- பாஜக
- இந்தியா
- கோவில்பட்டி
- ரங்கராஜன்
- கனிமொழி
- திமுக
- தூத்துக்குடி
- மார்க்சிஸ்ட்
- டி.கே.ரங்கராஜன்
- தின மலர்
கோவில்பட்டி: தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:
பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தல் நடக்காது. எனவே, 10 ஆண்டுகால பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றி தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வடமாநிலங்களிலும் பாஜவுக்கு சரிவு துவங்கியுள்ளது. ஒன்றிய பாஜ அரசில் மாநிலங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நினைத்திருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்கலாம்.
அரசு அதிகாரியாக இருந்து தற்போது ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சராக உள்ளவர் கச்சத்தீவை திமுக தாரை வார்த்து விட்டது என்கிறார். கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதே திமுக தலைவர் கலைஞர், தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என்பது ஆவணங்களில் உள்ளது. அப்போது நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து திமுக உறுப்பினர் இரா.செழியன் கண்டித்து பேசி உள்ளார். அவர் தற்போது உயிருடன் இல்லை. இதுகுறித்து பேசிய மற்றொருவர் விஐடி விஸ்வநாதன். இவர், நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் நாடாளுமன்ற பதிவுகளில் இருக்கக்கூடிய விஷயம்.
இதுகுறித்து மோடி பேசினால் எனக்கு கவலை இல்லை. ஆனால் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர், வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்தவர் இன்னும் அரசு ஆவணங்களை வைத்திருப்பவர் இப்படி திடீரென கூறுவது தான் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மற்றும் இதர கட்சிகளின் பங்கு என்ன? எனவே ஜனநாயகத்தை பாதுகாக்க, பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் வெளிப்படையான விஷயம். எனவே, இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
The post பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தல் நடக்காது: கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ரங்கராஜன் பேச்சு appeared first on Dinakaran.