அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா மாநிலம் முழுவதும் வாக்கு சேகரித்து வருகிறார். இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதிக்கு வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு வாக்கு சேகரித்தார். வேலூரில் இஸ்லாமியர்களும், அடித்தட்டு மக்களும் பெருமளவு வாழும் சார்பனாமேடு பகுதியில் அவர் வாக்கு சேகரித்தார். முதலில் மாலை 6.30 மணிக்கு வாக்கு சேகரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அங்கு கூட்டம் மட்டும் சேரவில்லை. அதனால் ‘இப்போ வருவார், இதோ வருகிறார்’ என்று அதிமுகவினர் மைக்கில் அறிவித்தபடி இருந்தனர். சுமார் 1 மணி நேரம் கடந்தும் கூட்டம் சேரவில்லை. இந்த நிலையில் அங்கிருந்த தொண்டர் ஒருவர் அதிமுக கொடி கட்டப்பட்ட கழிகளை அங்கு வந்திருந்த ஓரிருவர் கைகளில் திணிக்க முயன்றார். ஆனால் யாரும் கொடிகளை வாங்காததால் அவரே கொடிகளை கைகளில் தாங்கி நின்றார்.
என்னடா, இது கொடி பிடிக்கக்கூட ஆளில்லாத கட்சியாகிவிட்டதே அதிமுக என்று அங்கு நின்றிருந்த பொதுஜனம் கமென்ட் அடித்ததுதான் வேடிக்கை. அதைவிட வேடிக்கை, அங்கு நின்றிருந்த அதிமுக கீழ்நிலை நிர்வாகிகள், பணமே தராமல் எப்படி ஜனங்களை அழைத்து வருவது என்று தங்களுக்குள் அங்கலாய்த்துக் கொண்டதுதான். ஒரு வழியாக 1 மணி நேரம் கழித்து வந்த விந்தியா 40 நிமிடங்கள் தனது வழக்கமான பாணியில் பேசிவிட்டு கிளம்பினார்.
ரம்ஜான் தொழுகை நடத்தவிடாமல் மோடியின் கூட்டம் போடுவதா?
வேலூரில் நடிகை விந்தியா பேசுகையில், ‘இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் இது. அதாவது இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க நடக்கும் போராட்டம்தான் இந்த தேர்தல். பிரிட்டிஷ்காரன் மதத்தால் மக்களை பிரித்ததுபோல, இப்போது பாஜ மக்களை பிரித்து அரசியல் செய்கிறது. கோட்டை மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையின்போது கூட்டுத்தொழுகை இந்த ஆண்டு நடத்தாதவாறு, மோடியின் பிரசாரக்கூட்டத்தை 10ம் தேதி அன்று அக்கட்சி நடத்துவது சரியா? வேலூரில் வேறு இடம் இல்லையா?’ என்று பேசினார்.
The post கொடி பிடிக்க கூட ஆளில்லையே… appeared first on Dinakaran.