுப்பாக்கத்தில் அச்சை இருபாகமாக்கிய புராணபுருஷர் சேண்பாக்கத்திலும் அச்சை ஒடித்தார். பயந்துபோய் இறங்கிப்பார்க்க சக்கரத்தில் ரத்தக்கறை படிந்திருந்தது. துக்கோஜி இதென்ன விக்னம் என்று புரியாமல் கலங்கினான். விக்னேஸ்வரரை பிரார்த்தித்தான். எதுவுமே செய்ய முடியாத நிலையில் அங்கேயே தூங்கினான். துக்கோஜியின் கனவில் கணபதி தோன்றினார். துக்கோஜி துக்கிக்காதே. இந்த இடத்தில் என்னுடைய பதினோரு மூர்த்திகள் புதைந்து கிடக்கின்றன.

மூடிக்கிடந்ததுபோதும், எல்லோருக்கும் வரப்பிரசாதியாக பிரகாசிக்க வேண்டும் என்ற சங்கல்பத்தில்தான் நானே இப்படி பண்ணுவித்தேன். கோயில் கும்பாபிஷேகம் புரிந்து புண்ணியம் சம்பாதித்துக்கொள் என்றார். துக்கோஜி துள்ளலோடு எழுந்தார். அழகான சிறிய கோயிலை அமைத்தார்’’ என்று மாபெரும் சரித்திரத்தை அந்தச் சமயத்தில் சொல்ல சேண்பாக்கத்தின் பெருமை பார் முழுதும் பரவியது. ஊர் மக்கள் அதன் உன்னதம் புரிந்து விநாயகனின் அருட்குடையைச் சுற்றி குடியேறினார்கள்.

இக்கோயிலின் முன்பக்கம் அழகான திருக்குளமும், நிழல் தரும் மரங்கள் சூழ்ந்த எழிலான சூழலோடு விளங்குகிறது. கோபுர வாயிலிலிருந்து நேரே கருவறைக்குள் செல்ல எங்குமே பார்க்க முடியாத அரிய சுயம்பு விநாயக மூர்த்திகள் பூத்திருப்பது பார்க்க உடல் சிலிர்த்துப்போகிறது. வீட்டின் நடுவே முற்றம்போல ஓரிடத்தில் குடிகொண்டிருப்பதைக் காணக்கண்கோடி வேண்டும். பிரபஞ்ச மூலத்தின் முழுச்சக்தியும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டது போன்றிருக்கும் மகத்தான அதிர்வுகள் கொண்ட வலிமையான சந்நதி அது.

இடது ஓரத்தில் பாலவிநாயகராக பூமியிலிருந்து பொங்கிய மூர்த்தி, நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று வரிசையாக வளைந்து ஓம் வடிவத்தில் இருக்கும் அற்புதம் மனதைக் கொள்ளை கொள்ளும். விநாயகர் அருவமும், உருவமுமானவர் எனும் தத்துவத்தை கண்முன் நிறுத்தி, தத்துவங்கள் சொல்லும் ஞான மூர்த்திகள் அவை.

ஏனெனில் அங்குள்ள விநாயகர்களில் சிலவை எந்த உருவமுமற்று கோளமாய் இருக்கிறது. ஆனாலும், உற்றுப்பார்க்க விநாயகரின் திருவுருவம் நிழலாய் மறைந்திருப்பதுதான் சேண்பாக்கத்தின் சிறப்பம்சம். ஆறாவதாக உள்ள செல்வவிநாயகர் தினமும் அபிஷேகம் பெறுகிறார். செல்வவிநாயகர் மீதுதான் துக்கோஜியின் தேர்ச்சக்கரம் பதிந்த வடு காணப்படு கிறது. இத்தலத்துக்கு சிகரம் வைத்ததுபோல் கொடிமரம் கருவறையிலேயே இருப்பதும், கருவறை மேற்கூரையற்று திறந்த வெளியில் இருப்பதுவுமேயாகும்.

ஏனெனில், இன்றும் வான்வழியே தேவர்கள் கருவறைக்குள் இறங்கி இத்தல கணபதியை பூஜிப்பதால் மேல் விமானம் இல்லாது இருக்கிறது என்கிறார்கள். ஒருமுறை தரிசித்தவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் பரவசமிக்க தலம். விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, புத்தாண்டு நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். இத்தலம் வேலூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சேண்பாக்கம் செல்லுங்கள். செல்வவிநாயகரைத் தரிசித்திடுங்கள். வளம்பல பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடுங்கள்.

கிருஷ்ணா

The post பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Vinayagar ,Thane ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா