1. பேச்சு சுதந்திரம் மீண்டும் அளிக்கப்படும், ஊடக சுதந்திரம் அளிக்கப்படும், அவதூறு குற்ற வழக்குகள் சட்டப்படி விரைவில் தீர்க்கப்படும். இணையதள இடையூறு நிறுத்தப்படும். தனியுரிமையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் திருத்தப்படும்.
2. இந்தியாவில் எந்த பகுதியில் வசித்தாலும் உணவு,உடை, காதல்,திருமணம், பயணம் உள்ளிட்ட தனிப்பட்ட விருப்பங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்படும்.
3. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு வருடத்தில் 100 நாட்கள் கூடும் மரபு மீண்டும் தொடரும்.
4. மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ யோசனை நிராகரிக்கப்படும்.
5. வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்திறனை, வாக்குசீட்டு முறையில் ஒருங்கிணைத்து வெளிப்படைத்தன்மை அமல்படுத்தப்படும். மின்னணு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்த பின்னர் ஒப்புகை சீட்டு பெற்ற வாக்காளர் அதை விவிபேட் மூலம் சேகரிக்கலாம். ஓட்டு எண்ணிக்கையின் போது விவிபேட் வாக்கும் சரிபார்க்கப்படும்.
6. இந்திய தேர்தல் ஆணையம், மத்திய தகவல் ஆணையம், மனித உரிமை ஆணையம், ஆடிட்டர் ஜெனரல் உள்ளிட்ட அரசியலமைப்பு அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
கட்சி மாறும் எம்பி, எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்படும்
1. ஒரு கட்சியில் தேர்வு செய்யப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் கட்சி மாறினால் தானாக பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும்வகையில் அரசியலமைப்பு பத்தாவது அட்டவணையில் திருத்தம் செய்யப்படும்.
2. திட்டக் கமிஷன் மீண்டும் கொண்டுவரப்படும்.
3. புலனாய்வு அமைப்பு விசாரணைகள் சட்டப்படி நடக்கும். மேலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை மேற்பார்வையில் நடக்கும்.
4. தன்னிச்சையான, கண்மூடித்தனமான சோதனைகள், பறிமுதல் நடவடிக்கைகள், கைதுகள், காவல் மரணங்கள் நிறுத்தப்படும்.
5. அனைத்து குற்றவியல் சட்டங்களிலும் ‘ஜாமீன் விதி, சிறை விதிவிலக்கு’ என்ற கொள்கையை உள்ளடக்கிய ஜாமீன் தொடர்பான சட்டம் இயற்றப்படும்.
6. மோடி அரசு 10 ஆண்டுகளில் கொண்டு வந்த பாதிப்பு நிறைந்த சட்டங்கள் அகற்றப்படும்.
தேர்தல் பத்திர ஊழல், பிஎம் கேர் ஊழல் விசாரிக்கப்படும்
தேர்தல் பத்திர ஊழல், பொது சொத்துக்கள் விற்பனை, பிஎம் கேர் ஊழல், உளவுத்துறை தோல்விகள், முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அனைத்தும் உரிய முறையில் உயர் மட்ட அளவில் விசாரிக்கப்படும். பணமதிப்பு நீக்கம், ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளிட்டவை விசாரிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ அரசால் முக்கிய வழக்குகளில்சிக்கிய குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
எந்த சூழ்நிலையில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரிக்கப்படும். மோசடி செய்பவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். பாஜ ஒரு மாபெரும் வாஷிங் மிஷினாக மாறிவிட்டது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜவில் இணைந்தவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். அத்தகைய நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரிக்கப்படும்.
தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படும்
நீதித்துறையின் சுதந்திரத்தை காப்பாற்ற உச்ச நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில் தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படும். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதன் மூலம் நியமிக்கப்படுவார்கள். உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்து காலியிடங்களும் மூன்று ஆண்டுகளுக்குள் நிரப்பப்படும். அரசியலமைப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் ஏழு மூத்த நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்கும். சட்ட முக்கியத்துவம் அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற வழக்குகளில் தலா மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்களில் அமர்ந்து மேல்முறையீடு செய்ய வேண்டும். நீதிமன்றத்தை நவீனமயமாக்க நிதி ஒதுக்கப்படும்.நீதித்துறையில் தவறான நடத்தை பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.
நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் மறுஆய்வு
காலாவதியான ரயில்வே உள்கட்டமைப்பு நவீனமயமாக்கப்படும். ஏழைகள், நடுத்தர மக்களுக்கு உரிய ரயில்சேவை வழங்கப்படும். கவாச் சாதனம் அனைத்து வழித்தடங்களிலும் அமைக்கப்படும். போக்குவரத்து வசதிகள் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையே இணைக்கப்படும். நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கட்டணம் ஆய்வு செய்யப்படும். அதற்கான காலம்நிர்ணயம் செய்து, கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
மேயர், நகராட்சி தலைவர்களுக்கு அதிக அதிகாரம்
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் பா.ஜ அரசால் திட்டமிட்டு அகற்றப்பட்டது. மாநில அரசுதான் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. எனவே மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி தத்துவம் மீண்டும் உறுதி செய்யப்படும். விரைவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்/தலைவருக்கு அதிக நிர்வாக, நிதி அதிகாரங்களை வழங்குவதற்கான சட்டங்கள் கொண்டுவரப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் நிதிக்கு அவர்கள் உரிய கணக்கு காட்ட வேண்டும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; ஜம்முவுக்கு மீண்டும் மாநில அங்கீகாரம்
ஜம்முவிற்கு முழு மாநில அந்தஸ்தை உடனடியாக வழங்கப்படும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். டெல்லி பிரதேச சட்டத்தை திருத்தி அனைத்து விஷயங்களிலும் டெல்லி அமைச்சர் குழு ஆலோசனை அடிப்படையில் கவர்னர் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவோம்.
மணிப்பூர் ஆட்சி அகற்றப்படும்
தற்போதை பா.ஜ அரசின் புறக்கணிப்பால் மணிப்பூரில் நிலைமை மோசமடைந்தது. அங்குள்ள தற்போதைய அரசை அகற்றிவிட்டு, உடனே ஒரு நல்லிணக்க குழு அமைக்கப்படும். அனைத்து மக்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் அரசியல் மற்றும் நிர்வாக தீர்வை ஏற்படுத்த ஆணைக்குழு அமைத்து உரிய இழப்பீடு வழங்கப்படும்.
போதைப்ெபாருள் கடத்தல் தடுக்கப்படும்
வெறுப்புப் பேச்சுகள், வெறுப்பு குற்றங்கள் மற்றும் வகுப்புவாத மோதல்கள் அடக்கப்படும். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நிறுத்தப்படும். கடத்தலுக்கு துறைமுகங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதை ஒழுங்குமுறை ஆணையம் கண்காணிக்கும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய ஆயுத போலீஸ் படை மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்படும்.
The post உணவு, உடை, காதல், திருமணம் எதற்கும் தடை இல்லை; ஒரே நாடு, ஒரே தேர்தல் இல்லை.! தேர்தலில் விவிபேட் வாக்குகள் எண்ணப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி appeared first on Dinakaran.