×

பெண்கள் தினமும் விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளலாமா?

குபேரர் சிலையை வீட்டில் எங்கு வைக்கலாம்? எந்த திசையில் வைக்கலாம்? வியாபாரம் செய்யும் இடத்தில் எந்தவிதமான குபேரர் சிலையை வைக்க வேண்டும்?
– இரா.வைரமுத்து, ராயபுரம்.

ஹேப்பிமேன் என்றழைக்கப்படும் சீனத்து பொம்மையினை குபேரர் சிலை என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். குபேரனுக்கு என்று தனியாக சிலை வழிபாடு வீட்டில் செய்வது கிடையாது. சங்கநிதிபதுமநிதி சமேத குபேரனுக்கு மகாலட்சுமியிடமிருந்து தனம் கொட்டுகிற வகையில் நிறைய படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தப் படங்களில் லட்சுமி குபேர மந்திரமும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒருசில படங்களில் மகாலட்சுமி யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற படங்களை வியாபாரத் தலங்களில் மாட்டி வைக்கலாம். வீட்டுப் பூஜையறையிலும் வைத்தும் பூஜிக்கலாம். மற்றபடி சிரித்தமுகத்துடன் காணப்படும் ஹேப்பிமேன் பொம்மையினை நீங்கள் வீட்டினில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதனைக் காணும்போது மனதில் மகிழ்ச்சி உண்டாவதால், வீட்டிற்குள் இருக்கும் மாடங்களில் ஆங்காங்கே அவற்றை இடம்பெறச் செய்யலாம். குபேரனுக்கு என்று தனியாக சிலை வைத்து வீட்டினில் வழிபடும் முறை நம் வழக்கத்தில் இல்லை.

ராசிபலன்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாறுபடுமா? இருவருக்கும் ஒன்றுதானா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ராசிபலன்கள், ஆண் – பெண் என இருபாலாருக்கும் ஒன்றே. கிரஹங்களின் செயல்கள் ஆணுக்கு ஒன்றாகவும், பெண்ணுக்கு வேறுமாதிரியாகவும் அமைவதில்லை. ஜாதகத்தில் உள்ள பன்னிரண்டு பாவங்களும் அவ்வாறே பலன் அளிக்கின்றன. ஆண், பெண்ணுக்குரிய கடமைகளுக்கு ஏற்றவாறு ஒருசில விஷயங்களில் லேசான மாற்றம் இருக்கலாமே தவிர, ஆண்களுக்குத் தனியாகவும், பெண்ணிற்குத் தனியாகவும் ராசிபலன்கள் அமைவதில்லை.

அனைத்து தரப்பினரும் நோய் நொடியின்றி வாழ கடைப் பிடிக்க வேண்டிய இறை வழிபாட்டை கூறுங்கள்.
– எஸ்.எஸ்.புலவன், மயிலாடுதுறை

தினசரி சிவ தரிசனம் செய்யுங்கள். ஆரோக்யத்தோடு சேர்த்து அனைத்து குடும்ப நலன்களையும் இதுவே கொடுத்துவிடும். யோக பாஷ்யம் என்கிற நூலில், ‘‘ப்ரணிதானம் ஸர்வக்ரியானாம் பலதாயகம்’’ என்று கூறப்பட்டுள்ளது. சிவாலய வழிபாடு குடும்பஸ்தர்கள், நோய் நொடியின்றி வாழ வழி வகுக்கும். ‘‘ஹாலாஸ்ய பதே!! ஹாலாஸ்ய பதே’’ என்று உள்ளம் உருக ஈசனைக் குறித்து சொல்லுங்கள். அனைவருமே குறைகள் எதுவுமின்றி வாழலாம்.

அருளை அள்ளி வழங்கும் ஆலயங்கள் பல இருக்கும் போது, சில கோயில்களை மட்டும் ‘பரிகாரக் கோயில்கள்’ என்று கூறுவது ஏன்?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

சூரியன் முதலான நவக்கிரகங்கள், நட்சத்திரத் தேவதைகள், முனிவர்கள், தேவர்கள், தேவதைகள் என்போர் எல்லாம் வந்து, திருத்தலங்களில் வழிபாடுசெய்து, தங்கள் துயர் நீங்கப் பெற்றார்கள். சூரியன் முதலான அவர்கள் துயர் தீர்த்த திருத்தலங்கள் ‘பரிகாரத் தலங்கள்’ எனப்படுகின்றன.

பெண்கள் தினமும் விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளலாமா?
– ஏ.வெங்கட்ராமன், மயிலாடுதுறை.

‘சாம்பலாக போகப்போகிற நெற்றிக்கும், கைகளுக்கும் சிவனின் சாம்பலை பூசிக் கொள்வது’ என்பதே, நம்மை சிவத்தோடு இணைத்துக் கொள்ளும் தாத்பர்யம்தான். பெண்கள், குங்குமம் இட்டுக் கொண்டபின், தண்ணீர் விட்டுக் குழைக்காமல், சின்ன கோடாக நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

The post பெண்கள் தினமும் விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளலாமா? appeared first on Dinakaran.

Tags : Kubera ,R. Vairamuthu ,Rayapuram ,Happyman ,Kubera.… ,Vibhuthi ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...