×

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியின் போது போன் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது

திருமலை: தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியின்போது போன் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியினரின் தொலைபேசியை ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு தொலைப்பேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் துறை விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்கு முன்பு டி.எஸ்.பி. பிரனீத் ராவை போலீசார் கைது செய்தனர்.

இதில் போன் ஒட்டகேட்ட விவகாரம் அனைத்தும் அப்போதைய எஸ்.ஐ.பி தலைவர் பிரபாகர் ராவ் உத்தரவின் பேரில் நடந்ததாகவும் முனுகோடு, ஹுசூராபாத் உள்ளிட்ட சில இடைத்தேர்தல்களின் போது எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது விசாரணையின் போது முன்னாள் டிஎஸ்பி பிரனீத் ராவ் தெரிவித்தார். இதனையடுத்து முன்னாள் டிஎஸ்பி பிரனீத் ராவ் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையில் பிரனீத் ராவ் தெரிவித்த விவரத்தின் அடிப்படையில், இந்த போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் பூபாலப்பள்ளி கூடுதல் எஸ்.பி புஜங்கராவ், ஐதராபாத் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டிஜிபி திருப்பதண்ணா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தெலங்கானா தேர்தலின்போது புஜங்கராவ் அரசியல் புலனாய்வுத் துறையிலும், திருப்பதன்னா எஸ்.ஐ.பி.யிலும் கூடுதல் எஸ்பியாக பணியாற்றி வந்தபோது போன் ஒட்டுக்கேட்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்படி உயர் போலீஸ் அதிகாரிகளான புஜங்கராவ் மற்றும் திருப்பதண்ணாவை கைது செய்த போலீசார் போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கொம்பள்ளி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது இருவரையும் 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் பலர் இதில் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

The post தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியின் போது போன் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Chandrasekhara Rao ,Telangana ,Tirumala ,Chief Minister ,Dinakaran ,
× RELATED கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை