×

இறைவன் விட்ட வழி என்று வாழ்க்கையில் இருக்க முடியுமா?

குமரேசன், வடபழனி, சென்னை

பதில்: நாம் சற்று உணர்ந்து நோக்கினால் நம்முடைய பாதை, நாம் செய்யும் செயல்கள், அதன் அடிப்படையாக வரும் விளைவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த பக்குவம் வந்துவிட்டால் இறைவன் விட்ட வழி என்று இருந்துவிட முடியும். வேடிக்கையான ஒரு கதை உண்டு.ஒரு முறை, 20 பேர் கங்கையைப் படகில் கடந்துகொண்டிருந்தார்கள், அதில் ஒரு ஞானி இருந்தார். திடீரென்று மிகப் பெரிய காற்று அடித்தது. படகு கவிழ்ந்துவிடும் போல் தோன்ற, படகுக்காரன் சொன்னான்; ‘‘எல்லோரும் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் படகு மூழ்கி விடக்கூடும்.’’

உடனே எல்லோரும் கடவுளை வேண்டிக் கொண்டனர். ஆனால், ஞானி மட்டும் தன்னுடைய கையில் உள்ள கமண்டலத்தினால் கங்கை நீரை எடுத்து படகுக்குள் விட்டுக் கொண்டிருந்தார்.
இதைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.‘‘நீங்கள் என்ன பைத்தியமா? படகு மூழ்கிவிடும் போலிருக்கிறது. நீங்கள் வேறு தண்ணீரை படகில் ஊற்றிக்கொண்டிருக்கிறீர்களே’’. ஆனால், ஞானி அவர்கள் கோபத்தை காதில் வாங்கிக் கொள்ளாமல் மறுபடியும் கங்கைநீரை எடுத்து படகில் விட்டார்.

“சரியான பைத்தியம்” என்று நினைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, காற்று நின்றது. படகோட்டி சொன்னான்.‘‘ம்.. இனி நமக்கு அபாயம் இல்லை.’’ உடனே எல்லோரும் தங்கள் பிரார்த்தனை பலித்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஞானி இப்பொழுது படகில் விட்ட தண்ணீரை தன்னுடைய கமண்டலத்தினால் எடுத்து கங்கையில் விட்டுக்கொண்டிருந்தார்.‘‘பைத்தியம் என்பது சரியாகத்தான் இருக்கிறது.’’ என்று மற்றவர்கள் திட்டிக் கொண்டே இருந்தனர்.

அதற்குள் கரை வந்தது. எல்லோரும் பாதுகாப்பாக இறங்கிக்கொண்டனர். ஞானியும் கடைசியாக இறங்கினார். அப்பொழுது படகுக்காரன் ஒரு கேள்வியைக் கேட்டான். ‘‘சுவாமி, உங்களை எல்லோரும் பைத்தியம் என்று சொன்னார்கள். நீங்கள் செய்த காரியம் அப்படித்தான் இருந்தது. படகு மூழ்குவது போல் இருக்கும் நேரத்தில் நீங்கள் கங்கைத் தண்ணீரை எடுத்து படகில் விடுகிறீர்கள். ஆபத்து இல்லை என்று சொன்னவுடன் ஏற்கனவே விட்ட தண்ணீரை எடுத்து வெளியேவிடுகிறீர்கள். இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?’’
அப்பொழுது ஞானி சொன்னாராம்;

‘‘அப்பா, நீ கேட்பது சரிதான். நான் எப்பொழுதும் கடவுளின் கட்டளையை அனுசரித்து வாழ்பவன்.” இப்பொழுது படகுக்காரன் கேட்டான். ‘‘கடவுள் என்ன கட்டளையிட்டார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்களிடம் வந்து சொன்னாரா?’’ ‘‘அவர் சொல்லமாட்டார். நாம்தான் யூகிக்க வேண்டும். படகு கவிழ்ந்துவிடும் போலிருக்கிறது. நாமெல்லாம் கங்கையில் மூழ்கிவிடுவோம்’’ என்று நீ சொன்னாய் அல்லவா. அப்பொழுது இதுதான் இறைவன் திருவுள்ளம் போல் இருக்கிறது. அவருடைய திருவுள்ளத்துக்கு எதிராக நாம் ஏன் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அந்த செயலை விரைவுப் படுத்துவதற்காக கங்கை நீரை எடுத்து படகிலே விட்டேன்.

‘‘அது சரி. அப்புறம் திடீரென்று மறு படியும் படகிலிருந்து தண்ணீரை எடுத்து ஆற்றில் விட்டீர்களே?’’ ஞானி சிரித்தார்.‘‘நண்பனே… நீ படகு மூழ்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னவுடனே படகை மூழ்கடித்துவிடுவதுதான் கடவுள் திருவுள்ளம் போல் இருக்கிறது என்று நினைத்தேன். அதற்கு உதவினேன். பிறகு நீ இனி ஆபத்து இல்லை என்றாய். ஓ, கடவுள் காப்பாற்ற நினைக்கிறார் போல் இருக்கிறது. இனி அதற்கு உதவ வேண்டும் என்பதற்காக படகின் உள்ளே இருந்த நீரை எடுத்து வெளியே விட்டேன்’’ ஞானிகள் செய்யும் செயல்களின் காரணங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அவர்கள் எதையும் கடவுள் விட்ட வழி என்று எடுத்துக் கொள்கிறார்கள். எதற்கும் கோபப்படுவதில்லை. எதற்கும் சந்தோஷப்படுவதில்லை. எதற்கும் கலங்குவதில்லை.

?ABC என்று ஆங்கில எழுத்துவரிசையும், தமிழில் அஆஇ என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோம். இந்த வரிசையை எப்படி அமைத்து இருப்பார்கள்?
– டி.கே.கனகசுப்புரத்தினம், பாடலூர்.

பதில்: எழுத்துக்கள் எதை நோக்கமாகக் கொண்டு, எந்த வரிசையில் அமைத்தார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், எழுத்துக்கள் அமைந்த வரிசையை உற்று நோக்குகின்றபொழுது அதில் ஏதேனும் ஒரு தத்துவமோ வாழ்வியல் செய்தியோ வந்து உட்கார்ந்து கொள்கிறது. இதை ஓஷோ விளக்குகிறார். ஆங்கில அகர வரிசையைக் கற்றுக்கொண்டிருந்த இரண்டு குழந்தை களில் முதல் குழந்தை தன் நண்பனைப் பார்த்துக் கேட்டது.

‘‘ஏன் B என்ற எழுத்து எப்பொழுதும் C என்ற எழுத்துக்கு முன்னால் வருகிறது?’’ நீ இருந்தால் (be) தானே எதையும் பார்க்க (see) முடியும். முதலில் நீ உயிரோடு இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் எழுத்து உச்சரிப்பு B (be) அப்பொழுதுதான் நீ பார்க்க முடியும் எனபதைக் குறிப்பிடும் எழுத்து C (see). அதனால்தான் C என்ற எழுத்து B-க்கு பிறகு வருகிறது. தமிழிலும் அப்படித்தான். வாயை மெல்லத் திறக்கிறோம். “அ” பிறக்கிறது. அதையே சற்று விரிவுபடுத்தி அகலமாக்கினால் “ஆ” வருகிறது. மெலிந்த புன்னகை “இ” ஆகிறது. புன்னகை இன்னும் விரிந்தால் “ஈ” ஆகிறது.

?வெற்றி பெற்ற மனிதர்கள்தான் பாராட்டுக்கு உரியவர்களா? அவர்கள்தான் இந்த
உலகத்துக்கு அதிகம் தேவைப்படுகிறார்களா?
– சரோஜினி, செஞ்சி.

பதில்: இந்த பூமிக்கு வெற்றி பெற்ற மனிதர்கள் அதிகம் தேவைப்படுவதில்லை. எந்த மனிதர்கள் அமைதியை உருவாக்குகின்றார்களோ, எந்த மனிதர்கள் பிறருடைய வேதனையைக் குறைக்க முயல்கின்றார்களோ, எந்த மனிதர்களின் சொற்கள் ஆக்கம் தருகின்றனவோ, எந்த மனிதர்களுடைய அன்பு பிறரை ஆறுதல் படுத்துகிறதோ, எவருடைய நோக்கமும் முயற்சியும் இந்த
உலகத்தை எல்லாம் ஒருங்கிணைக்கின்றதோ, அந்த மனிதர்கள்தான் உலகத்திற்குத் தேவை.

?வாழ்க்கையில் ஏன் எளிமையானதாக இல்லை?
– சுர்ஜித்குமார், பள்ளிகொண்டா – வேலூர்.

பதில்: வாழ்க்கை எளிமையானதுதான். ஒரு பறவைக்கும் விலங்குக்கும் உள்ள எளிமையான இனிமையான வாழ்க்கை மனிதர்களுக்கு இல்லாமல் போய்விடுமா என்ன? ஆனால் அதை நாம் சிக்கலாக்கிக் கொண்டுவிட்டோம். ஒரு ஞானி தினசரி கடைத்தெருவுக்கு வந்து கடையில் விற்கும் பொருட்களை வேடிக்கை பார்ப்பாராம். ஆனால், ஒருநாளும் ஒரு பொருளும் வாங்கியதில்லை. ஒருநாள் ஒரு கடைக்காரன் கேட்டுவிட்டான். ‘‘என்ன ஐயா, நீங்கள் தினமும் வருகிறீர்கள். வெகுநேரம் பார்க்கிறீர்கள். ஒன்றும் வாங்குவதில்லையே.’’ அவர் சொன்னாராம்; ‘‘இதில் ஏதாவது ஒரு பொருள் இல்லாவிட்டால் வாழமுடியாது என்ற நிலையில் தவிர்க்கமுடியாத ஏதாவது ஒரு பொருள் வந்தால் வாங்கலாம் என்று தினமும் பார்க்கிறேன். வாழ்க்கையின் கடுமைக்குக் காரணம் எதிர்பார்ப்பதும் ஏமாறுவதும்தான். அதற்குக் காரணம் ஆசை. தேவையற்ற ஆசை என்ற உணர்வை அழித்துவிட்டால் போதும், வாழ்க்கை நாம் நினைக்கும்படி எளிமையாக இருக்கும். ஆசை ஏறஏற, அதை நிறைவேற்றுவதில் பற்றம்கூடி, சிக்கலாகிவிடுகிறது.

?தியானம் செய்கின்றார்களே, எது உண்மையான தியானம்?
– பரமசுந்தரி, கரூர்.

பதில்: ஆன்மா பற்றிய விழிப்புணர்வு எந்த தியானத்தில் ஏற்படுகிறதோ, அந்த தியானம்தான் உண்மையான தியானம்.

?கேள்வி: எது அவமானம்?
– பிரகலாதன், பெங்களூர்.

பதில்: சோம்பேறித்தனமே அவமானம். ஆனால், அதை கௌரவமாக பலர் நினைத்திருப்பது விபரீதம்.

?கேள்வி: நாந்தி சிராத்தம் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?
– கோபால், சிதம்பரம்.

பதில்: விருத்தி சம்ஸ்காரம் என்று சொல்வார்கள். இது ஒரு மங்களகரமான கர்மா. ஆனால், இதை தனியாக செய்ய இயலாது. சில குறிப்பிட்ட கர்மாக்களுக்கு அங்கமாகத்தான் இதைச் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். கர்பாதானம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், விவாகம், கிரகப்பிரவேசம் முதலிய விசேஷங்களில் நான்கு சிராத்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். மங்களப் பொருளை ஏந்திக் கொண்டு சந்ததியினர்களை ஆசீர்வாதம் செய்ய நமது முன்னோர்கள் வருவதால், அவர்களுக்கு `நாந்தி முகர்கள்’ என பெயரிட்டு இருக்கிறார்கள். கோலம் போடுதல், மங்கள அட்சதை எல்லாம் இருக்கும். குடும்ப விருத்திக்காக செய்யப்படும் இதை, நன்கு சிரத்தையோடு செய்வது நம்முடைய குடும்பத்திற்கு நல்ல வளர்ச்சியையும், புகழையும்,
சந்தோஷத்தையும் தரும்.

?பேச்சுதான் சிறந்ததா?
– சிவக்குமார், சென்னை.

பதில்: பேச்சைவிட மௌனம் சிறந்தது. பேசித்தான் தீர வேண்டும் என்றால் அந்த பேச்சு உண்மையாக நேர்மையாக இனிமையாக இருக்க வேண்டும் என்று மகாபாரதம் கூறுகிறது.

?திறமை இருந்தாலும் முன்னேற முடியவில்லையே, ஏன்?
– செல்லதுரை, புதுச்சேரி.

பதில்: முன்னேறுவதற்கு திறமையும் வேண்டுமே தவிர திறமை மட்டும் போதாது.

?பெருமாளுக்கு `வாத்சல்யம்’ என்ற குணம் இருப்பதாகச் சொல்லுகின்றார்களே.
வாத்சல்யம் என்றால் என்ன?
– அகிலாசுப்ரமணியம், மதுரை.

பதில்: குற்றம் குறைகளுடன் தம் அடியார்கள் இருந்தபோதிலும், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் குணம்தான் `வாத்சல்யம்’ என்று பொருள். அதாவது, பிறந்த கன்றிடம் தாய்ப் பசு காட்டும் அபரிமிதமான அன்பை வாத்சல்யம் என்று சொல்வார்கள். கன்று பிறந்தவுடன் அழுக்காக இருக்கும். தாய்ப் பசு தன்னுடைய நாக்கால் அந்த அழுக்குகளை எல்லாம் துடைத்துச் சுத்தப்படுத்தும். அதனை பரம பாக்கியமாகக் கருதும். அப்படிக் குற்றங்களை நற்றமாக ஏற்றுக்கொண்டு அருள்புரியும் இறைவனுடைய குணங்களைத்தான் வாத்சல்யம் என்று சொல்லுகின்றார்கள். அதனால், பகவானுக்கு `பக்தவத்சலன்’ என்று ஒரு திருநாமம் உண்டு. பக்தர்களிடம் வாத்சல்யம் மிகுந்தவன் என்று பொருள்.

?நல்லது எப்படிச் செய்ய வேண்டும்?
– சரவணன், சிவகாசி.

பதில்: நல்லதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு செய்ய வேண்டும். பிறர் இதை கேலி செய்வார்களே என்றெல்லாம் நினைக்கக் கூடாது. ஒவ்வொருவரும் இதைப்பற்றி என்ன கருத்து கூறுவார்கள் என்பதை ஆராய்ந்துகொண்டிருந்தால், ஒருவனால் தன் வாழ்நாளில், தான் விரும்பியபடி செயல்படவே முடியாது. உங்கள் மனதிற்கு எது நன்மை என்று தோன்றுகிறதோ, எல்லோருக்கும் எது நன்மை அளிக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த விஷயத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

?எல்லோரும் புரிந்துகொள்ளும் ஒரு மொழி இருக்கிறதா?
– தாசபிரகாஷ், துவாக்குடி.

பதில்: ஏன் இல்லை? அந்த மொழிக்கு புன்னகை என்று பெயர். அதை எல்லா மொழியினரும் புரிந்துகொள்ள முடியும். ஒரு சின்னக் குழந்தைகூட உங்கள் புன்னகையைப் புரிந்துகொண்டு, அதற்குப் பதில் சொல்லும். எனவே, இதைவிட சிறந்த மொழி வேறு இருக்க முடியாது.

?சிராத்தத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள் என்ன?
– ஸ்ரீ னிவாசமூர்த்தி, சென்னை.

பதில்: 1. பசும்பால், 2. கங்கா ஜலம்,

3. தேன், 4. வெண்பட்டு, 5. புத்துருக்கு நெய், 6. கருப்பு எள். இந்த பொருட்கள் சிராத்தத்தில் சிறிதளவாவது சேர்த்துச் செய்வது நிறைவான பலனைத் தரும். பித்ருக்களின் ஆசியையும் பெறலாம் என்கிறார்கள்.

?கிருஷ்ணாரண்யம் போல பஞ்ச ராம
க்ஷேத்ரங்கள் உண்டா?
– பங்கஜம்.வி, திருவானைக்காவல், திருச்சி.

பதில்: உண்டு. திருவாரூரைச் சுற்றி உள்ள தலங்கள் சிலவற்றை பஞ்சராம க்ஷேத்ரங்கள் என்கிறார்கள்.

1. தில்லை விளாகம் – வீர கோதண்டராமர்.
2. வடுவூர் – கோதண்டராமர்.
3. பருத்தியூர் – கோதண்டராமர்.
4. முடிகொண்டான் – கோதண்டராமர்.
5. அதம்பார் – கோதண்டராமர்.
ராமநவமி அன்று இந்தத் தலங்களைச் சென்று சேவிக்கலாம்.

?அபிஜித் நட்சத்திரம் என்றொரு நட்சத்திரம் இருக்கிறதா?
– ஸ்ரீ வித்யா, சேலம்.

பதில்: 27 நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருபத்தி எட்டாவதாக ஒரு நட்சத்திரம் உள்ளது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுதான் அபிஜித் நட்சத்திரம். உத்திராடத்திற்கும் திருவோணத்திற்கும் நடுவில் இடம் பெற்றிருக்கக் கூடிய நட்சத்திரம் என்கிறார்கள். இது மகர ராசியில் அமைந்திருக்கிறது. உத்திராடம் 4-ஆம் பாதம் மற்றும் திருவோணம் 1,2 ஆம் பாதத்தில் வரக்கூடிய நட்சத்திரம். கிருஷ்ண பரமாத்மாவினுடைய தலையில் இருக்கக்கூடிய மயிலிறகுதான் `அபிஜித்’ என்கிறது மகாபாரதம்.

தேஜஸ்வி

The post இறைவன் விட்ட வழி என்று வாழ்க்கையில் இருக்க முடியுமா? appeared first on Dinakaran.

Tags : Kumaresan ,Vadapalani ,Chennai ,
× RELATED பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை...