- கிளம்பாக்கம் புதிய காவல் நிலையம்
- குடவாஞ்சேரி
- கிளம்பாக்கம் காவல் நிலையம்
- GST சாலை
- ஜிஎஸ்டி
- செங்கல்பட்டு மாவட்டம்
- வண்டலூர்
- ஆசியா
கூடுவாஞ்சேரி: புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் ஆசியாவிலேயே இல்லாத வகையில், சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்ட நவீன பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக கிளாம்பாக்கம் காவல் நிலையம் கடந்த ஜனவரி மாதம் 6ம்தேதி திறக்கப்பட்டது. இந்த காவல் நிலைய கட்டுப்பாட்டில் ஊரப்பாக்கம் ஒரு பகுதி, ராம் நகர், செல்லியம்மன் நகர், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி, காரணைப்புதுச்சேரி, காட்டூர், பெரியார் நகர், விநாயகபுரம், கோகுலம் காலனி, அண்ணா நகர், கொளப்பாக்கம், வண்டலூர், ஊனைமாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யும் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக காவல் நிலையம் திறக்கப்பட்டு இரண்டரை மாதம் ஆகிறது. ஆனால், இங்கு எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யும் வசதி இல்லை. இதில், ஏற்கனவே ஓட்டேரி மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் கொலை, கொள்ளை, அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் சம்பந்தமாக கிளாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்தால் ஓட்டேரி மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எந்த காவல் நிலையத்துக்கு செல்வது தெரியாமல் தினந்தோறும் அலைந்து திரிந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசாரிடம் கேட்டால், இது தொடர்பாக தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெத்தனமாக பதில் கூறுகின்றனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
* புலம்பும் போலீசார்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிதாக காவல் நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு, காவல் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்கள் இதன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. இதனால், இந்த பகுதி கிராம மக்கள் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக புகார் கொடுக்க வருகின்றனர். அப்போது, அங்குள்ள போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யும் அதிகாரம் எங்களுக்கு இன்னும் வழங்கவில்லை என கூறி பொதுமக்களை ஏற்கனவே எந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தீர்களோ அந்த காவல் நிலையங்களுக்கு செல்லுங்கள் என கூறி அனுப்பி விடுகின்றனர் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், தங்கள் அழைக்கழிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.அதேபோல், எப்ஐஆர் வசதி செய்யும் வசதி இல்லாதததால் தான் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு பொதுமக்களை அனுப்புகிறோம் என போலீசாரும் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
The post கிளாம்பாக்கம் புதிய காவல் நிலையத்தில் எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யும் அதிகாரம் இல்லை: பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.