×
Saravana Stores

திமுக, காங்., தேர்தல் அறிக்கைகள் தான் இந்தியாவுக்கே கலங்கரை விளக்கம்

*வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து திக தலைவர் வீரமணி பிரச்சாரம்

கோத்தகிரி : நாட்டிலேயே திமுகவின் தேர்தல் அறிக்கையும், திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் அதனை நாங்கள் ஏற்போம் என காங்கிரஸ் அறிவித்துள்ள இரண்டே இரண்டு தேர்தல் அறிக்கைகள் தான் கலங்கரை விளக்கம் என கோத்தகிரியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மார்க்கெட் திடலில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். இதில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு, திமுக வேட்பாளர் ஆ.ராசா, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக மோடியின் 10 ஆண்டு பொய் ஆட்சி என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திமுக நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது: இந்தியாவில் 10 ஆண்டு பாஜ ஆட்சியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் புதிதாக ஒரு தொழிற்சாலையை கூட ஏற்படுத்தி தரவில்லை. அதற்கு பதிலாக இரண்டே இரண்டு தொழிற்சாலைகளை பிரதமர் மோடி நடத்துகிறார். அது ஒரு தொழிற்சாலை பொய்யை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை. அதில் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களை வைத்து சமூக வலைத்தளங்களில் பொய்யை பரப்பி வருகிறார். இந்தியாவில் எங்கு சென்றாலும் ஐந்தே ஐந்து பொய் வாக்குறுதிகளை இந்தியில் சத்தம் எழுப்பி பேசுவதே தனது பானியாக வைத்துள்ளார்.

அதுவே தனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு பொய் சொல்லி வருகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதை மோடியால் கனவில் கூட ஜீரணிக்கும் முடியவில்லை. இந்நிலையில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்திய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி இளம் தலைவர் ராகுல்காந்தி மீது கோபத்தின் உச்சத்தில் மோடி இருக்கிறார். இருவரின் குரலை கேட்டாலே அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தேர்தல் காலங்களில் மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள போதிலும் பாஜ, நாடு முழுவதும் மதத்தை வைத்து மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இதனை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.

ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்து மதசார்பற்ற ஆட்சியை நடத்தப்போவது உறுதி. ஊர்வலங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்பு யானைகளை அழைத்து வரும்போது யானைக்கு மதம் பிடித்தால் பின்னோக்கி வருபவர்களை எப்படி தாக்கும் என்பதை அனைவரும் அறிந்தது. அதேபோல மத வெறியால் அரசியல் செய்பவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என எண்ணி பாருங்கள். ஒற்றைத்தன்மை, மத வெறி பிடித்தவர்களை தேர்தலில் முறியடித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே பழக்க வழக்கம் என்று கூறி ஒற்றை தன்மை கோஷத்துக்கு முடிவு கட்டும் வகையில் நீலகிரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு, கி.வீரமணி பேசினார்.

The post திமுக, காங்., தேர்தல் அறிக்கைகள் தான் இந்தியாவுக்கே கலங்கரை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,India ,DK ,President ,Veeramani ,A.Rasa Kothagiri ,
× RELATED உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு