ஸ்ரீவாரி அருங்காட்சியகம்
திருமலையில் அவசியம் பார்க்க வேண்டிய இன்னொரு இடம், ஸ்ரீவாரி அருங்காட்சியகம். 1.25 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த அருங்காட்சியகத்தில் வைணவ சமயம் மட்டுமல்லாது, திருமலை மரபுகள் மற்றும் இந்துசமயம் பற்றி அறிய வேண்டிய பல விஷயங்கள் கண்ணையும் கருத்தையும் கவரும் களஞ்சியமாக உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தொல்லியல் முதல் சமகால பொருட்கள் வரை 6000-க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. வராஹஸ்வாமி செப்பு கல்வெட்டு, அன்ன மய்யாவின் அசல் செப்புத் தகடுகள் போன்ற மதிப்புமிக்க பழங்கால பொருட்களும் இங்கு காட்சிக்காக அமைந்திருக்கிறது. காஞ்சியின் பல்லவர்கள், மதுரை பாண்டியர்கள், ஹம்பியின் விஜயநகரம் போன்றவை அருங்காட்சியகத்தின் பல காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இருநூறு வகையான பூக்கள்
திருமலையில் பூக்கும் பூக்கள் எல்லாம் எம்பெருமானுக்கே. அங்கே யாரும் தலையில் பூ சூடிக்கொள்வதில்லை. அழகான பூக்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசும் திருமலையில் நாம் பார்க்க வேண்டிய இடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தோட்டம். கோயிலின் பிரதான கட்டிடத்தை ஒட்டியுள்ள 460 ஏக்கர் பரப்பளவில் இந்த தோட்டம் அமைந்துள்ளது. தோட்டத்தில் பூக்கும் 200 வகையான பூக்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த தோட்டத்தில் பல குளங்களும் உள்ளன. இந்த தோட்டத்திலிருந்து வரும் பூக்கள் ஒவ்வொரு நாளும் பெருமாளையும் கோயிலையும் அலங்கரிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாளிற்கு 500 கிலோவிற்கு மேல் அழகான பூக்கள் பூக்கக்கூடிய அற்புதமான தோட்டம் இது.
வருடம் 450 திருவிழாக்கள்
வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் நடைபெறும் திருமலை திருப்பதி திருத்தலத்துக்கு இணையான வேறு தலம் இல்லை; திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை. `வேங்கடேத்ரி சமஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன வேங்கடேஸ சமோதேவோ ந பூதோந பவிஷ்யதி’ என்பது ஸ்லோகம். `பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பிக்கப்படும் திருமலையை சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் தொகுப்பாகச் சொல்லி, பெருமாளுக்கு `ஏழுமலையான்’ என்றொரு திருநாமம் சூட்டி மகிழ்கிறோம்.
பச்சைக் கற்பூரம்
ஏழுமலையானின் திருமேனிக்கு வருடத்தில் 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் சாற்றுகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது அல்லவா. பொதுவாக, சாதாரண கற்களில் இதைத் தடவி வந்தால், காலப் போக்கில் அந்தக் கல்லில் வெடிப்பு விழும். ஆனால், ஏழு மலையானின் திருமேனிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை!
தொகுப்பு: ராதாகிருஷ்ணன்
The post ஸ்ரீவாரி அருங்காட்சியகம் appeared first on Dinakaran.