×
Saravana Stores

பாஜாவுடன் கூட்டணி வைத்ததால் ஆத்திரம் தேர்தல் பிரசாரத்திற்கு பாமகவினர் யாரும் வரவில்லை: ஓட்டம் பிடித்த முன்னாள் எம்எல்ஏ

கூடுவாஞ்சேரி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பாஜ கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர், மண்ணிவாக்கம் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பாஜ கூட்டணி கட்சி சார்பில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏராளமான ஊராட்சிகளில் கூட்டணி கட்சி கொடிகள், தோரணங்கள், வால்போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரங்கள் எதுவுமே ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதில், பாமகவினர் ஆதிக்கம் உள்ள நல்லம்பாக்கம், மேட்டுப்பாளையம், காரணைப்புதுச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் கூட்டணி கட்சி கொடிகள், தோரணங்கள், வால்போஸ்ட் மற்றும் சுவர் விளம்பரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான அமமுக, ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொதிப்படைந்தனர்.

இதுகுறித்து பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கூறுகையில், ‘தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து கூட்டணி கட்சியினருக்கு பாமக சார்பில் சரியான முறையில் தகவல் கொடுக்கப்படவில்லை. மேலும், போஸ்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி கொடி தோரணங்களும் வழங்கவில்லை. இதில் பாமகவினர் உள்ள பகுதிகளில் மட்டுமே பாமகவின் கட்சி கொடி தோரணங்கள், போஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பல ஊராட்சிகளில் எந்த ஏற்பாடுமே செய்ய முடியவில்லை. இதனால், வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது. மேலும், அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்த நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கட்சி கொடிகளை கட்டிக்கொண்டு வலம் வந்தனர். ஆனால் தற்போது பாஜவுடன் பாமகவினர் கூட்டணி வைத்ததால் ஏராளமான பாமகவினர் தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை. இதில், நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் பாஜ கட்சியினரே அதிக அளவில் பங்கேற்றனர்.

பாமகவினர் குறைந்த அளவே பங்கேற்றனர். அமமுக, ஐஜேகே கட்சியினர் ஒரு சிலரே வந்திருந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. மேலும் நேற்று மதியம் 2 மணி அளவில் உணவு இடைவேளைக்கு பிறகு அந்தந்த ஊர்களில் தேர்தல் ஆணையம் கட்சி கொடி கம்பங்களை பிடுங்குவதாக தகவல் அறிந்ததும் பாமக முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் பிரசாரத்தை கைவிட்டு பாதியிலேயே ஓட்டம் பிடித்தார்’ என்றனர். இதற்கு முன்னதாக தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகத்துடன் வண்டலூரில் உள்ள இரணியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டனர். அப்போது திருக்கச்சூர் ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் தாம்பல் தட்டில் ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 என தட்சணை வைத்தனர். பின்னர் மாலையுடன் கோயிலை சுற்றியும் வலம் வந்தனர்.

The post பாஜாவுடன் கூட்டணி வைத்ததால் ஆத்திரம் தேர்தல் பிரசாரத்திற்கு பாமகவினர் யாரும் வரவில்லை: ஓட்டம் பிடித்த முன்னாள் எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : BAM ,Baja ,MLA ,Guduvanchery ,Tamil Nadu ,BJP alliance ,Jyoti Venkatesan ,BMC ,Kanchipuram ,Chengalpattu ,Bamakavins ,Dinakaran ,
× RELATED குஜராத் பாஜ எம்எல்ஏ மீது பலாத்கார வழக்குப்பதிவு