×
Saravana Stores

நுளம்பர் பாணி நுணுக்கத்தூண்கள்

ஆலயம்: ஐயாறப்பர் கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.
காலம்: கோயிலின் இருப்பு ஆரம்பகால சோழர் காலத்திலிருந்தே அறியப்படுகிறது. சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர வம்சங்களின் பல்வேறு மன்னர்கள் இந்த கோயிலை பல சிற்றாலயங்கள், மண்டபங்கள் மற்றும் பிரகாரங்களுடன் மிகப்பெரியதாக மாற்றிட வழங்கிய மதிப்புமிக்க பங்களிப்புகள் பற்றி பல கல்வெட்டு செய்திகள்
கூறுகின்றன.

ஏறத்தாழ 15 ஏக்கரில் ஐந்து திருச்சுற்றுக்களுடன், காவிரி வடகரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் வளாகம், தஞ்சை பெரிய கோயிலை விட 3 மடங்கு பரப்பளவில் பெரியது. இத்திருக்கோயிலுள் ஐயாரப்பர் எழுந்தருளியுள்ள காவிரிக்கோட்டம், தெற்கு திசையில் ‘தட்சிண கைலாசம்’ எனும் தென் கயிலைக்கோயில், வடக்கு திசையில் ‘உத்தர கைலாசம்’ எனும் வட கைலாயம் ஆகிய மூன்று பெருங்கோயில்கள் உள்ளன. `லோகமாதேவீச்சரம்’ என்றழைக்கப் படும் வட கைலாயம், 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேரரசர் ராஜராஜ சோழனின் பட்டத்தரசியார் ‘தண்டிசக்திவிடங்கி’ என்ற லோகமஹாதேவியால் கட்டப்பட்டது. அவரது புதல்வர் முதலாம் இராஜேந்திர சோழனின்(பொ.யு.1014-1044 ) பட்டத்தரசியான பஞ்சவன் மாதேவியால் ‘தட்சிண கைலாசம்’ எனும் தென் கைலாயம், தனது கணவர் நுளம்ப நாடு (இன்றையஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், கர்நாடகாவில் உள்ள கோலார் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி) மீது பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வண்ணம் அமைக்கப்பட்டது. இன்றைய நவீன லேத் இயந்திர தொழில்நுட்பம் கொண்டு கடைந்தெடுத்து அமைத்திருப்பார்களோ என வியக்கும் வண்ணம் 46 கலைத் தூண்களைக் கொண்ட பிரகாரம் ஒவ்வொரு கலை ஆர்வலரின் கண்களுக்கும் விருந்தாக உள்ளது.

நுளம்பர் பாணியில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பேரழகுத்தூண்கள், இராஜேந்திர சோழனால் போர்வெற்றியின் அடையாள சின்னமாக நுளம்ப நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் அல்லது இங்கே தருவிக்கப்பட்ட நுளம்ப சிற்பிகளால் அமைக்கப்பட்டிருக்கலாம் என இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கருவறையின் வெளிப்புற தேவ கோஷ்டங்களை சிவன், பிரம்மா, முருகன், பிள்ளையார், துர்க்கை ஆகியோர் அலங்கரிக்கின்றனர். ஐயாறப்பர் ஆலய இறைவரின் திருப்பெயர் ஐயாறப்பர் – வட மொழியில் பஞ்சநதீசுவரர்.`ஐ-ஆறு’ – ஐயாறு, அதாவது வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டியாறு மற்றும் காவேரியாறு என ஐந்து ஆறுகளின் நீர் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதால் `ஐயாறப்பர்’ என அழைக்கப்படுகிறார். இறைவியின் திருப்பெயர் அறம் வளர்த்த நாயகி. வடமொழியில் தர்ம சம்வர்த்தினி. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மாணிக்கவாசகர் என சமயகுரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற பெருமை வாய்ந்த இத்தலத்தில் அப்பர் கயிலையைக் கண்டு தரிசித்தார்.சுந்தரரும் சேரமான் நாயனாரும் இத்தலத்தை தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது கண்டு, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று அவர்கள் செல்ல வழி தந்ததும் இப்புனிதத் தலத்தில் தான். திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லக்கு களில்.அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கும் `சப்தஸ்தான திருவிழா’ மற்றொரு சிறப்பு.

The post நுளம்பர் பாணி நுணுக்கத்தூண்கள் appeared first on Dinakaran.

Tags : Iyarapar Temple ,Tiruvaiyaru, ,Thanjavur District, Tamil Nadu ,Chola ,Pandya ,Vijayanagara dynasties ,
× RELATED திருவையாறு, திருப்பந்துருத்தி,...