×

முத்துக்கள் முப்பது-பக்திப் பரவசம் தரும் பங்குனி உத்திரம்

1. முன்னுரை

மாதம், திதி, நட்சத்திரம் இவை மூன்றும் இணைந்த அற்புத நாள் தான் பங்குனி உத்திர நன்னாள் 12 மாதங்களிலேயே கடைசி மாதம் பங்குனி அதாவது 12 வது மாதம் அதே போலவே 12 வது நட்சத்திரம் உத்திர நட்சத்திரம். பன்னிரண்டாவது மாதமும் 12 வது நட்சத்திரமும் இணைந்த நாள் பங்குனி உத்திரம். அன்று முழு நிலவு நாள். இத்தனைச் சிறப்புகளும் நிறைந்த நாள் என்பதால் தான் பங்குனி உத்திர திருநாள் மிகச்சிறந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதைக் குறித்து 30 முத்துக்கள் என்ற தலைப்பில் காண்போம்.

2. நல்ல யோகமும் வாரமும் இணைந்த நாள்

இந்த வருடம் பங்குனி மாதம் பதினோராம் நாள் ஞாயிற்றுக்கிழமை (24.03.2024) பங்குனி உத்திரம் வருகின்றது. உத்தர நட்சத்திரம் காலை 11 மணி வரை இருக்கின்றது. சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் பூர நட்சத்திரம் முடிந்து உத்திர நட்சத்திரம் துவங்குகின்றது. சிம்ம ராசியில் உள்ள உத்திர நட்சத்திரத்தில் நுழையும் சந்திரன், தொடர்ந்து பயணித்து, கன்னி ராசியில் நுழையும் பொழுது நேர் ஏழாவது ராசியான மீன ராசியிலிருந்து சூரியனின் பார்வையை வாங்கி முழு நிலவாக பிரகாசிக்கிறது. உத்திர நட்சத்திரம் (1ம் பாதம்) துவங்கும் சிம்ம ராசிக்கு குருவின் பார்வை விழுகின்றது. சிம்ம ராசிக்குரிய மற்றும் உத்திர நட்சத்திற்குரிய சூரியன் ஆரோகண கதியில் தன்னுடைய உச்ச வீடான மேஷ ராசியை நோக்கி நகர்கிறது. சித்தயோகமும் அமிர்த யோகமும் கலந்த அற்புத நாளில் இவ்வாண்டு பங்குனி உத்திர நன்னாள் நிகழ்கிறது.

3.பௌர்ணமி ஏன்?

பௌர்ணமி நாளில் ஏன் உற்சவங்கள் என்கின்ற ஒரு கேள்வி எழும். சித்திரை பௌர்ணமி நாளில் சித்ரா பௌர்ணமியும், அடுத்து வைகாசி விசாகம் என வரிசையாக பௌர்ணமியை ஒட்டிய நாளின் உற்சவங்களும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன. காரணம், பெரும்பாலான கோயில்களின் உற்சவங்கள் இரவில் நிலவு வெளிச்சத்தில் நடைபெறும் என்பதால் பௌர்ணமி நாளை உற்சவ நாட்களாக நம்முடைய முன்னோர்கள் ஏற்பாடு செய்தனர். அதன் அடிப்படையில் தான் பங்குனி உத்திர நாளும் அடுத்து வருகின்ற சித்ரா பௌர்ணமியும், ஆவணி அவிட்டமும், கார்த்திகை தீபமும், தைப்பூசமும் மாசி மகமும் கொண்டாடப்படுகிறது.

4.பங்குனி உத்திர கிரக நிலைகள்

இவ்வாண்டு பங்குனி உத்திரம், பங்குனி மாதம் 11ஆம் தேதியும் சில பஞ்சாங்கங்களின் படி சில கோயில்களில், பங்குனி மாதம் 12 ஆம் தேதியும் என்று போட்டு இருக்கிறது. ஞாயிறு திங்கள் என இரண்டு நாட்களிலும் உத்திர நட்சத்திரம் இருப்பதால் சில ஆலயங்களில் அவர்கள் மரபுப்படி வெவ்வேறு நாட்களில் வைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. இந்த அடிப்படையில் கிரக நிலையை பார்க்கின்ற பொழுது கும்ப ராசியில் ஆரம்பித்து மேஷ ராசி வரை செவ்வாய், சுக்கிரன், சனி, புதன், ராகு, குரு என அத்தனை கிரகங்களும் அடுத்தடுத்த ராசியில் இருக்கக்கூடிய அற்புதத்தைக் காண முடிகிறது. கிட்டத்தட்ட கிரகமாலா யோகத்தின் அமைப்பில் இம்முறை பங்குனி உத்திரம் நிகழ்கிறது என்பது சிறப்பு.

5.எல்லா தெய்வங்களுக்கும் உரியது பங்குனி உத்திரம்

சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உகந்த திருநாளாக சில நாள் இருக்கும். சில உற்சவங்கள் குறிப்பிட்ட கோயில்களில் மட்டும் விசேஷ உற்சவங்களாக இருக்கும். ஆனால் பங்குனி உத்திரம், அநேகமாக எல்லா கோயில்களிலும் சிறப்பான திருநாளாக இருக்கும். முருகன் கோயில்களில் விசேஷமான வழிபாடும் அபிஷேகம் இருக்கும். சிவன் கோயில்களிலும் பங்குனி உத்திரம் விசேஷம். பல அம்மன் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். பல வைணவ கோயில்களிலும் (ஸ்ரீ ரங்கம் உட்பட) பங்குனி உத்திரம் விசேஷமான நாளாக கொண்டாடப்படும். இம்முறை முருகன் கோயில்கள் துவங்கி, சிவன் கோயில்கள் வழியே வைணவ கோயில் வைபவங்களோடு பங்குனி உத்திரத்தை அனுபவிப்போம்.

6.முருகன் ஞாபகம் வந்துவிடும்

பங்குனி உத்திரம் என்றாலே நமக்கு முருகன் ஞாபகம் வந்துவிடும் காரணம் அறுபடை வீடுகளில் ஆரம்பித்து சாதாரண கிராமங்களில் இருக்கக்கூடிய முருகன் கோயில்கள் உட்பட பங்குனி உத்திர திருநாள் பரவசமாய் கொண்டாடப்படும். நம்முடைய நாட்டில் மட்டுமல்லாது, சிங்கப்பூர், மலேசியா, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கனடா நாடுகள் நம் கலாச்சாரத்தோடு தொடர்புடைய நாடுகள், என பல நாடுகளிலும் பங்குனி உத்திரம் விசேஷம். விசேஷம் என்றால் நம் நாட்டைப் போலவே அன்றைக்கு காவடி எடுத்தல், பால்குடம் சுமத்தல் என அத்தனை வைப வைபவங்களோடு நடைபெறும்.

7.தெய்வத் திருமண நாள்

பங்குனி மாதத்தை மங்கல மாதம் என்றே சொல்கின்றன சாஸ்திரங்கள். சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் அரங்கேறி இருக்கின்றன.

1.பங்குனி உத்திரத்தன்று தான் சிவன் – பார்வதிக்கும் திருமணம் நடை பெற்றது.

2. தசரத மைந்தர்கள் ஸ்ரீ ராமன் – சீதை, லட்சுமணன் – ஊர்மிளா, பரதன் – மாண்டவி, சத்ருக்னன் – சுருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றது.

3.முருகன் – தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்றது.

4.பெருமாள் – மகாலட்சுமி திருமணம் நடைபெற்றது.

5.ஆண்டாள் ரெங்கமன்னார் திருமணம் நடைபெற்றது.

6.மதுரையில் மீனாட்சி திருமணம்

8. பங்குனி உத்திரத்தில் நடந்த விசேஷங்கள்

சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். பங்குனி உத்திர நன்னாளில் தான், அகத்தியர் லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்டதாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவர்களின் தலைவனான இந்திரன்-இந்திராணி திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். அது மட்டுமல்ல, நவக்கிரக மண்டலத்தில் உள்ள சந்திரன் அழகும் திறமையும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் செய்து கொண்டதும் இந்த பங்குனி உத்திர நாளில் தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. நந்திதேவர்-சுயசை திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான்.

9. எப்படி எளிமையாக விரதம் இருப்பது?

நினைத்ததெல்லாம் நிறைவேற்றும் பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இருக்கலாம். விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், பசி தாங்க முடியாதவர்கள் பால், பழம் அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் எடுத்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடி சங்கல்பம் செய்து கொண்டு விரதத்தைத் தொடங்கி விட வேண்டும். அன்று முழுதும் முருகன் நாமத்தை ஓதவேண்டும்.

பக்திப் பாமாலைகளை குழுவாகவோ தனியாகவோ பாடலாம். மாலையில் பெருமாள் முருகன், சிவன், கோயிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். பெருமாள் தாயார் அபிஷேகம் பாருங்கள் மற்றும் சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை பாருங்கள். ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம்சிவபுராணம், ஸ்கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் தேவாரம் போன்றவற்றைப் படிக்கலாம்.

10. குலதெய்வ வழிபாடும் பங்குனி உத்திரமும்

குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாளாகவும் பங்குனி உத்திரம் தினம் இருக்கிறது. இத்தினத்தில் குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், குலம் சிறக்கும். மூதாதையரின் ஆசியும் கிடைக்கும். திருமணம் ஆனவர்கள் கருத்து ஒற்றுமையுடன் வாழ உதவும் விரதம் இது. திருமணமாகாதவர்களும் நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்க இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். பங்குனி உத்திர நாளில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் சிறப்பானது.

செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணத் தடங்கலைச் சந்திப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று முருகனை மனமுருகி வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் சுபமாக முடியும் நம்மால் முடிந்த அளவுக்கு மஞ்சள், சரடு, குங்குமம், கண்ணாடி என மங்கலப் பொருட்களை பெண்களுக்கு வழங்குவதும் விசேஷ பலன் களைக் கொடுக்கும்.

11. பங்குனி உத்திர விரதத்தின் பலன்கள்

பங்குனி உத்திர விரதம் இருப்பதால்கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகம் இது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருப்பதோடு பலருடைய வாழ்க்கையிலும் நாம் காண முடியும். ஏதோ ஒரு பிறவியில் செய்த பாவங்கள் நமக்கு தீய பலனைத் தந்து, எந்தக் காரியத்தையும் முடிக்கவிடாமல் தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்தத் தடைகளை எல்லாம் உடைத்து விடும். பாவங்களை போக்குவதால் பாவங்களினால் வருகின்ற தீவினைகள் செயல்படாது. ஜாதக தோஷங்கள் நீங்கிவிடும்.

வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். இந்த விரதத்தை தொடர்ந்து 48 ஆண்டுகள் கடைபிடித்தால் சொர்க்கத்தை அடையலாம். அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், செவ்வாய் பலமடைவதால் போட்டி தேர்வுகளில் அரசு சார்ந்த காரியங்கள் நடக்கும். உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் தான். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

12. திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரம்

அறுபடைவீடுகளில் முதல் தலமான இந்தத் திருத்தலத்தை நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப்பரவியுள்ளனர். இங்கு சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய்ப் பெருமாள், கற்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்கையம்மன் ஆகிய ஐந்து தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டிய ஒரே குடைவரையில் அருள் பாலிக்கின்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனிப் பெருவிழா 15 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர வீதிகளில் வலம் வருவார்.

தங்ககுதிரை வாகனத்திலும், பூத வாகனத்திலும், அன்ன வாகனத்திலும், சேஷ வாகனத்திலும், வெள்ளி யானை வாகனத்திலும், தங்க மயில் வாகனத்திலும், ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், பச்சைக் குதிரை வாகனத்திலும், தங்க குதிரை வாகனத்திலும், தங்கமயில், குதிரை வாகனத்திலும், பச்சை குதிரை வாகனத்திலும், வெள்ளி யானை வாகனத்திலும், திருத்தேரிலும், தங்கமயில் வாகனத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூர சம்ஹார லீலையும், பட்டாபிஷேகமும், நடந்து திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. அடுத்தநாள் மாலை கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கும்.

13. பழனியில் பங்குனி உத்திரம்

திருவாவினன்குடி எனப்படும் பழனியில் பங்குனி உத்திர விழா 10 நாட்கள் விழாவாக நடத்தப்படும். இந்த ஆண்டு 18.03.2024 திங்கள் காலை கொடியேற்றத்துடன் தொடங்கும்.

18.3.2024 திங்கள் காலை கொடியேற்றம்
19.3.2024 செவ்வாய் இரவு 8 மணி வெள்ளி காமதேனு வாகனம்
20.3.2024 புதன் இரவு 8 மணி வெள்ளி ஆடு கிடா வாகனம்
21.3.2024 வியாழன் இரவு 8 மணி தங்க மயில் வாகனம்
22.3.2024 வெள்ளிக்கிழமை இரவு 7 மணி தங்க ரதம் இரவு 8.30 மணி யானை வாகனம்
23.3.2024 சனிக்கிழமை மாலை / இரவு திருக்கல்யாணம் இரவு 8.30 மணி வெள்ளி ரதம்
24.3.2024 ஞாயிறு பங்குனி உத்திரம் தேரோட்டம் நண்பகலில் திருத்தேர் எழுந்தருளல்
மாலை சுமார் 4 மணி திருத்தேர் வடம் பிடித்தல்
25.3.2024 திங்கள் இரவு தங்க குதிரை வாகனம்
26.3.2024 செவ்வாய் இரவு 7.30 மணி வெள்ளிபிடாரி மயில் வாகனம்
27.3.2024 புதன் இரவு கொடி இறக்குதல்.

14. திருச்செந்தூரில் பங்குனி உத்திரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, முருகன்- வள்ளி திருக்கல்யாணம் நடக்கும் அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை நடக்கும். அதிகாலை 5.30 மணிக்கு வள்ளியம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி சிவன் கோயிலை சேரும்.

மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கும். அதன்பிறகு மாலை 3.20 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயிலுக்கு வருவார். அங்கு வள்ளியம்மனுக்கு சுவாமி காட்சியளித்ததும் பந்தல் மண்டப முகப்பில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் தனிதனி சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகள் சுற்றி கோயிலை வந்து சேருவர். அன்றைய தினம் ராக்கால அபிஷேகம் கிடையாது. இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கபெருமான் – வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடக்கும்.

15. திருத்தணியில் பங்குனி உத்திரம்

திருத்தணி முருகன் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் “தணிகை’ என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு 108 பால் குட அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மயில் காவடி மற்றும் அலகுகள் குத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர். இரவு 7 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

16. அரசலாற்றில் யானை விரட்டு

முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது சுவாமிமலை. குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. சுவாமி மலையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் மிகச் சிறப்பான முறையில் நடைபெறும். பங்குனி உத்திர நன்னாளில் தான் முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என்று ஐதீகம்.

பங்குனி உற்சவம் தொடங்குகின்ற பொழுது காலை வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வருவார். ஐந்தாம் நாள் உற்சவத்தில் அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று சண்முகப் பெருமாளுக்கும் வள்ளி நாயகிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். பங்குனி உத்திரம் அன்று இரவு வள்ளி தேவசேனா சண்முகசாமி திருக்கல்யாண உற்சவம் நடந்து புறப்பாடு நடைபெறும். முருகப்பெருமான் வேடமூர்த்தி உருவத்தில் வீதி உலா வருவார். அடுத்த நாள் காலை 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

17. மருதமலையில் பங்குனி உத்திரம்

கொங்கு நாட்டு திருத்தலங்களில் ஒன்று மருதமலை. கோவைக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மருதமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். காலையில் கோ பூஜை நடந்து பக்தர்கள் தலையில் சுமந்து வரும் பால்குடம் பால் காவடிகள் என குடம் குடமாக மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் காலையில் விபூதி அலங்காரத்தில் காட்சி தருவார் இரத்தின அங்கி சாற்றி ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சி தருவார். வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் அர்த்தமண்டபத்தில் காட்சி தருவார். மாலை சாயரட்ஷ பூஜை முடிந்து தங்க ரதத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி காட்சி தருவார்.

18. குன்றத்தூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம்

குன்றத்தூர் முருகன் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அமைந்துள்ளது. சிறு குன்றின்மீது அமைந்துள்ள இக்கோயிலை தரிசிக்க 84 படிகளுக்கும் மேலாக ஏறிச்செல்ல வேண்டும். திருப்போரூரில் தாருகாசுரனை சம்ஹாரம் செய்தகுமரக்கடவுள், திருத்தணிகை செல்லும் வழியில் குன்றத்தூரில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் வழிபட்ட இறைவன், ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் குன்றத்தூரின் மலையடிவாரத்தில் தனிக்கோயில் கொண்டு அருள்கிறார்.

இந்தத் திருத்தலத்தில் மூலவராக சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக வடக்கு நோக்கி அருள்புரிகிறார். கருவறை சந்நதி முன்புள்ள துவாரபாலகர்களுக்கு வஜ்ரம், சூலாயுதம் என்று முருகனுக்கு உரிய ஆயுதங்கள் இருக்கின்றன. பெரிய புராணம் பாடிய சேக்கிழார் அவதரித்த இந்த ஊரில் பங்குனி உத்திரம் பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

19. வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர தெப்பம்

சென்னையில் பிரசித்திபெற்றவடபழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, 3 நாள் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதனையொட்டி 3 நாள்கள் லட்சார்ச்சனை நடைபெறும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடைபெறும். முதல் நாள் தெப்பத்தில் வடபழநிமுருகன் புறப்பாடும், இரண்டாம் நாளில் சண்முகர். வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாளில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடைபெறும்.

அதைப்போலவே திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது. பங்குனி உத்திரம் முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். 10 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் கோயிலுக்கு காவடி எடுத்து வருவர்.

20. திருப்போரூர் பங்குனி உத்திரம்

சென்னைக்கு அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோயில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயிலாகும். முருகன் அசுரர்களுடன் திருச் செந்தூரில் கடல், திருப்பரங்குன்றத்தில் நிலம் மற்றும் திருப்போரூரில் வான்வழி என மூன்று இடங்களில் சண்டையிட்டார். முருகன் தாருகா அசுரனை வென்றதால், இந்த இடம் போரூர் மற்றும் தாருகாபுரி மற்றும் சமரபுரி என அழைக்கப்படுகிறது. இங்கு வெகு விமர்சையாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படும். அன்றைய தினம் பக்தர்கள் காது குத்துதல், மொட்டை போடுதல், காவடி எடுத்தல் என நேர்த்திக்கடனை செலுத்துவர்.

வள்ளலார் ‘‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே’’ என்று பாடிய கந்தகோட்டம் முருகன் கோயிலிலும் பங்குனி உத்திரம் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
செங்குன்றத்தை அடுத்துள்ள சிறுவாபுரி முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் பங்குனி உத்திர பெருவிழா காண ஆயிரக்கணக்கில் கூடுவர். இங்கு அன்றைய தினம் தங்கள் வயலில் விளைந்த காய்கறிகளை மக்கள் கொண்டு வருவர். வணிகம் அற்புதமாக இருக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இனி, சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் நடை பெறும் வைபவத்தைக் காண்போம்.

21. மயிலையில் கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரம்

மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று போற்றப்படும் பெருமைக்கு உரியது மயிலாப்பூர். மாதந்தோறும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் மயிலாப்பூர். கபாலீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் திருவிழா நடைபெறும். 15 மார்ச் அன்று காலை: கிராம தேவதை பூஜை. நடந்து மாலையில் மிருத்சங்கிரஹமம், அங்குரார்பணம் நடைபெறும். கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறும்.

கோலவிழியம்மன்கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து வரிசை எடுத்து வரப்பட்டு, பொங்கல்வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கும். கபாலீஸ்வரர் கோவில் சார்பில் பங்குனி பெருவிழாவிற்கான பத்திரிகை, கோலவிழியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படும். இரவு நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகனம் மற்றும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிங்காரவேலர் சுவாமி மயில்வாகனம் வீதி உலா வருவர்.

22. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம்

கபாலீஸ்வரர் கோயிலில் 16 மார்ச் அன்று காலை: துவஜாரோஹணம் (கொடியேற்றம்) சுவாமி வெள்ளி பவழகால் விமானம் பஞ்சமூர்த்தி வீதி புறப்பாடும். இரவு / புன்னை மரம், கற்பக விருட்சம் மற்றும் வேங்கை மரம் வீதி உலாவும் நடைபெறும். 17 மார்ச் காலை: வெள்ளி சூர்ய பிரபை வாகனம் வீதி உலாவும் இரவு வெள்ளி சந்திர பிரபை வாகனம், கிளி வாகனம் மற்றும் ஹம்ச வாகனம் வீதி உலாவும்.

மார்ச் 18 காலை: வெள்ளி அதிகார நந்தி, கந்தர்வி மற்றும் கந்தர்வன் வாகன வீதி புறப்பாடும் இரவு வெள்ளி பூத வாகனம், பூதகி மற்றும் தாரகாசூர வாகன வீதி உலாவும் நடைபெறும். 19 மார்ச் காலை வெள்ளி புருஷா மிருக வாகனம், சிங்கம் மற்றும் புலி வாகன வீதி உலா நடந்து, இரவு நாக வாகனம், காமதேனு மற்றும் ஆடு வாகன வீதி உலா நடைபெறும். 20 மார்ச் காலை சவுடல் விமானம் புறப்பாடும், நள்ளிரவு வெள்ளி ரிஷப வாகனம், தங்க ரிஷப வாகனம் மற்றும் தங்க மயில் வாகனம் வீதி உலாவும் மறுநாள் 21 மார்ச் காலை பல்லக்கும், இரவு யானை வாகனம் வீதி புறப்பாடும் நடைபெறும்.22 மார்ச் அன்று காலை தேர் ஊர்வலம் அதி விசேஷமாக நடக்கும். இரவு திருப்புகழ் மற்றும் பஞ்சமூர்த்தி ஏகாந்த சேவை நடிக்கும்.

23. அறுபத்து மூவர் விழாவும் பங்குனி உத்திர கல்யாணமும்

திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றிய தலமும் 63 நாயன்மார்களில் வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதுமான மயிலைத் திருத்தலத்தில் மார்ச் 23 காலையில் திருஞானசம்பந்தர் அங்கம்பூம்பாவை உயிர்ப்பித்தல் விழா மேற்கு குளக்கரையில் உள்ள மண்டபத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மதியம் வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் திருக்காட்சி அருளும் அறுபத்து மூவர் திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.

வீதியெங்கும் மக்கள் வெள்ளம் அலைமோதும். நான்கு வீதிகளிலும் பக்தர்கள் இருந்து கொண்டு, உணவுப்பொட்டலங்கள், பானகம், மோர், விசிறி, பிஸ்கட்டுகள், இனிப்புகள் ஆகியவற்றை வழங்கு வார்கள். அன்று இரவு ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி அஸ்வ வாகனம் பார் வேட்டை விழா நடந்து நள்ளிரவில் பஞ்சமூர்த்தி ஏகாந்த சேவை நடக்கும் மார்ச் 24 அன்று காலை பஞ்சமூர்த்தி வெள்ளி கேடயம் வீதி புறப்பாடும் மாலையில் பிக்ஷாடனர் வீதி புறப்பாடும் நள்ளிரவில் பஞ்சமூர்த்தி வீதி புறப்பாடும் நடைபெறும்.

மார்ச் 25 அன்று திருக்கூத்தபிரான் (சின்ன நடராஜா) புறப்பாடு மற்றும் நடராஜ தீர்த்தவாரி, பஞ்சமூர்த்தி தீர்த்தவாரி புறப்பாடு நடைபெறும். மாலையில் திருகல்யாண மஹோத்சவம் கோலாகலமாக நடைபெறும். தொடர்ந்து கைலாய வாகனம் வீதி புறப்பாடும். நள்ளிரவில் துவஜாவரோஹணமும் (கொடியிறக்கம்) சண்டிகேஸ்வரர் உலாவும் நடைபெற்று மறுநாள் அதாவது மார்ச் 26 அன்று பந்தம் பரி விழா நடந்து பங்குனி விழா. நிறைவு பெறும்.

24. காஞ்சியில் அம்மனை சமாதானம் செய்யும் விழா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் சிறப்புமிகு திருவிழா பங்குனி உத்திரம். ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி பங்குனி உத்திர திருமண விழா கொடியேற்றம் துவங்கி தீர்த்தவாரி வரை 13 நாட்களும் அற்புதமான உற்சவம் நடைபெறும். ஒருநாள் அம்மனை சமாதானம் செய்து அழைக்கும் விழா நடைபெறும். சுவாரசியமான விழா. ஏகாம்பரநாதர் ஏலவார் குழலியின் திருமணத்திற்கு முன்தினம் பூனை குறுக்கே சென்றதால், ஏலவார் குழலி அம்மன் தன் தாய் வீட்டுக்கு சென்றதாகவும் அதன் பின் ஏகாம்பரநாதர் சமாதானம் செய்து திருமணத் திற்கு அழைத்து வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அந்நிகழ்வு இத்திருவிழாவில் ஒருநாள் நடைபெறும்.

25. ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி பங்குனி உத்திர கல்யாணம்

பங்குனி உத்திரம். அன்று மாலை சிம்ம வாகனத்தில் ஏகாம்பரநாதர் உலா வருகிறார். அதற்கு அடுத்த நாள் காலை சூரிய பிரபை உற்சவம், மாலை சந்திர பிரபை உற்சவம். மூன்றாம் நாள் அன்று பூத வாகனத்தில் சாமியின் தரிசனம். நான்காம் நாள் அன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் நாதர் உலா. அடுத்த நாள் ராவணேஸ்வரர் உற்சவம். ஆறாம் நாள் காலை அறுபத்தி மூவர் என்றழைக்கப்படும் 63 நாயன்மார்களின் உற்சவம் அன்று மாலை ஏகாம்பரநாதர் வெள்ளி தேரில் திருவீதி உலா.

அடுத்த நாள் கட்டைத்தேரில் (மரத்தேர்) பவனி. எட்டாம் நாள் குதிரை வாகனம். ஒன்பதாம் நாள் மாவடி சேவை, முன்பு சொன்ன அந்த மூன்று வெவ்வேறு சுவை கொண்ட மாம்பழம் தரும் மரத்தின் இலைகளை கொண்டு அலங் கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியின் உலா நடந்து அடுத்த நாள் காலை திருக்கல்யாண பெருவிழா நிறைவேறும். அதற்கு அடுத்த நாட்களில் ருத்ரகோட்டி உற்சவம், பஞ்ச மூர்த்தி உற்சவம் போன்றவை நிகழும். 13ஆம் நாள் நிகழ்வான தீர்த்தவாரி, கோயிலுக்கு அருகே உள்ள சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ, யானை உற்சவம் முடிந்த பின் கொடி இறக்கத்துடன் பங்குனி உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

26. திருவாரூர் ஆழித்தேர் 2024

பங்குனி மாதம் என்றாலே திருவாரூர் தேர் நினைவுக்கு வராமல் போகாது. தேவாரத் திருமுறையில் பாடப்பெற்ற ஒரே தேர் என்ற பெருமையை பெற்றது ஆழித்தேர். ‘‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே’’ என திருநாவுக்கரசரும், ‘‘தேராரும் நெடுவீதி திருவாரூர்’’ என சேக்கிழாரும் இத்தேரைப் பற்றி திருமுறைப் பதிகங்களில் பாடியுள்ளனர். 8 குதிரைகள் பூட்டி, பிரம்மா சாரதியாய், தியாகராஜர் அமர்த்தப்பட்டு ஆழித்தேர் பவனி வரும். அதன் முன்னே விநாயகர் தேர் முதலாகவும், சுப்பிரமணியர் தேர் இரண்டாவதாகவும் வரும். மூன்றாவதாய் ஆழித்தேரும் அதன் பின் நீலோத்பலாம்பாளின் தேரும் இறுதியில் சண்டிகேஸ்வரர் தேரும் பவனி வரும். தியாகராஜர் முன் இருவரும், பின் இருவருமாய்ச் சேர்த்து பஞ்ச மூர்த்தியாய் பவனி வருவர்.

27. பங்குனி ஆயில்யமும் பங்குனி உத்திரமும்

ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் ஆழித்தேர் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோடும் நான்கு வீதிகளிலும் வலம் வரும். இந்தத்தேரோட்டத்தை காணவும், வடம்பிடித்து இழுக்கவும் ஆயிரக்கணக்கில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருவதுண்டு. இந்த ஆண்டிற்கான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வருகின்ற மார்ச் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேரோட்டத் திருவிழா பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாரூர் கோயிலில் பங்குனி உத்திர நாளான 24.03.2024 அன்று கமலாலய தீர்த்தத்தில் (பெரிய குளம்) தீர்த்தவாரி நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு அருள்மிகு தியாகராஜ ஸ்வாமிக்கு சிறப்பு பங்குனி நீராட்டுப் பெருவிழா நடைபெறும். 25.03.2024 பங்குனி உத்திர நட்சத்திரத்தில் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு திருவடி (பாத தரிசனம்) தரும் வைபவம் நடைபெறும்.

28. பெருமாள் கோயில்களில் பங்குனி உத்திரம்

ஒவ்வொரு பெருமாள் கோயிலிலும் பங்குனி உற்சவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பங்குனி உத்திர ஆண்டாள் திருக்கல்யாணம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தில்லை கோவிந்தராஜரின் அவதார திருநட்சத்திரம் பங்குனி உத்திரம் என்பதால் அன்றைய தினம் காலை சிறப்பு திருமஞ்சனம் முடிந்து மாலை மட்டையடி சேவை நடக்கும். பிறகு ஏக ஆசனத்தில் தேவாதி தேவனுக்கும் புண்டரீகவல்லித்தாயாருக்கும் திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெறும்.

காஞ்சியில் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரம் அன்று காலை, 9:00 மணிக்கு பெருமாள், தாயார், மலையாள நாச்சியார் திருமஞ்சனம் நடைபெறும். அன்று மாலை உபய நாச்சியார், தயார் புறப்பாடாகி, நான்கு கால் மண்டபத்தில் மாலை மாற்றுதல் நடைபெறும். இன்று ஒருநாள் மட்டும் தாயார் சந்நதியில் பெருமாள் எழுந்தருள்வார்.

29. ஸ்ரீ ரங்கத்தில் சேர்த்தி சேவை

பங்குனி உத்திரம் என்பது மகாலட்சுமி தாயாரின் குறிப்பாக ஸ்ரீ ரங்கம் பெரிய பிராட்டியாரின் அவதார திருநட்சத்திரம். பங்குனியில் உத்திர நாள் பாருதித்தாள் வாழியே என்ற வாழித் திருநாமம் இந்த வைபவத்தைச் சொல்லும். ஸ்ரீ ரங்கத்தில் சேர்த்தி சேவை வைபவம் பங்குனி மாதம் நடைபெறும். பெருமாளுக்கும் தயாருக்கும் திருவூடல் நடந்து, (மட்டையடி உற்சவம்), நம்மாழ்வார் தூது சென்று சமாதானமாகி, பெருமாளை சேர்த்துக்கொள்ளும் வைபவம் சேர்த்தி வைபவம். ஆதி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான பங்குனி உத்திரத்தன்று “நம்பெருமாள்’ சித்திரை மாதம் உத்திர வீதிகளில் வலம் வந்து தாயார் சந்நயில் எழுந்தருள்வார். அப்போதுதான் சேர்த்தி வைபவம். பங்குனி உத்திர மண்டபத்தில் நடைபெறும்.

30. திருமங்கை ஆழ்வாரின்

பிரபந்தம் அவதரித்த தினம் பங்குனி உத்திர திருநாளில் தான் திருநகரியில் வேடு பறி உற்சவம் நடக்கும். அன்று மதியம் திருவாலியில் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் ஆகி, இரவு வேதராஜபுரம் (திருமணங்கொல்லை) என்ற இடத்தில் திருமங்கையாழ்வார் வழிமறித்து ஆபரணங்களை பறிக்கும் நிகழ்ச்சி 1000 தீவட்டிகளுடன் அமர்களமாக நடக்கும். அதன்பிறகு திருமந்திர உபதேசமாகி, ஆழ்வார் தனது பெரிய திருமொழி முதல் பத்து பாடத் துவங்குவார். இதனை ஆழ்வாரின் ஞான உற்சவமாகக் கொண்டாடுவார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பாரில் சிறந்த பங்குனி உத்திரத்தில் நாமும் பக்தியோடு கலப்போம். நன்மைகள் பெறுவோம்.

எஸ். கோகுலாச்சாரி

The post முத்துக்கள் முப்பது-பக்திப் பரவசம் தரும் பங்குனி உத்திரம் appeared first on Dinakaran.

Tags : Panguni ,
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...