திருத்தணி: பள்ளிப்பட்டில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் உறுதியளித்தார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 4வது முறையாக திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ஜெகத்ரட்சகன் பள்ளிப்பட்டு அருகே நெசவாளர்கள் நிறைந்த பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, சொரக்காய்பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு, நெசவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் பேசுகையில்; தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த தேர்தலின்போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, பெண் சமுதாயத்திற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களும் போற்றும் வகையில் அமைந்துள்ளது. மேலும், நெசவாளர்களின் நீண்டகால கோரிக்கையான ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும், இளைய சமுதாயம் வேலைவாய்ப்பு பெற சிப்காட் தொழிற்பூங்கா அமைத்து தரப்படும் என்றும் உறுதியளித்து பேசினார்.
முன்னதாக திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு, அம்மையார்குப்பத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி, செங்குட்டுவன் ஆகியோர் தலைமையில் பெண்கள் மலர்தூவி, உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்வின்போது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, தொகுதி பொறுப்பாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி, பி.டி.சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.எம்.சுகுமாரன், நெசவாளரணி தலைவர் சி.எம்.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட பள்ளிப்பட்டில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் உறுதி appeared first on Dinakaran.