திருவள்ளூர்: பெட், சோபா தயாரிக்கும் கடையில் மின்கசிவு ஏற்பட்ட காரணத்தால் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்தாவுத் பாஷா மகன் காதர் பாஷா (38). இவர் மணவாளநகர் பாரதியார் தெருவில் சோபா, மெத்தை, சேர்கள் ஆகியவை புதிதாக தயாரித்து விற்பனை செய்வதும் பழைய பொருட்கள் கொண்டு வந்தால் அதை சீரமைத்து தரும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். இங்கு ரசாக், உபேத், அக்பர் ஆகிய 3 பேரும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் மெத்தை ஒன்று தைத்துக் கொண்டிருந்தபோது திடீரென கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கு போட்டு வைக்கப்பட்டுள்ள பஞ்சில் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும் காவல் துறையினருக்கும் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மற்றும் திருவூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பஞ்சு மற்றும் தேங்காய் நார் போன்ற எரியக்கூடிய தன்மை உள்ள பொருட்கள் கடையில் இருந்ததால் அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலானது. இதனால் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகிப்போனதாக உரிமையாளர் காதர் பாஷா தெரிவித்தார். இதுகுறித்து காதர்பாஷா மணவாளநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின் கசிவு காரணமாக பெட், சோபா தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து: ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.