×

Twins எங்களின் அடையாளம்!

நன்றி குங்குமம் தோழி

நம்ம ஊரில் பாதிபேர் சூழ்நிலை காரணமாக பிடிச்ச படிப்பை படிக்க முடியாமலும், படிச்சதுக்கான வேலையை பார்க்க முடியாமலும் கிடைத்த படிப்பையும், வேலையிைனயும் செய்து கொண்டு இருக்காங்க. ஆனால் தந்தையின் விருப்பத்திற்காக படித்தாலும் அதை அடிப்படையாக வைத்து தங்களுடைய கனவை நிறைவேற்றி, தங்களுக்கென வாடிக்கையாளர்கள் மற்றும்
அவர்கள் தயாரிக்கும் ஆடைகளுக்கென தனி மதிப்பையும் பெற்றுள்ளனர் கோவையைச் சேர்ந்த சங்கீதா மற்றும் சரண்யா சகோதரிகள்.

‘‘நாங்க சகோதரிகள் ரெண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிச்சதுதான் எங்களுடைய இந்த ட்வின்ஸ் பொட்டிக். எனக்கு ஃபேஷன், உடைகள் வடிவமைப்பது மேல் தனி ஆர்வம் உண்டு. +2 முடிச்சதும், வீட்டில் எல்லோரும் இஞ்சினியரிங்தான் படிக்கணும்னு சொல்லிட்டாங்க. அதனால் நானும் என் சகோதரியும் பொறியியலில் சேர்ந்து படிச்சோம். இருப்பினும் ஃபேஷன் மேல் எனக்கு இருந்த ஆர்வம், அதனை பற்றி முறையா கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. கல்லூரிப் படிப்பை முடிச்சதும், பெங்களூரில் உள்ள IFT-ல் சேர்ந்து படித்தோம். 2015-ல் நாங்க சொந்தமாக ஒரு பொட்டிக்கை துவங்கினோம்’’ என்ற சங்கீதாவை தொடர்ந்து பேச ஆரம்பித்தார் சரண்யா.

‘‘நாங்க படிச்சது இஞ்சினியரிங்தான், ஆனால் ஃபேஷன் மேல் எங்களுக்கு இருந்த ஆர்வமும், இஞ்சினியரிங்கில் நாங்க கத்துகிட்டதும்தான் எங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனது என்றே சொல்லலாம். இஞ்சினியரிங் படிச்சிட்டு ஃபேஷன் துறையை தேர்வு செய்ததற்கு, நீங்க நேரடியாக ஃபேஷன் சம்பந்தப்பட்ட படிப்பையே படிச்சிருக்கலாமேன்னு நிறைய பேர் எங்களிடம் கேட்டாங்க. முன்பு சொன்னது போலவே எங்களுக்கு ஃபேஷன் மேல் ஆர்வம் இருந்தாலும், பொறியியலில் நாங்க படிச்ச படிப்புதான் தொழில்நுட்பரீதியாக எங்களின் தொழிலுக்கு பல உதவிகளை செய்துள்ளது.

எங்க பொட்டிக்கில் முழுக்க முழுக்க ஆட்டோமைஸ்ட் கட்டிங் மிஷினை அறிமுகம் செய்திருக்கிறோம். கடையை துவங்கும்போதே ெதாழில்நுட்பத்தினை அதில் புகுத்த வேண்டும் என்று முடிவு செய்துதான் நாங்க இதனை ஆரம்பிச்சோம். பெரிய துணிக் கடைகளில் அதிக அளவு துணிகளை வெட்டுவதற்குதான் ஆட்டோமைஸ்ட் இயந்திரங்களை பயன்படுத்துவாங்க. ஆனால் இங்கு ஒவ்வொரு தனி நபருக்கும் நாங்கள் ஆட்டோமைஸ்ட் கட்டிங் முறையில்தான் அவர்களுக்கான உடையினை கத்தரிக்கிறோம்.

கடையை துவங்கி நான்கு வருடம் கழிச்சு தான் இந்த இயந்திரங்களை நாங்க கொண்டு வந்தோம். கொரோனா வந்த சமயத்தில் ஆன்லைனில் கர்ப்பிணி பெண்களுக்கான துணிகளை தைத்து விற்கத் துவங்கினோம். இதில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான நிறம், டிசைன், அளவு என ஒவ்வொன்றையும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொடுத்தோம்’’ என்றவர் தங்களுடைய இணை நிறுவனமான FITT பற்றி விளக்கினார்.

‘‘எனக்கு டீச்சிங்கில் ஆர்வம் அதிகம். இந்த ெபாட்டிக் ஆரம்பிக்கும் முன்பே நான் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டு இருந்தேன்’’ என்றார் சரண்யா. ‘‘நாம் படிச்சதை அடிப்படையா வச்சு ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்த போதுதான் ஃபேஷன் குறித்த ஒரு பள்ளியினை ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சோம். அப்படித்தான் FITT School of Fashion உருவானது. எங்களை போல ஃபேஷன் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், தங்களுக்கு என்று ஒரு பொட்டிக் அல்லது துணிக்கடை அல்லது சிறிய அளவில் தையல் கடை வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காகவே துவங்கப்பட்டதுதான் இந்த பயிற்சி மையம்.

ஆரம்பத்தில் ஆறு மாதம் பயிற்சி மட்டும்தான் அறிமுகம் செய்திருந்தோம். ஒரு சிலர் அவர்களின் சொந்த தேவைக்காக கற்றுக்கொள்ள விரும்பினார்கள். அதற்கு குறைந்த கால கட்டத்தில் பயிற்சி அளிக்க சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்காக ஆரம்பிச்சதுதான் இரண்டு மாத கோர்ஸ். இங்கு ஒரு பெண் ஃபேஷன் துறையில் பொட்டிக் அல்லது துணிக்கடை அல்லது தையல் நிறுவனம் ஆரம்பிக்கும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள்தான் இங்கு பயிற்சி பெறுகிறார்கள்’’ என்ற சரண்யாவை தொடர்ந்தார் சங்கீதா.

‘‘ஆரம்பத்தில் பெண்களுக்கு மட்டும் தேவையான ஆடைகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் தைத்து கொடுத்தோம். கொரோனாவின் போது கர்ப்பிணி பெண்களுக்கென அவர்கள் விரும்பும் முறையில் கொண்டு வந்தோம். இதற்கிடையில் மணப்பெண்ணுக்கும் அவர்களுக்கு பிடித்த வகையில் ஆடைகளை தைக்க ஆரம்பித்தோம். கொரோனாவிற்கு பிறகு, தாய்மார்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் உடை தைத்து தரச் சொல்லி கேட்டாங்க.

அதனால் 2020ல் பெண்கள், அம்மாக்கள் அவர்களின் குழந்தைகளுக்கான ஆடைகளை வடிவமைத்து கொடுத்ததோடு, 2022 முதல் ஆண்களுக்கும் உடைகளை தைத்து வருகிறோம். அதாவது, ஒரு குடும்பத்துக்கே ஆடைகளை வடிமைக்கிறோம். இங்கு பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப, அவர்களுக்கு பிடித்த துணி, நிறம் மற்றும் டிசைன்களில் கஸ்டமைஸ் ெசய்து தருகிறோம்.

நாங்க எந்த உடைகளாக இருந்தாலும், 90% காட்டன் துணிகளையே பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு உடையும் டிசைன்களுக்கு ஏற்ப விலை மாறுபடும்’’ என்கிறார் சங்கீதா.ட்வின்ஸ் பொட்டிக் மற்றும் ஃபிட் (FITT) இரண்டிற்கும் பெயர் காரணம் பற்றி குறிப்பிட்ட சகோதரிகள் அதன் வேறுபாட்டை பற்றியும் விளக்கினார்கள். ‘ட்வின்ஸ்‘ என பெயர் வைக்க காரணம், நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ். அடுத்து கடையை எல்லாரும் சுலபமா நியாபகம் வச்சிக்கணும் என யோசித்துதான் இந்தப் பெயரை வைத்தோம். இது கேட்பவர்களின் மனதில் எளிதில் பதியும், வித்தியாசமாகவும் இருக்கும். FITT பொறுத்தவரை நாம் கடைகளில் வாங்கும் ரெடிமேட் துணிகள் அனைத்தும் அனைவருக்கும் சரியாக இருக்கும் என சொல்ல முடியாது. என்னதான் நம்முடைய அளவிற்கு ஏற்ப எடுத்தாலும் கொஞ்சமாவது அதில் மாற்றம் செய்த பிறகே பயன்படுத்த முடியும்.

ஆனால் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நாங்க தைக்கும் அனைத்து உடைகளும் ஃபிட்டாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இதற்கு பெயர் வைத்தோம். நாங்க ஸ்கூல் முதல் பெங்களூரில் டிசைனிங் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் வரைக்கும் ரெண்டு பேருமே ஒன்னாதான் படிச்சோம். கடையுமே இருவரும் சேர்ந்துதான் பார்த்துக்கொள்கிறோம். அதன் பின் என்னால் பொட்டிக்கை தனியாக நிர்வகிக்க முடியும் என்று தோன்றிய பிறகு பொட்டிக்கை நானும், பயிற்சி மையத்தினை சரண்யாவும் பார்த்துக் கொள்கிறோம்.

சாதாரணமாக நாம் கைகளால் ஒரு துணியை வெட்ட குறைந்தது 2 மணி நேரமாகும். இங்கு ஆட்டோமேட்டிக் மிஷின் மூலம் நமக்குத் தேவையான டிசைன்களில் குறைந்தபட்சம் 2 நிமிடங்களில் துணிகளை வெட்டிடலாம். தைப்பதற்கு வேண்டிய நேரம் கிடைப்பதால் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ேநர்த்தியாக தைக்க முடிகிறது. ஒருவரின் ஆர்டருக்கு அதிகபட்சமாக ஒரு வாரம் என்றாலும், அவசரம் என்றால் ஒரே நாளிலும் தைத்து கொடுத்துள்ளோம்.

எதிர்காலத்தில் எங்களுடைய பொட்டிக்கை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. வெளிநாடுகளுக்கு துணிகளை தைத்துக் கொடுத்து ஏற்றுமதி செய்வது குறித்தும் ப்ளான் செய்து வருகிறோம். நாங்க மெதுவாக செயல்படுவதாக எங்களின் அப்பா சொல்வார். எங்களைப் பொறுத்தவரை ‘slow and steady wins the race’ மேல் நம்பிக்கையுள்ளது. அதற்கு எங்களுக்கு கிடைச்ச வெற்றிதான் வாடிக்கையாளர்களின் நன்பகத்தன்மையும், ஆதரவும்’’ என்று புன்னகைத்தனர் இரட்டை சகோதரிகள்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post Twins எங்களின் அடையாளம்! appeared first on Dinakaran.

Tags : Kungumum ,Dinakaran ,
× RELATED Freedom Filling Station பெண் கைதிகளின் பெட்ரோல் பங்க்