×

கோடம்பாக்கத்தில் வீட்டின் முன் விளையாடிய 3 வயது சிறுவனை நாய் கடித்தது ஆபத்தான நிலையில் சிகிச்சை: உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

சென்னை: கோடம்பாக்கத்தில் வீட்டின் முன்பு விளையாடிய 3 வயது சிறுவனை பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்தது. இதில் சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கோடம்பாக்கம் காமராஜர் காலனி 7வது தெருவை சேர்ந்தவர் நிஜந்தன் (34). இவரது மகன் தீரன் தேஜஷ் (3), கடந்த 2ம் தேதி இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பு என்பவரின் வளர்ப்பு நாய், திடீரென சிறுவன் தீரன் தேஜஷ் மீது பாய்ந்து முதுகு, கால், மற்றும் இடுப்பில் கடித்து குதறியது. இதில் சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறினான்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, நாயை விரட்டி, சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால் நாய் வெகு நேரம் விடாமல் சிறுவனை கடித்தது. ஒரு கட்டத்தில் நாயை அடித்து விரட்டி, சிறுவனை மீட்டனர்.
ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனை உடனே கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயம் அதிகமாக இருந்ததால் டாக்டர்கள் பரிந்துரைப்படி சிறுவன் தீரன்தேஜஷை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதித்தனர். அங்கு சிறுவன் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, நாய் உரிமையாளர் அன்பு மீது, சிறுவனின் தந்தை நிஜந்தன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
மதுரவாயல் விசுவாசம் நகரை சேர்ந்த வச்சலா மேரி (78), நேற்று முன்தினம் தனது கைப்பையை தவறவிட்டது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது, காவல் நிலைய வளாகத்தில் சுற்றித்திருந்த வெறிநாய் ஒன்று திடீரென வச்சலா மேரியை கடித்து குதறியது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெறிநாய்களை பிடிக்க வேண்டும், என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாநகராட்சி 10வது மண்டல சுகாதார அலுவலர் உஷா தலைமையில் பணியாளர்கள், கோயம்பேடு காவல் நிலையத்தில் சுற்றிதிரிந்த வெறிநாய்களை நேற்று பிடித்து சென்றனர்.

The post கோடம்பாக்கத்தில் வீட்டின் முன் விளையாடிய 3 வயது சிறுவனை நாய் கடித்தது ஆபத்தான நிலையில் சிகிச்சை: உரிமையாளரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodambakkam ,CHENNAI ,Nijandan ,7th Street, Kamaraj Colony, Kodambakkam ,Theeran ,
× RELATED சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி