×

சிவசக்தி குகத்தலமான திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும், பெருமைமிக்க முருகத் தலமாகவும் போற்றப்படுகிறது. சிவனடியார்கள் இதனை பாண்டிய நாட்டுப் பழம்பதிகள் பதினான்கில் ஒன்றாகப் போற்றுகின்றனர். மதுரையில் இருந்து தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஊரின் தெற்கில் அமைந்த பெரிய மொட்டைப்பாறையே பரன்குன்றம் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும்.  கிழக்கு மேற்காக அமைந்த இந்த குடைவரைக் கோயில் வடக்கு நோக்கி அமைந்ததாகும். இதில் வடக்கு நோக்கி அமைந்த சிறிய கருவறையில் துர்க்கையும் அவளுக்கு வலப்புறம் பெரிய சிற்பமாக தெய்வானை திருக்கல்யாண முருகனும்.

இடப்புறம் பெரிய விநாயகரும் உள்ளனர். இந்த மூன்று பெரிய சிற்பங்களும் புடைப்புச் சிற்பமாக கல்லில் செதுக்கப்பட்டு அதன்மீது காரையால் வனப்பூட்டியுள்ளனர். இவர்களுக்கு முன்பாக அமைத்த மண்டபமும் குடைந்து உருவாக்கப்பட்டதே ஆகும். இம்மண்டபத்தின் மேற்கில் கிழக்கு நோக்கியவாறு ஒரு கருவறையும் கிழக்கில் மேற்கு நோக்கியவாறு ஒரு கருவறையும் எதிர் எதிராக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிழக்கு நோக்கிய கருவறையில் மகாதேவரான சிவபெருமான் பரங்கிரிநாதர் என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு எதிரில் அமைந்த கருவறையில் பவளக்கனிவாய் பெருமாள் என்னும் பெயரில் திருமால் கோயில் கொண்டுள்ளார்.

இந்த ஐந்து சந்நதிகளையும் ஒரே பாறையில் செதுக்கி அமைந்துள்ளனர். இந்த குடைவரைக் கோயில் பூமியில் இருந்து ஏறத்தாழ 10 மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்போது முகமண்டபம், அபிஷேகத்திற்கு மகாமண்டபம் போன்றவற்றை முன்னால் வளர்த்திக்கட்டி பெருங்கோயிலாக்கி உள்ளனர்.இங்கு ஐந்து தெய்வங்களை பாறையில் செதுக்கி உருவாக்கி இருப்தோடு புவனேஸ்வரி, சப்தமாதர் போன்ற தெய்வங்களையும் அண்டாபரணர், போன்ற காவற் பூதங்களையும் பெரும்சிற்பங்களாக அமைத்துள்ளனர். இதில் அண்டாபரணர் சிறப்புடன் போற்றப்படுகிறார். திருப்பரங்குன்றம் பெரிய சிவகுகசக்தித் தலமாகும். இது ஆதியில் அன்னை துர்க்கையை மையப்படுத்தியே அமைக்கப்பட்டது.

அதனால் இதில் முதன்மைத் தெய்வமாகவே இருப்பவள் துர்க்கையே ஆவாள். இவளுக்கு நேர் எதிரிலேயே பலிபீடம் வாகனமேடை கொடிமரம் ஆகியவை உள்ளன. வாகன மேடையில் துர்க்கைக்குரிய சிங்கம், சிவனுக்குரிய இடபம் முருகனுக்குரிய மயில் ஆகிய மூன்றும் இணையாக உள்ளன. இத்தல தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். சுந்தரர், தாம் இங்குமுடிஉடை மூவேந்தர்களோடு வந்து வழிபட்டதைத் தமது பதிகத்தில் குறித்துள்ளார். சுந்தர மூர்த்தி சுவாமிகள், சேரமன்னரோடும், பாண்டிய மன்னரோடும் அவருக்குப் பெண் கொடுத்த சோழ மன்னரோடும் சேர்ந்து பரங்கிரி நாதரை வழிபட்டுப் பேறு பெற்றார் என்று பெரிய புராணம் கூறுகிறது.

முருகனுக்கென்று தைப்பூசம் பங்குனி உத்திரம் போன்ற பெருந்திருவிழாக்களும் சிவன்முருகன் இருவருக்கும் சேர்ந்ததுமாக கார்த்திகை தீப விழாக்களும் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்களுக்கான கொடியேற்றம் ஒரே கொடிமரத்தில் நடத்தப்படுவது, தனிச் சிறப்பாகும். அந்தக் கொடி மரமும் இந்த இருவருக்கும் நேராக இல்லாமல் இக்கோயிலில் முதன்மைத் தெய்வமாக இருக்கும் துர்க்கைக்கு நேராக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கொடியில் சிவனுக்குரிய இடபமே இடம் பெறுகிறது மயில் கொடி ஏற்றும் வழக்கம் இங்கில்லை.எனவே இது சிவகுக சக்தித்தலமாக இருக்கிறதென்று அன்பர்கள் போற்றுகின்றனர்.

ஜெயசெல்வி

The post சிவசக்தி குகத்தலமான திருப்பரங்குன்றம் appeared first on Dinakaran.

Tags : Thiruparangunram ,Shiva ,Shakti Cave ,Arupada ,Lord Murugan ,Lord ,Muruga ,Sivanadiyars ,Pandyan ,Madurai ,Tiruparangunram ,Shiva Shakti Cave ,
× RELATED ஆவின் பாலகத்தை உடைத்து நெய், பால், பணம் திருட்டு