×
Saravana Stores

சிம்மராசிக்காரருக்கு தொழில் வரமா? பயமா?

சிம்ம ராசி, சிம்ம லக்னத்துக்காரர்கள், தாம் பணி புரியும் துறையில் முதன்மையும் பெருமையும் பெற்று விளங்குவர். ஆடல், பாடல், நடிப்பு, முதலாளி, தொழிலதிபர், பேராசிரியர், வழக்கறிஞர், விஞ்ஞானி, மேலாளர், நிர்வாகி, மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர், ஓவியர், கவிஞர், அரசு உயர் அதிகாரி என்று இவர்கள் எந்தத் துறையிலும் ஈடுபடலாம். ஜாதகத்தில் பத்தாம் இடமான தொழில்தானத்தின் அதிபதி இருக்கும் இடம், பெறும் பலம், கிரக சேர்க்கை, சுபர் மற்றும் பாவர் பார்வை போன்றவற்றைப் பொறுத்து இவரது தொழில் அமையும். ஆனால், இவர்கள் செய்யும் தொழிலில் தலைமைப் பண்புடையவர்களாக இருப்பார்கள்.

சுத்தமான வாக்கு, செயல்பாடு

சிம்ம ராசிக்காரர், தான் செய்யும் தொழிலில் நேர்மையாகவும், தூய்மையாகவும் இருப்பார். இவர்கள் பேராசைக்காரர்கள் அல்ல. அதனால் லஞ்சம், ஊழல் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள். பெரிய அளவில் தர்ம பிரபுக்கள் இல்லை என்றாலும்கூட, திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெரிய தொகையைக் கொடுத்து உதவுவார்கள் அல்லது அதிக எண்ணிக்கையில் பலருக்கு ஒரேசமயத்தில் உதவுவது, இவர்களின் வழக்கம்.

பாராட்டும் தனித்துவமும்

சிம்ம ராசிக்காரர்கள், தாம் செய்யும் தொழிலில் எல்லோராலும் பாராட்டப்பட வேண்டும். தான் தனித்து தெரிய வேண்டும், பிரபலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவர். தங்கள் தலையைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் இருப்பதாகவே கருதுவர். இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு பிரபலம் அடைவர். இவர்களைப் பற்றி, இவர்களின் கல்லூரியில் அலுவலகத்தில் குடியிருப்பில் தெரியாதவர்களே இருக்க இயலாது என்ற வகையில் சுற்று வட்டாரத்தில் பிரபலமானவராகவே இருப்பர்.

நினைத்ததை சாதிப்பார்

சிம்மராசிக்காரர் ஒரு வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், அந்த வேலையை இரவு பகல் பாராமல் செய்து முடிப்பார். ஆனால், முடிந்தவரை வேர்வை சிந்தாமல் அழுக்குப் படாமல் வசதியாக செய்யும் வேலையையே இவர் தெரிவு செய்வார்.

கலகலப்பு கிடையாது

சிம்ம ராசிக்காரர் மனதிற்குள் நிறைய அன்பு இருந்தாலும்கூட அந்த அன்பை மிகவும் சிக்கனமாகவே வெளிப்படுத்துவர். உதவி என்ற அளவில் இவர் ஏராளமாக செய்தாலும்கூட இனிமையாகப் பேசுவது, கொஞ்சி விளையாடுவது, சிரித்து மகிழ்வது போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுவதில்லை. மற்றவர்கள் இவர்கள் அருகில் இருந்து ஜோக் அடிப்பதையோ கேலி கிண்டல் செய்வதையோ அனுமதிப்பதும் இல்லை. குடும்பத்திலும், வேலை பார்க்கும் இடங்களிலும் தனிமையில்தான் இருப்பார். இவர்களுக்கு தாய் அல்லது தன்னுடைய ஒரே ஒரு குழந்தை தவிர, வேறு நெருங்கிய உறவினர் எவரும் இருப்பதில்லை. ஏழாம் இடத்துக்கு சுபர் தொடர்பு இருக்கும் சிலருக்கு மட்டுமே கணவர், மனைவி அல்லது ஒரே ஒரு நண்பர் இவருடன் இருப்பார்கள்.

பணியிடத்தில் …

சிம்ம ராசிக்காரர் மேலாளுகை செய்வதில் இவர் எப்போதும் தன்னுடைய குரலை உயர்த்திப் பேசுவது கிடையாது. ஆனால், உறுதியான குரலில் எடுத்துரைக்கும் போது இவருடைய பார்வையின் தீட்சண்யத்திற்கு அஞ்சியே மற்றவர்கள் தங்களின் வேலைகளை செம்மையாகச் செய்து முடிப்பார்கள். கடுமையாக தண்டிப்பதில் இவர் ஈவு இரக்கம் காட்டுவதில்லை. பணியாட்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கருதி கடுமையான தண்டனை வழங்குவார்.

முடிவெடுப்பதில் வல்லவர்

சிம்ம ராசிக்காரர் பெரும்பாலும் யோசனை சொல்வதை மட்டுமே செய்வார்களே அன்றி, களத்தில் இறங்கி பணியாளர்களோடு சேர்ந்து வேலை பார்ப்பதோ அல்லது அங்கு நின்று மேற்பார்வை செய்வதோ கிடையாது. இதை எதிர்பார்க்கிறேன் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டியது அவர்கள் பணியாட்களின் கடமையாகும். சிறிய அளவில் இவர் ஏதேனும் ஒரு வேலை செய்பவராக இருந்தாலும்கூட அந்த வேலைக்கு அவரே அதிகாரியாக இருப்பார். தனக்கு அதிகாரியாக இருக்க இவர் இன்னொருவரை அனுமதிப்பதில்லை. அப்படி ஒருவரை இவர் தேர்ந்தெடுத்தார் என்றால், அவர் மீது இவர் மிகுந்த மதிப்பும் அவருடைய அறிவு மற்றும் வினைத்திட்பம் மீது இவர் பெரிய அளவில் வியப்பும் கொண்டிருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

அலட்சிய மனோபாவம்

சிம்ம ராசிக்காரர்கள் பல சமயங்களில் அலட்சியமாகவும், விட்டேற்றியாகவும் இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் அலட்சியமும் சோம்பேறித்தனமும் இவர்களைப் பெரிய அளவில் முன்னேற விடாமல், வைத்த இடத்திலேயே வைத்திருக்கும். சில நேரம் வேகமாக வேலை செய்யும் இவர்கள், பல நேரங்களில் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். தனக்காக மற்றவர்கள் உழைக்க வேண்டும். தன்னுடைய சகல வசதிகளையும் மற்றவர்கள் கவனிக்க வேண்டும். மற்றவர்கள் அதிக அளவில் வேலை பார்க்க வேண்டும் என்று மேட்டிமைத்தனம் இவர்களிடம் அதிகமாக காணப்படும்.

உயர்மட்ட ஆலோசனை

சிம்ம ராசிக்காரர்கள், பெரிய அளவில் தொழிற்சாலையில் அல்லது அலுவலகத்தில் நடக்கும் பேச்சு வார்த்தைகளில் மட்டும் தவறாமல் கலந்து கொள்வர். முடிவெடுக்கும் இடத்தில் இருந்து இருப்பதே தன்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றது என்று கருதுவர். தமது நிறுவனத்துக்கு அல்லது சாதி சனத்துக்கு, கட்சிக்கு, மக்களுக்கு என சாதகமான முடிவுகளைக் கலந்துரையாடி அல்லது வழக்காடி பெறுவதில் கெட்டிக்காரர்கள். என்றைக்கும் தன்னுடைய உரிமைகளை இவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

தன் முடிவே இறுதி முடிவு

சிம்ம ராசிக்காரர் அலுவலகத்தில் எல்லோரும் ஒரு முடிவெடுத்தால், இவர் அந்த முடிவுக்குக் கட்டுப்படாமல், தான் ஒரு ஆலோசனையை வழங்கி அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார். எல்லோரும் கொடைக்கானல் போகலாம் என்றால் இவர் ஊட்டி போகலாம் என்பார். மற்றவர்கள் ஊட்டி போகலாம் என்றால் இவர் சிம்லா போகலாம் என்பார். ஊட்டியில் என்ன இருக்கிறது ஒரே குப்பை என்று அடுத்தவர்களின் அபிப்பிராயத்தை மதிக்காமல் துணிச்சலாக மறுத்துப் பேசுவார். சிறிது நேரத்தில் மற்றவர்களையும் ஊட்டி ஒரே குப்பை என்று நம்ப வைத்துவிடுவார்.

 

The post சிம்மராசிக்காரருக்கு தொழில் வரமா? பயமா? appeared first on Dinakaran.

Tags : Leo ,Simmarasikakar ,
× RELATED சிம்மம்