×

திருமணத்துக்குத் தடையாகும் செவ்வாய் தோஷம்

‘‘ஐயா… என் பையனுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு நான் யாரையும் ஏமாத்தினது இல்லை. அப்படி இருக்கும்போது என் பையனுக்கு எப்படி செவ்வாய் தோஷம் வரும்? நான் பண்ணாத பாவத்துக்கோ அல்லது அப்படியே நான் பண்ணின பாவத்துக்கோகூட என் பையன் எப்படி தண்டனை அனுபவிக்கலாம்’’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேப்ப மரத்திலிருந்து வேப்பங்காய்தானே வரும்; அவரைக் கொடியில் புடலை கிடைக்குமா என்ன! அதுபோல, பரம்பரையாக வருவது என்றொரு விஷயம் உண்டே. உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதெனில் உங்கள் குடும்பத்தில் தந்தையாருக்கோ அல்லது பாட்டனாருக்கோ சர்க்கரை நோய் இருக்கிறதா என்று டாக்டர் கேட்கிறார் அல்லவா! அறிவியல்கூட ஜீன்கள் மூன்று தலைமுறைக்கு ஒருவரின் உருவ அமைப்பையும் குணங்களையும் கடத்துகின்றன என்று கூறுகிறதல்லவா.

அதுவேதான் இங்கும் நிகழ்கிறது. முன் தலைமுறையினரின் தவறும் கர்ம வினையாக உங்களிடம் வந்து சேருகிறது. இன்னொன்று, நீங்கள் இந்தக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பதிலும் உங்கள் கர்மவினை அடங்கியுள்ளது. யாராலும் கணிக்க முடியாத காலதேவனின் கணிப்பில் இதுவும் ஒன்று. ‘அவர் ரொம்ப நல்லவர் சார். அவருக்குப் போய் இப்படியொரு வியாதி வந்துடுச்சே’ என்பதற்குப் பின்னால் காலதேவனின் கணக்குகள் இருக்கிறது. முன்னோர் செய்த வினைகளை நாம் அறியாவிட்டாலும், அதன் பாதிப்பு நமக்கும் வரத்தான் செய்யும். அதைத் தவிர்க்க முடியாது. அது மட்டுமல்ல… சகோதர, சகோதரிக்கு சேர வேண்டிய சொத்துகளை ஒருவரே அபகரிக்கும்போது பூமிகாரகனான செவ்வாயின் கோபம் தோஷமாகத் தாக்குகிறது. அடக்க விலைக்கு விற்காமல் அநியாய விலைக்கு பூமியை விற்கும்போதும் செவ்வாய் தன் தோஷத்தால் வளைக்கிறார். பொதுவாக செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்தவற்றில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தவறும்போது அதன் விளைவால் தோஷம்தான் மிஞ்சுகிறது.

செவ்வாய் தோஷம் எவ்வளவு வருடங்கள் இருக்கும்?

உடம்பில் ரத்தம் ஓடும் வரை இருக்கும். ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், அதில் ராசியிலிருந்தோ அல்லது லக்னத்திலிருந்தோ 2,4,7,8,12-ஆம் இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம்.

ஏன் மற்ற இடங்களில் இருக்கும் செவ்வாயைவிட இந்த இடங்களில் இருந்தால் தோஷம் என்கிறார்கள்?

செவ்வாய் எழுச்சிக்குரிய கிரகம். எப்போதும் கனலையும், தணலையும் தன்னிடமிருந்து வெளிப்படுத்தியபடியே இருக்கும். இப்படிப்பட்ட கிரகமானது ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களைத் தீர்மானிக்கும் மேற்கண்ட இடங்களில் நிற்கும்போது, அவற்றை பாதிக்கத்தான் செய்யும். அதனால்தான் அந்த இடங்களில் செவ்வாய் இருக்கிறதா என்று பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

சரி, மேற்கண்ட இடங் களில் செவ்வாய் இருந்தால் என்னென்ன பலன் என்று பார்ப்போமா…

ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால், அதாவது தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் இருந்தால், சட்டென்று தீப்பொறிபோல தன் கருத்தை வைப்பார். ‘முந்திரிக் கொட்டை மாதிரி பேசி பிரச்னையை உருவாக்கறாரு’ என்று வாங்கியும் கட்டிக் கொள்வார். குடும்பத்திற்குரிய இடமாகவும் இது வருவதால் குடும்ப ஒற்றுமையை கெடுப்பதாகவும் அமையும். மனைவியிடமும், மனைவி வழி உறவு களிடமும் பேச்சாலேயே பிரச்னையை உண்டாக்குவார். இதனாலேயே இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருக்கும்போது பார்த்துத்தான் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. அதேபோல நான்காம் இடம் என்பது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கும் இடமாகும். நாலில் செவ்வாய் இருந்தால், கடுமையான பிடிவாதம் இருக்கும். தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்பார். ‘அவ்ளோ சீக்கிரம் வளைஞ்சு வரமாட்டாருங்க. என்ன தோணுதோ அதைத்தாங்க செய்வாரு’ என்று எல்லோரின் புறக் கணிப்புக்கும் ஆளாகக் கூடும்.

ஏழாமிடம் என்பது வாழ்க்கைத் துணை மட்டுமல்லாது, கூட்டு வியாபாரத்தைப் பற்றியும் பேசுகிறது. ஒரு ஆண்மகன் ஜாதகத்தில் ஏழாமிடத்தில் செவ்வாய் இருந்தால் அவருக்கு மனைவியாக வருபவருக்கும் செவ்வாய் தோஷம் இருப்பது நல்லது. இல்லையெனில் இருவரும் எப்போதும் ஏட்டிக்கு போட்டியாக ஏதேனும் பேசிக் கொண்டே இருப்பார்கள். பொதுவாகவே ரத்தம், விந்து, வீர்யம், மர்ம ஸ்தானத்திற்கு உரியவராக செவ்வாய் வருகிறார். இவற்றின் இயல்பு நிலையையும், இயக்க நிலையையும் நிர்ணயிக்கும் பங்கு செவ்வாய்க்கு உண்டு.

எனவேதான் திருமணத்தின்போது அத்தனை முக்கியத்துவம் கொடுத்து இந்த தோஷத்தைப் பார்க்கிறார்கள். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அறிவுப் பசி, உடற்பசி, வயிற்றுப்பசி கூடுதலாகவே இருக்கும். கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்வது இவர்களுக்கு பெரும்பாலும் ஒத்து வராது. எட்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் திடீர் விரயம் ஏற்படும். அடுத்தடுத்த பயணங்களால் அலைக்கழிப்புகள் அதிகமாகும். நிலையாமைக்குரியதும் எட்டாம் இடம் என்பதால், ‘நாலு வீட்டுக்கு சொந்தக்காரரா இருந்தாரு. இப்போ வாடகை வீட்ல இருக்காரு’ என்று வாழ்க்கை மாறிப் போகக்கூடும். பன்னிரெண்டாம் இடம் என்பது அயன, சயன, சுகஸ்தானத்திற்குரியது. அதில் செவ்வாய் அமரும்போது நிம்மதியான தூக்கம் இருக்காது. பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். மனதில் இருப்பதை தேக்கி வைத்து வெளிப்படையாக கலகலவென்று பேசவிடாத கல்லுளிமங்கனாக செவ்வாய் மாற்றி விடுவார்.

சமூகம் தள்ளி வைக்கும் நபர்களிடம் பழகி கெட்ட பெயர் வாங்கிக் கொள்வர். அது உங்கள் பார்வையில் நியாயமாக இருந்தாலும், ‘அவருக்கு சிநேகம் சரியில்லைங்க’ என்று சமூகம் புறக்கணிக்கும்.
‘‘சார்… என் பொண்ணுக்கு துலாம் லக்னம். துலாத்துக்கு நாலாம் இடமான மகரத்துல செவ்வாய் இருக்கு. மகர ராசியில செவ்வாய் உச்சமாகறாரு. அப்போ செவ்வாய் தோஷம் எப்படி வரும்?’’ என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். செவ்வாய் ஆட்சி பெற்றிருந்தாலோ, உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதகத்திலும், நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது), அப்போது மட்டும் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும். வலு குன்றிய செவ்வாய் தோஷமாக அது கருதப்படும்.

பொதுவாகவே மிதுன ராசிக்கு சங்கடங்களைத் தரும் சத்ரு ஸ்தானாதிபதியாக செவ்வாய் வருவதாலும், கன்னி ராசிக்காரர்களுக்கு ஆட்டிப் படைக்கும் அஷ்டமாதிபதியாக செவ்வாய் இருப்பதாலும், மகர ராசிக்காரர்களுக்கு பாவங்களை செய்யத் தூண்டும் பாதகாதிபதியாக வருவதாலும், கும்ப ராசிக்காரர்களுக்கு முடக்கிப் போடும் பகையாளிகளாக செவ்வாய் பயமுறுத்துவதாலும்… இந்த ராசிகளில் பிறந்த பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ இன்னும் கொஞ்சம் கூடுதலாக செவ்வாயின் நிலையை பார்க்க வேண்டும். பொருத்தம் பார்க்கும்போது செவ்வாய் தோஷமுள்ள ஜாதகரையே சேர்க்க வேண்டும்.

மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை போன்ற நட்சத்திரக்காரர்களுக்கும், மேஷம், விருச்சிகம் போன்ற ராசிக்காரர்களுக்கும் செவ்வாய்தான் அதிபதி. மேலும், அனுஷம் நட்சத்திரத்தை எந்த தோஷமும் பாதிக்காது. அதனால் இவர்களுக்கெல்லாம் தோஷமிருந்தாலும் ஒன்றும் செய்யாது என்று திருமணம் செய்து வைத்து விடுவர். ஆனால், உண்மை அப்படியல்ல… எந்த நட்சத்திரக்காரராக இருந்தாலும் செவ்வாய் அதன் வேலையை காட்டத்தான் செய்யும். நம் வீட்டு நெருப்பானால் சுடாமல் இருக்குமா என்ன?

செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோஷத்தை சேர்ப்பது தான் நல்லது. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளை சமமாக இருவரும் வெளிப் படுத்தும்போது கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்ய வாழ்க்கையும் இனிமையாக அமைகிறது. செவ்வாய் தோஷம் இல்லாத ஆணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்ணைச் சேர்க்கும்போது திருமணத்தின் அடிப்படை விஷயமே பாதிக்கப்படுகிறது. சமூகம் சீர்படவும், முறையற்ற உறவுகள் தொடராது இருக்கவுமே செவ்வாய் தோஷத்தை பார்க்க வேண்டும். ஐந்து பெண்களை ஏமாற்றிய ஆசாமி என்கிற அவலங்கள் நிகழாவண்ணமிருக்க தோஷ
முள்ளவர்களை தோஷ முள்ளவர்களோடுதான் சேர்க்க வேண்டும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாக சேர்த்துக் கொள்வது நல்லது. எல்லா விஷயத்திற்கும் தீர்வு நிச்சயம் உண்டு. அதுபோல செவ்வாய் தோஷம் இருந்தால், அதற்கும் நிச்சயம் பரிகாரங்கள் உண்டு. அதாவது அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால் செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறைகிறது. ரோட்டில் கிடக்கும் வாழைப்பழத் தோலை அப்புறப்படுத்தும் அளவுக்கு நமக்கு பொறுப்பு இருந்தால் போதும்… தோஷம் சந்தோஷமாக நிச்சயம் மாறும்.

முடிந்தவரையிலும் ரத்த தானம் செய்யுங்கள். விபத்தில் சிக்கி அவஸ்தைப்படுபவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகே கோயிலோ, பள்ளியோ இருந்தால், சாலையை அகலப்படுத்தும் சூழல் வந்தால் பெரிய மனதோடு உதவுங்கள். பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினையின்போது பாரபட்சமாக நடந்து கொள்ளாதீர்கள். சகோதரன், சகோதரி, பெற்றோரை ஏமாற்றாதீர்கள். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தன் முதல் சொத்தை பூமியாக வாங்காமல், கட்டிய கட்டிடமாக வாங்குங்கள். இல்லையெனில் பூமி பூஜையோடு உங்கள் இல்லக் கனவு முடிந்துவிடும். சங்கடம் நேரலாம்.

நிறுவனத்தை நடத்துபவராக இருந்தால், தொழிலாளியின் வியர்வை காய்வதற்கு முன்பு கூலியைத் தந்துவிடுங்கள். உடன்பிறந்தவர்களோடு முடிந்தவரை அனுசரித்துப் போங்கள். ரத்த பந்தங்களுக்கு எதிராக வழக்கு வேண்டாம். ‘கூடப் பொறந்தவனே இப்படி பண்ணிட்டான்யா’ எனும் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகாதீர்கள். ராணுவ நிதிக்கு உதவுங்கள். காவல்துறைக்கு எப்போதும் ஒத்துழைப்பு கொடுங்கள். ஏனெனில், ஊர்க்காவல் படையிலிருந்து உயர் ராணுவம் வரையிலும் செவ்வாய்தான் ஆட்டி வைக்கிறது. எந்த ஊரிலிருந்தாலும் அந்த ஊர் எல்லை தெய்வத்தை செம்பருத்தி, விருட்சிப்பூ சாற்றி வணங்குங்கள். வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகளை நட்டு பராமரியுங்கள். எல்லை தெய்வங்கள், தேவதைகள் மிகப் பெரிய விஷயம் என்பதை உணருங்கள். காத்தல் எனும் அரும்பணியை அரூபமாக அவர்கள் செய்வதை உற்றுக் கவனித்தால் புரியும்.

எப்போதுமே செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கு அதிபதியான முருகனை வணங்குங்கள். முக்கியமாக பழநி முருகனையும், நெல்லை மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள பண்பொழில் திருமலைக் குமாரசுவாமியையும், திருவாரூருக்கு அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலனையும், வைத்தீஸ்வரன் கோயில் அங்காரகனையும், வைத்தியநாத சுவாமியையும் மறக்காது தரிசியுங்கள். அந்தந்தக் கோயிலுக்குரிய நியதிப்படியான பரிகாரங்களை செய்யுங்கள். அந்தக் கோயிலில் ஒரு நாளாவது தங்கி அந்த அதிர்வலையிலேயே இருக்க முயற்சி செய்யுங்கள். செவ்வாய் தோஷம் என்பது செவ்வாயின் கதிர்வீச்சு சீரான அலைவரிசையில் செல்லவில்லை என்பதையே உணர்த்துகிறது. அந்தந்தக் கோயிலுக்குச் செல்லும்போது செவ்வாய் தனது இயல்பான கதிர்வீச்சை வெளிப்படுத்தி அதற்குண்டான வேலையைச் செய்கிறது. எனவே வாழ்க்கை ஓட்டமும் சீராகிறது.

The post திருமணத்துக்குத் தடையாகும் செவ்வாய் தோஷம் appeared first on Dinakaran.

Tags : Mars ,Mars Dosha ,
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...