×

வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்

பெரிய அளவில் நகை வியாபாரம் செய்பவர்களுக்கும், நகைத் தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கும், நகைத் தொழில் செய்பவர்களுக்கும் வியாழன் வலிமையாக இருந்தால்தான் தொழில் சிறப்புறும். இதில், பலரும் தங்கம் தொடர்பான தொழில் செய்து நஷ்டத்தை அடைந்துகொண்டே இருப்பார்கள். கிரகங்கள் ஒருவருக்கு வருமானத்தை தரக்கூடிய விஷயத்தை தீர்மானிக்கின்றன என்பதுதான் உண்மை. யார்? என்ன தொழிலை செய்வதென்பதை, இயற்கைதான் முடிவு செய்கிறது. அந்த இயற்கை என்னும் அறிவியல்தான் ஜோதிடம்.

சண்டாள யோகம் என்பது என்ன?

வியாழனுடன் சனி தொடர்பு ஒருவருடைய ஜாதகத்தில் உண்டெனில், அவர்களுக்கு தங்கம் நன்மை செய்யாது என்பதை ஜோதிடம் சொல்கிறது. இதற்கு, குரு சண்டாள யோகம் என்றும் சொல்வர். வியாழன் மஞ்சள் நிற ஆற்றலை நமக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சனி நீலநிற ஆற்றலை உற்பத்தி செய்து கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நீல நிறமான ஆற்றலானது, மஞ்சள் நிற ஆற்றலை விழுங்கி இல்லாது செய்துவிடும் அமைப்பை தருகிறது. இந்த மஞ்சள் நிற ஆற்றல்தான் புத்திர சந்தானத்தை அளிக்கக்கூடிய எனர்ஜியை இயற்கை நமக்கு அளிக்கிறது என்பதுதான் அறிவியல் உண்மை.

நகை தொடர்பான தொழிலும் உத்யோகமும்

தங்கம் தொடர்பான தொழிலை ஒருவர் செய்ய வேண்டுமெனில், அவருக்கு வியாழன் (குரு) கிரகம் அவருடைய பிறப்பு ஜாதகத்தில் பாக்கியாதிபதியாக (9ல்) இருந்து அந்த கிரகம் சுபத்தன்மையுடன் இருக்க வேண்டும். அதாவது சனி, ராகு மற்றும் கேது கிரகங்கள் பார்வை தொடர்பு இல்லாமலும் சனி, ராகு போன்ற கிரகங்களின் சேர்க்கை இல்லாமலும் இருந்தால்தான் வியாழன் என்ற பொன் நன்மை செய்யும். வியாழன் – சனி இணைந்து இவற்றிற்கு முன்னால் சந்திரன் உண்டெனில் தங்கத்தை விற்கும் அல்லது வாங்கும் தொழில்கள் அமையும். இவர்கள், தங்கத்திலான ஆபரணங்களை அணியக்கூடாது. ஆனால், தொழில் சிறப்பாக இருக்கும். அதாவது, அடகுக்கடை வைக்கலாம். எச்சரிக்கை தேவை ஏனெனில் களவு பொருட்களை வாங்கி சிக்கலைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

வியாழன் சனி இணைவதால் என்ன பலன்?

இந்த அமைப்புடைய ஜாதகருக்கு இறை நம்பிக்கைகூட நூற்றுக்கு ஐம்பது சதவீதம் மட்டுமே உண்டு. இவர்கள் தங்களுடைய தேவைகளுக்காக மட்டுமே இறை வழிபாட்டை மேற்கொள்ளும் அமைப்பை இயற்கை அளிக்கிறது. அதை புரிந்து கொள்ளும் காலம் என்பது அவர்களுடைய சொந்த அனுபவமாக இருக்கும்.

*திருமணம் நடைபெறும் அமைப்பும்கூட இவர்களுக்கு வரதட்சணை இன்றிதான் நடைபெறும். அதையும் தாண்டி அவர்களுக்கு மனைவியின் வீட்டில் இருந்து அன்பளிப்பாக தங்க நகைகள் வருமாயின், இவர்கள் அதை அனுபவிக்கும் பாக்கியம் இருக்காது. ஒன்று நகையினால் பிரச்னை வரும் அல்லது நகையினை அடகு வைத்துவிடுவர். வேறு ஏதேனும் வகையில் இவர்கள் நகையினை பறிகொடுத்துவிடும் அமைப்பினை ஏற்படுத்தும். இல்லாவிடில், நகையினை அடகு வைத்து, அதற்கான ரசீதை வீடு முழுவதும் தேடிக் கொண்டே இருப்பர் என்பது இயற்கை செய்து கொண்டே இருக்கிறது. அதையும் மீறி இந்த அமைப்பை உடையவர்கள், நகை தொடர்பான வியாபாரமோ அல்லது நகை தொடர்பான தொழில்கள் செய்யும் பட்சத்தில், புத்திர தோஷத்தையோ அல்லது கடனையோ அல்லது ஏமாற்றத்தையோ ஏற்படுத்தும்.

*வியாழனுக்கு புத்திரக் காரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவருக்கு ஐந்தாம் அதிபதியும், வியாழனும் நல்ல அமைப்பில் இருந்தால், நல்ல புத்திர சந்தானங்களை பெறும் அமைப்புண்டு. வியாழனுடன் அசுப கிரகங்கள் இருப்பின், இவரின் வாரிசுகள் தொடர் துன்பங்களை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கும் அமைப்ைப இயற்கை கொடுக்கிறது. சிலருக்கு வாரிசுகள் இல்லாது சென்றுவிடும்.

*வியாழனுடன் சனி இணைந்த ஜாதகரின் குழந்தைகள், எப்பொழுதும் அதிக சேட்டைகள் செய்து கொண்டே இருப்பர். ஜாதகருக்கு குழந்தைகளால் பாதிப்புகள் உண்டாகும் என்பது அனுபவத்தில் அறிந்துகொள்ளலாம்.

*வியாழன் (குரு) – சனி தோஷம் உள்ளவர்களுக்கு தங்களின் சுயஆவணங்கள் மற்றும் இட ஆவணங்களில் குறைபாடு வந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பெயரில் எழுத்துப்பிழை மற்றும் முகவரியில் பிழை அல்லது முன்னோர்களின் இன்ஸியலை தவறாக எழுதுவது போன்றவைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இடம் வாங்கி பதிவு செய்யும் போது, அதிலும் எழுத்துப்பிழை போன்றவைகள் தொடரும். இவர்கள் ஆவணங்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பார்த்து செய்தால், பிழை குறைக்கப்படலாம்.

இப்படிப்பட்ட அமைப்புகளுக்கு பரிகாரங்கள் செய்தால் சில பாதிப்புகளை குறைக்கலாம்.

வியாழன் – சனி இணைவதால் உண்டாகும் நற்பலன்

இவர்கள் பொதுவுடைமைவாதிகளாக இருப்பர். அதாவது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எப்பொழுதும் கொண்டிருப்பர். அதனை பொதுவெளியிலும், சமூகத்தில் அப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாக்கும்.

பரிகாரம்:

*மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சென்று வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் வழிபாடு செய்து நிவேதனம் படைத்து, அதனை அங்குள்ளவர்களுக்கு தானம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும்.

*வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் நவக்கிரகங்களில் வியாழனுக்கும் சனிக்கும் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் சில மாற்றங்களும் தீர்வுகளும் உண்டு.

தாந்தீரிக பரிகாரம்

வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும். இது போன்ற கோயில்களையோ அல்லது நவகிரகங்களையோ தேட முடியாது.

*மஞ்சள் நிற வஸ்திரத்தை வாங்கி குழந்தைகளுக்கு வியாழன் மற்றும் சனிக் கிழமை தோறும் தானம் செய்வது சாலச்சிறந்தது. இரும்பு மற்றும் தங்கத்திலான பொருட்களை பெரிய கோயில்களுக்கு தானம் செய்யுங்கள் உங்கள் தோஷம் குறைந்து நல்வழி உண்டாகும்.

*குருவிற்குரிய மஞ்சள்நிற நூற்கண்டு சனிக்குரிய நீலநிற நூற்கண்டை வாங்கி தானம் செய்வதும் சிறந்த நற்பலன்களை அளிக்கும்.

*சனிக்கிழமை அன்று வியாழ ஹோரையில் யானைக்கு கரும்பு வாங்கி தானம் செய்யலாம்.

*ஊனமுற்ற நடக்க முடியாதவர்களுக்கு உணவு தானம் செய்வதும் சிறந்ததாகும்.

*மந்திரம் சொல்லக்கூடியவர்களுக்கும் மந்திர உபதேசம் செய்பவர்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் சனிக்கிழமை அன்று வஸ்திர தானம் செய்து ஆசீர்வாதம் பெறுவது சிறந்ததாகும்.

தொகுப்பு: சிவகணேசன்

The post வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம் appeared first on Dinakaran.

Tags : Jupiter ,
× RELATED குபேரன் அனுக்கிரகத்தை பெறுவதற்கான வழிபாடு முறை!!