×

மலேசியாவில் இருந்து தமிழக தேர்தலுக்கு ரூ.200 கோடி ஹவாலா பணம் கடத்தலா? சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட வாலிபரிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை

சென்னை: சட்டவிரோத ஹவாலா பணம் பரிமாற்றம் செய்வதற்காக, மலேசியா வழியாக துபாய் நாட்டிற்கு செல்ல முயன்ற, சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரை, மலேசிய நாட்டு குடியுரிமை அதிகாரிகள், இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினர். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாணை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையைச் சேர்ந்தவர் வினோத்குமார் ஜோசப். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மலேசியா வழியாக துபாய் நாட்டிற்கு சுற்றுலா பயணியாக புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் மலேசியாவில் குடியுரிமை அதிகாரிகள் இவரை பிடித்து விசாரித்தனர். அப்போது இவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனைக்காக, வினோத் குமார் ஜோசப் இந்தியாவில் இருந்து, புறப்பட்டு வந்துள்ளார் என்றும் தெரிய வந்தது. இதை அடுத்து மலேசிய நாட்டிலிருந்து, அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் வினோத்குமார் ஜோசப்பை கடந்த 7ம் தேதி ஞாயிறு அன்று, மலேசிய நாட்டில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பினர். அதோடு இவர் குறித்து சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதை அடுத்து மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்ட வினோத்குமார் ஜோசப்பை, சென்னை விமான நிலையத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு அவருடைய செல்போன், லேப்டாப், ஐபேடு போன்றவைகளையும் ஆய்வு செய்தனர். அப்போது வினோத் குமார் ஜோசப், துபாயில் உள்ள செல்வம் என்பவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார் என்று தெரிய வந்தது. மேலும் வைர வியாபாரத்தில் தொடர்புடைய மோனிகா என்ற பெண்ணிடமும் இவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளதும் தெரிய வந்தது.

இதை அடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வினோத்குமார் ஜோசப், அப்பு என்ற ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. அந்த நபர், சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர் என்றும், தேர்தல் செலவினங்களுக்காக, துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணங்கள் பரிவர்த்தனை மூலம், ரூ.200 கோடி, இந்தியாவுக்கு கொண்டு வரும் திட்டத்துடன் வினோத் குமார் ஜோசப் செயல் பட்டதாகவும் தெரிய வந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கு அப்பு நெருக்கமாக இருப்பவர் என்றும் தெரிய வருகிறது.

எனவே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்காக ஹவாலா பணம் பரிமாற்றம் நடக்க இருந்ததா என்பது பற்றியும் மேலும் விசாரணை நடக்கிறது. இதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் மாலை, வினோத் குமார் ஜோசப்பை, மேல் விசாரணைக்காக, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள், வினோத்குமார் ஜோசப்பை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையின் முடிவில் தான் முழு தகவல்கள், வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்போதைக்கு வினோத்குமார் ஜோசப் மூலமாக, வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம் பரிமாற்றம் வழியாக ரூ.200 கோடி இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிட்ட பட்டது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

The post மலேசியாவில் இருந்து தமிழக தேர்தலுக்கு ரூ.200 கோடி ஹவாலா பணம் கடத்தலா? சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட வாலிபரிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Tamil Nadu election ,Chennai airport ,CHENNAI ,India ,Dubai ,Tamil ,Nadu election ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...