×
Saravana Stores

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது எப்படி? உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சலில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்கள் அஞ்சல் மூலம் வாக்கு அளிப்பது குறித்து உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடை
பெற்றது.

இதில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள் அதாவது 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் நடமாடும் குழுக்கள் அமைத்தல், வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு எந்த தேதியில் எப்பொழுது வாக்கு பெறப்படும் என்ற தகவல் தெரிவித்தல், நடமாடும் குழுக்கள் மூலம் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது என்ற விளக்கத்தை அளித்து அவர்களிடம் வாக்குகள் பெறுதல், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், அலுவலர்கள் அஞ்சல் வாக்கு அளித்தல், தேர்தல் பணிச்சான்று ஆகியவை அளித்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சிப்காட் சிறப்பு மாவட்ட அலுவலர் (நில எடுப்பு) காளிதாஸ், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது எப்படி? உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kalachelvi Mohan ,Kanchipuram District Collector's Office ,Parliamentary General ,Kanchipuram Parliamentary Election ,Dinakaran ,
× RELATED உத்திரமேரூர் வட்டத்தில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்