×

குன்னாண்டார் குகை சிவன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது குன்றாண்டார் கோயில். குன்று ஆண்டார் கோயில் என்பதே காலப் போக்கில் மருவி, குன்னாண்டார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளின்படி, இந்த ஊர் திருக்குன்றக்குடி என்றும் குறிக்கப்படுகிறது. இந்தக் கோயில், கி.பி. 710-775 இரண்டாம்நந்திவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்த குகைக்கோயிலாகும். இங்குள்ள சிவபெருமான், “பர்வதகிரீஸ்வரர்’’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பாள் “உமையாம்பிகையாகப்’’ போற்றப்படுகிறார். குன்றின் உச்சியில் முருகப் பெருமான் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு வில்வ மரம் தலவிருட்சமாக உள்ளது. இத்திருக்கோயிலில், தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.குகைக்கோயில், கருவறையின் வெளிப்பக்கம் உள்ள சிறிய மண்டபத்தின் தெற்குச் சுவரில், வலம்புரி விநாயகரின் சிற்பம் குடையப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் சிவன், பார்வதி இணையரின் அமர்ந்த நிலைக் கோலம் புடைப்புச் சிற்பமாகக் குடையப்பட்டிருக்கிறது. கருவறையின் உள்ளே பாறையில் குடையப்பட்ட லிங்கம், ‘பர்வதகிரீஸ்வர்’ என்ற பெயரில் போற்றப்படுகிறார். குடைவரையின் வெளிப்புறத்தில், சிறிய அளவிலான குடைவரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள உமையாம்பிகை அம்மன் சந்நதி, பிற்காலத்தில் கட்டப்பட்டதாகும். அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறக் காணிக்கையாக மஞ்சளை அளிக்கின்றனர். இங்குள்ள கல்தொட்டி ஒன்றில், பக்தர்கள் மஞ்சளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். காணிக்கையாகச் செலுத்தப்படும் மஞ்சளை, இவ்வூர் மக்கள் யாரும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை என்பது ஒருவித ஐதீகம். இக்குகைக்கோயிலுக்கு முன்னால் உள்ள மண்டபங்கள், முத்தரையர்களால் கட்டப்பட்டதற்கான விவரங்கள் இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து நமக்குத் தெரியவருகிறது. போத்தரையன் மண்டபம், ஆடல் மண்டபம் என இங்குள்ள மண்டபங்கள் கலை நயத்துடன் காட்சியளிக்கிறது. குகைக் கோயிலின் தென் பாகத்தில், அழகிய மண்டபமாகக் காட்சியளிக்கும் நூற்றுக்கால் மண்டபம் மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கால் மண்டபத்தில், தேர் போன்ற அமைப்பில், சக்கரங்களுடன் கூடிய ஒரு ரதத்தை, இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தில் உள்ள சிலைகள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. இங்குள்ள பூதகணங்கள், இந்தத் தேரினை மண்டபத்தைத் தாங்கிப் பிடிப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு உள்ள தூண்கள் முழுவதும் சுவாமிகளின் குறுஞ்சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கால் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்த நிலையில் உள்ளது.

இங்குள்ள மண்டபத்தில், கோயிலுக்கு தானம் வழங்கியவர்களின் சில கல்வெட்டுகளும் தென்படுகின்றன. அதோடு, குடைவரைக் கோயில் முழுவதும் சாளுக்கியச் சோழர், பிற்கால பாண்டியர், விஜய நகர மன்னர் ஆகியோரின் கல்வெட்டுகள் என ஏராளமான கல்வெட்டுகள் இங்குக் காணக்கிடைக்கின்றன. இப் பகுதியை ஆண்டு வந்த பல்லவராயர்கள், இக்கோயிலுக்குக் கொடைகள் பல அளித்துள்ளனர். காலத்தால் பிற்பட்ட கல்வெட்டொன்று திருச்சிக்கும், தஞ்சாவூருக்கு இவ்வழியாகச் சென்ற வணிகப் பொருள்கள் மீது 16-ல், 1 பங்கு பணம் வரியாகக் கோயில் பராமரிப்பிற்காக வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.குகைக் கோயிலுக்கும், நூற்றுக்கால் மண்டபத்திற்கும் இடையே அழகிய குன்றிற்கு செல்ல, குன்றில் படிகளாக செதுக்கியிருக்கிறார்கள். அதில் நாம் எளிதில் ஏறி, குன்றின் உச்சிக்குச் செல்ல வழி உள்ளது. குன்றின் உச்சியில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கிறார். வள்ளி தெய்வானை சமேதராக சண்முகக் கடவுளாக இங்கு முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். இங்கு கார்த்திகைத் தீபத் திருநாளின் போது, பிரம்மாண்ட கல் விளக்கில் பக்தர்கள் கொண்டுவரும் எண்ணெயை ஊற்றி விளக்கேற்றுகிறார்கள். ஒவ்வொரு கார்த்திகைத்தீபத்தின் போதும், இங்கு மக்கள் குவிகின்றனர். இந்த அழகிய குகைக் கோயிலில், எங்குப் பார்த்தாலும் கல்வெட்டுக்களாகக் காணப்படுகின்றன.புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், கீரனூரிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், குன்றாண்டார் கோயில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்தும் பேருந்து வசதி இருக்கிறது. திருச்சி – புதுக்கோட்டை சாலையில் திருச்சியிலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.குன்னாண்டார் கோயிலுக்கு ஒரு முறையாவது சென்று வரவேண்டிய மிக முக்கியமான இடம்.

The post குன்னாண்டார் குகை சிவன் appeared first on Dinakaran.

Tags : Gunnandar Cave Shiva ,Kunandar temple ,Pudukottai district ,Kunnu Andar Koil ,Maruvi ,Gunnandar Koil ,Tirukunrakkudi ,Gunnandar ,Cave ,Shiva ,
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...