சீ ரடி ஒரு புகழ்பெற்ற தீர்த்த யாத்திரைத் தலமாக மாறியது. அதனால் பாபாவைக் காண வரும் பக்தர்கள் கூட்டமும் பெருகியது. விலையுயர்ந்த பொருட்களால் பாபாவை பூஜை செய்வது மிக விமரிசையாக இருந்தது. ஆனால் இந்த வெளி மாற்றங்கள் எதுவும் பாபாவின் நடைமுறை வழக்கங்கள் எதையும் பாதிக்கவில்லை. பாபா உண்மையான ஃபக்கீராகவே வாழ்ந்தார். தாம் மஹாஸமாதி அடையும் வரை தமக்கு வேண்டிய உணவை சீரடியிலுள்ள வீடுகள் தோறும் சென்று யாசித்துப் பெற்றே உண்டு வாழ்ந்து வந்தார். பாபா ஒரு போதும் எவர் வீட்டிலும் உண்டதில்லை. பக்தர்களுக்காக தம் கையால் சமைத்தாரே தவிர தாமே தமக்குச் சமைத்துக் கொண்டதும் இல்லை. அடுத்த வேளைக்காக எதையும் வைத்துக் கொள்ளவில்லை.
“எவருடைய கடைக்கண் பார்வை பிச்சைக்காரனையும் பேரரசனாக்க வல்லதோ அவர் சீரடியின் வீடுகளில் பிச்சை எடுத்தார்”.
பாபா பிச்சையெடுக்கப் புறப்படும் போது ஒரு துணியைப் பையைப் போல் மடித்துத் தோளில் போட்டுக் கொள்வார். அது அவரது இடது கைக்குக் கீழ் தொங்கும். அவரது மற்றொரு கையில் ஒரு தகரக் குவளையை ஏந்திக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஐந்து வீடுகளுக்கு மட்டும் செல்வார். வீட்டின் வாசலில் நின்று ‘அம்மா தயவு செய்து எனக்கு ரொட்டித்துண்டு தாருங்கள்’ என்று கூப்பிடுவார். குழம்பு, காய்கறிகள், பால் அல்லது மோர் போன்ற திரவ பதார்த்தங்களைத் தகரக் குவளையில் வாங்கிக் கொள்வர். சாதம், ரொட்டி போன்றவைகளை துணி மடிப்பில் வாங்கிக் கொள்வார். பாபா மதியம் வரை பிச்சையெடுத்தார். ஆனால் பிச்சையெடுப்பது மிகவும் நியதியில்லாதிருந்தது.
இது பகவான் பாபாவின் மூல ஸ்வரூபமான ஸ்ரீ தத்தாத்ரேயரின் ரூபத்தை நமக்கு நினைவூட்டுகிறது. இதை பாபாவின் ஆரத்திப் பாடல் ‘‘ஜோலீ லோம்பதஸே வாமகரீ’’ (இடது கையில் ஏந்திய ஜோல்னாப்பை) என்று வர்ணிக்கும். பரமேஸ்வரனின் மாஹேஸ்வர மூர்த்தங்களுள் ஒன்றான பிஷாடன கோலமே சாயீஸ்வரனின் இக்கோலம்.பிச்சையெடுத்து முடித்தவுடன் மசூதிக்குத் திரும்புவார். அங்கு ஒரு சிறு ரொட்டியையும் சிறிது சாதத்தையும் ‘துனியில்’ அதாவது ‘புனித அக்னியில்’ ஆஹூதியாக அளிப்பார். மீதியை அதற்கென வைக்கப்பட்டுள்ள ஒரு பானையில் போடுவார். யார் வேண்டுமானாலும் அதிலிருந்து தாராளமாக உணவை எடுத்துக் கொள்ளலாம். எல்லா உணவுகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோர்க்கும் கொடுத்துவிட்டு ஒரு சில கவளங்களை உண்பார்.
அதனாலேயே சீரடி மக்கள் அவரை ஒரு பக்கிரியாகவே கருதினர். இரந்த பிச்சையான சில ரொட்டித் துண்டுகளை உண்டு வாழ்ந்த அவரை எங்ஙனம் அவர்கள் உணர முடியும். ஆனால் இந்த பக்கிரியோ உள்ளத்திலும் கையிலும் மிகவும் தாராளமானவராகவும் அவாவற்றவராகவும் தர்ம சிந்தனையுடையவராகவும் இருந்தார். அகத்தில் உறுதியும் நிதானமும் உள்ளவராக இருந்தார். அவருடைய வழியோ அறிவுக்கு எட்டாதது. எனினும் அச்சிறு கிராமத்தில் கூட அன்பும் ஆசீர்வாதமும் உள்ள சிலர் பாபாவை பரமாத்மா என்றே உணர்ந்து மதித்தனர்.
“அறவன் பிறப்பிலி யாரும் இல்லாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவியறுத்திடும் பித்தன் கண்டீரே”
எனவரும் திருமந்திர மொழிக்கு ஏற்ப, பாபாவின் உண்மை நிலையை அறியாதோர் அவரை ‘கேனப்பக்கிரி’ என்று அழைக்கும் நிலையைக் காணலாம். சிவபெருமானை உலக முதல்வனாக உணராதவர்கள் அவன் பிச்சையெடுக்கும் நிலையை நோக்கி, அதுபற்றி இகழ்ந்து பேசுவர். அவர்கள் போலன்றி, ‘சிவன் ஏன் யாசிக்க வேண்டும்’ என்று ஆழ்ந்து நோக்குபவருக்கு உலகியலில் ஈடுபடாது பசி நீங்குதல் என்ற ஒன்றிற்கு மட்டும் யாசகம் செய்து உண்டு வாழும் சிவனடியார்கள் யாவருக்கும் சிவபெருமான் முடிவில் அவன் திருவடியாகிய முக்தியைத் தந்தருள்வான் என்ற உண்மை புலப்படும். இதனை,
“பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரமாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே”
என்று அடியார்களின் பிட்சாவிதியில் திருமந்திரம் கூறுவதை இங்கு நோக்க வேண்டும்.திருச்செந்தூர் முருகப் பெருமானின் திருவருள் பெற்ற மெய்ஞ்ஞானச் செல்வரான குமரகுருபரர் சிதம்பர நடராசப் பெருமானிடம் இப்படி இறைஞ்சி வேண்டுகிறார்.
‘‘வரம் ஒன்று இங்கு எனக்கு அருளல் வேண்டும் அதுவே
பெருங்குளிர்க்கு உடைந்த காலைக் கருந்துணி
பல தொடுத்து இசைத்த ஒரு துணி அல்லது
பிறிது ஒன்று கிடையாதாக, வறுமனைக்
கடைப்புறத் திண்ணை அல்லது கிடக்கைக்கு
இடம் பிறிது இல்லையாகக் கடும் பசிக்கு
உப்பின்று அட்ட புற்கையூண் அல்லது
மற்றோர் உண்டி வாய்விட்டு அரற்றினும்
ஈகுநர் இல்லையாக……. இத்திறம்
உடல் நீங்களவு உதவிக் கடவுள் நின்
பெரும்பதம் அன்றியான் பிறிதொன்று
இரந்தனன் வேண்டினும் ஈந்திடாது அதுவே’’
‘‘கடுமையான குளிர்க்கு உடுத்துவதற்கு அழுக்கடைந்த கரியதாகிய தைத்து மூட்டிய ஒரு கந்தல் துணி; பாழடைந்த வீட்டில் படுப்பதற்கு வாயிற்புறத்துத் திண்ணை; உண்பதற்கு உப்பில்லாமல் காய்ச்சிய புல்லரிசிக் கூழ்; வேறு உணவு கேட்டாலும் அதைத் தருபவர் இலராக, இவ்வுடல் நீங்கும் வரையிலும் இவற்றை உதவினாலே போதும். நான் வேண்டுவது உன் திருவடியைத் தவிர, பிறிதொன்றும் இல்லை. அதைத் தவிர வேறொன்றை நான் இரந்து வேண்டினும் ஈந்திடாத வரத்தை எனக்குத் தருதல் வேண்டும்’’ இது குமரகுருபரர் கொண்ட மெய்த்துறவின் பக்தியுள்ளம்.
“பசியுடன் பிரார்த்தனை முடியாது
பரம, இச்செபமாலை வாங்கிக்கொள்
என்வயிறு இருமுறை நிரம்பிடவே
எனக்கு அரைசேர் தானியம் வேண்டும்
உறங்கத் தேவை ஒருகட்டில்
ஒரு மரச்சட்டம் தலையணையாம்
பொய் புனைந்துரைகள் புகலவில்லை
புகல்வேன் இறைவா உன்பெயரே”
இது கபீரின் பக்தி மிகுந்த கருணையுள்ளம்.
ஞானானந்த கிரி ஸ்வாமிகளால் கபீர்தாஸரின் உருவமுடையவர் என்று அடையாளம் காட்டப்பட்ட யோகி ராம்சுரத்குமார் மஹராஜ், தன்னை பிச்சைக்காரன் (Beggar) என்றே குறிப்பிடுவது வழக்கம்.வீரசைவத் துறவியான அக்கமாதேவியோ, ‘கையேந்தி செல்ல வைப்பாய் இறைவா, வீட்டுக்கு வீடு பிச்சை எடுக்க வைப்பாய்! அப்பிச்சையை அவர்கள் கொடுக்காதவாறு செய்வாய்! அப்பனே! ஒருவேளை அவர்கள் கொடுப்பார்கள் எனில் அதைத் தரையில் விழ வைப்பாய். அப்படி விழும்போது ஐயனே! நான் எடுப்பதற்கு முன்னே, நாய் அதனை எடுத்துத் தின்பதற்கு வழி செய்வாய்! எம்பெருமானே! மல்லிகார்ஜுனா’’ என்று கூறுவார்.
When I beg, make them not give 0! God
Even if they give, O Father
Make if fall to the Ground
And when it falls, Lord
Make the dog pick it up
Before I pick it up O Lord Chenna
Mallikarjuna
சூஃபி கணக்குகளின் படி இஷ்க் (Ishq) என்று அறியப்படும் தெய்வீக அன்பின் (Divine love) கோட்பாட்டை முதன் முதலில் முன் வைத்தவர் ரபியா அல் பஸ்ரி (Rabia Al Basri) என்ற சூஃபி ஞானி. ‘நரகத்திற்குப் பயந்து உன்னை வணங்கினால் இறைவா! என்னை நரகத்திலேயே எரித்து விடு. சொர்க்கம் கிடைக்கும் என்று உன்னை வணங்கினால் சொர்க்கப் பட்டியலில் இருந்து என்னை நீக்கிவிடு. ஆனால் உனக்காக மட்டுமே உன்னை வணங்குவேன் என்றால் அப்போது உன் அழிவற்ற அழகினை மறைக்காமல் காட்டுவாய்’’.
O God ! If I worship Thee in fear of Hell, burn me is hell; and if I worship Thee is hope of paradise, exclude me from paradise; but I worship Thee for thine own sake, with hold not thine everlasting beauty.
இவ்வாறு ஞானிகளின் தூயவுள்ளம், துறவுள்ளம் எத்தகையது என்பதை நாம் உணரலாம். பிறவித் துன்பத்தை போக்க முயல்கின்றவர்களுக்கு, அவர்களுடைய உடலும் மிகையாகும். அதற்கு மேலும் பற்றுவதற்கு தொடர்பு கொள்வது எதற்காகவோ? உடல் மீதும் பற்றில்லாமல் இருப்பதே உண்மைத் துறவாகும் (பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை-345) என்பது குறள்வாக்கு.
பாழடைந்த மசூதியின் திண்ணைப் புறத்தில் அமர்ந்து படுப்பதற்கு சில சாக்குப் பைகளை வைத்துக் கொண்டு, உண்பதற்கு ‘இரந்துணி’யாக (இரந்து உண்ணி – பிச்சையெடுத்து உண்ணுதல்) வாழ்ந்து காட்டிய, தத்தாத்ரேயரின் அவதாரமான சாயி இப்பொழுதும் நம் தேஹாத்ம புத்தி அஹங்காரத்தை பிச்சையாகப் பெற்றுக் கொண்டு ஆத்ம ஞான ஸத்கதி அளிக்க காத்திருக்கின்றார் சீரடியில். நாம் அனைவரும் சீரடி செல்வோமாக.
முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
The post ‘‘பிச்சையேற்கும் பரமன்” appeared first on Dinakaran.