காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில், நாடாளுமன்ற தேர்தலின்போது 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் குளத்தில் சதுரங்கம் விளையாடியும், ஸ்கேட்டிங் செய்தும் வீரர், வீராங்கனைகள் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தினர். தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, நீச்சல் குளத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு சதுரங்க போட்டியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, மாணவ – மாணவிகளின் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு விளையாட்டையும், மாணவர்களின் சிலம்பம் விழிப்புணர்வு விளையாட்டையும் பார்வையிட்டார். இதில், காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரியை சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும், 100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்களிப்பது குறித்த இளைஞர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது, தேர்தல் செயல்பாட்டில் தீவிர ஈடுபாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்ட தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் எஸ்பி சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மரு.அனுராதா, மகளிர் திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயசித்ரா, அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் தத்தலூர் கிராமத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புறையாற்றினார். அப்போது “வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்” என்பதை பாடல் மூலம் வலியுறுத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி பெண்கள் கும்மிப்பாட்டு பாடினர்.
அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்களால் வரையப்பட்ட தேர்தல் குறித்த “என் வாக்கு விற்பனைக்கு அல்ல, உங்கள் வாக்கு உங்கள் குரல், வாக்களிப்பதில் உறுதி கொள்வோம்” போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலப்போட்டியும், மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மூலம் “நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம், நியாயமாக வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேரணியும் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராஜேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் மணி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் குளத்தில் நடந்த சதுரங்க போட்டி: ஸ்கேட்டிங் செய்தும் விழிப்புணர்வு appeared first on Dinakaran.