×

சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ.3 கோடி ஹவாலா பணம் சிக்கியது: கடத்தல் குருவி அதிரடி கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்திற்கு கடத்த முயன்ற ₹3 கோடி ஹவாலா பணம் பிடிபபட்டது. இதுதொடர்பாக பயணி ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். ₹3 கோடி பறிமுதல் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் செல்லும், தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு செல்ல வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். மேலும் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார்.

இதையடுத்து அதிகாரிகள், அந்த பயணியின் உடமைகளை முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவருடைய சூட்கேசின் ரகசிய அறைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சி, சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு பணக்கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் எண்ணிப் பார்த்த போது, இந்திய மதிப்பிற்கு சுமார் ₹3 கோடி என தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியையும், ₹3 கோடியையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள், அந்த பயணியின் தாய்லாந்து பயணத்தை ரத்து செய்தது, ₹3 கோடி வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ₹3 கோடி மதிப்புடைய பணம், கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்று தெரிகிறது.

இந்த பணத்தை தாய்லாந்து நாட்டிற்கு கடத்தி சென்று, அங்கிருந்து தங்கக் கட்டிகள், போதைப்பொருட்கள் வாங்கி வருவதற்கு எடுத்துச் செல்ல முயன்றாரா என்று விசாரணை நடக்கிறது. ₹3 கோடி பணத்தை கடத்தியவர், கடத்தல் குருவி தான் என்று தெரிய வந்திருக்கிறது. எனவே இவரிடம் ஹவாலா பணத்தை கொடுத்து அனுப்பிய ஹவாலா பணம் கடத்தல் கும்பலின் தலைவன் யார் என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருக்கும் நேரத்தில் ஹவாலா பணம் ₹3 கோடி சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமானத்தில் கடத்த முயன்ற ஒருவர் பிடிபட்டுள்ள சம்பவம் குறித்து, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ.3 கோடி ஹவாலா பணம் சிக்கியது: கடத்தல் குருவி அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Hawala ,Chennai ,Thailand ,Chennai airport ,Election Commission ,Income Tax Department ,
× RELATED மலேசியாவில் இருந்து தமிழக...