×

ராப்ரி தேவியை போல கெஜ்ரிவால் மனைவி சுனிதா முதல்வர் பதவியை ஏற்பார்: ஒன்றிய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: ராப்ரி தேவியை போல டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் மனைவி சுனிதா ஏற்க தயாராகி வருகிறார் என்று ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மதுபானக்கொள்கை தொடர்பான வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏப்.1ம் தேதி வரை அவருக்கு அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

குறிப்பாக ஆம்ஆத்மி கட்சியினரை அவர் வழிநடத்தி வருகிறார். இதுபற்றி டெல்லி பா.ஜ தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மாட்டுதீவன ஊழல் வழக்கில் பதவி விலக நேர்ந்த போது அவரது மனைவி ராப்ரி தேவியை முதல்வர் பதவியில் அமர்த்தியது போல் இப்போது கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதாவை முதல்வர் பதவியில் அமர்த்துவார் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக ஹர்தீப்சிங் பூரி கூறுகையில்,’ ஆம்ஆத்மி போராட்டத்தை முன்னின்று நடத்துவதாகநீங்கள் குறிப்பிடும் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பீகாரில் ராப்ரி தேவி வகித்தது போல டெல்லி முதல்வர் பதவியை வகிக்கத் தயாராகி இருக்கலாம்’ என்றார். அவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் பிரசாரத்தை தொடங்கினார் மனைவி
டெல்லி கலால் கொள்கை தொடர்பாக கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறையின் காவலில் உள்ள தனது கணவருக்கு ஆதரவளிக்குமாறு மக்களை வலியுறுத்தி, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ்அப் பிரசாரத்தை அறிவித்தார். இதற்காக 8297324624 மற்றும் 9700297002 ஆகிய இரண்டு வாட்ஸ்அப் எண்களை வெளியிட்டு சுனிதா கெஜ்ரிவால் கூறியதாவது: மக்கள் தங்கள் ஆசிகள், பிரார்த்தனைகள் அல்லது வேறு ஏதேனும் செய்திகளை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பலாம். அவற்றை நான் அவருக்கு தெரிவிப்பேன். அவரை உங்கள் அண்ணன், உங்கள் மகன் என்று அழைத்தீர்கள், இப்போது அவருக்கு நீங்கள் ஆதரவளிக்க மாட்டீர்களா? இந்த போரில் நாம் ஒன்றாக அனைவரும் போராடுவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

* கெஜ்ரிவால் செல்போனில் இருந்து தேர்தல் உத்திகளை கைப்பற்ற அமலாக்கத்துறை விரும்புகிறது
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அடிசி நேற்று கூறுகையில்,’ கெஜ்ரிவாலின் மொபைல் போனை ஆய்வு செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமலாக்கத்துறை பாஜவின் அரசியல் ஆயுதமாக செயல்படுகிறது என்பதை நிரூபிக்கிறது. கெஜ்ரிவாலின் தொலைபேசியில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்புவது அமலாக்கத்துறை அல்ல, பாஜ தான். ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை தேர்தல் வியூகம், பிரசாரத் திட்டங்கள், தேர்தல் உத்திகள் பற்றிய தகவல்களை கைப்பற்ற அவர்கள் விரும்புகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

The post ராப்ரி தேவியை போல கெஜ்ரிவால் மனைவி சுனிதா முதல்வர் பதவியை ஏற்பார்: ஒன்றிய அமைச்சர் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Sunita ,Chief Minister ,Rabri Devi ,Union Minister ,New Delhi ,Hardeep Singh Puri ,Chief Minister of ,Delhi ,
× RELATED டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா ரோட் ஷோ