×

மன உறுதியை தரும் பெரிடாட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கான ராசிக்கல் பசு மஞ்சள் நிறத்தில் உள்ள பெரிடாட் ஆகும். நல்ல அழகான பச்சை நிறத்தில் இருக்கும் பெரிடாட், புதன் ராசியான மிதுனம் கன்னி ராசியினருக்கு ஏற்ற, செலவு குறைந்த ரத்தினம் ஆகும். சிம்ம ராசிக்காரர்களும் பெரிடாட் அணியலாம். மரகதக் கல் வாங்கி அணிய வசதி இல்லாதவர்களுக்கு, பெரிடாட் ஒரு வரப் பிரசாதமாகும்.

பச்சை நிறமே.. பச்சை நிறமே.

ஒரே நிறம் கொண்ட ரத்தினங்களில், பெரிடாட்டும் ஒன்றாகும். மற்றவை பெரும்பாலும் இரண்டு மூன்று நிறங் களில் கிடைக்கும். ஆனால், பெரிடாட் ஒரே நிறம்தான். பெரிடாட், பச்சை, கரும்பச்சை, மஞ்சள் கலந்த பச்சை, சிவப்பு கலந்த பச்சை, கிளிப் பச்சை என அனைத்துப் பச்சை நிறங்களிலும் கிடைக்கும். அதில் இருக்கும் இரும்புத் துகள் போன்ற தூசுகளால் இந்நிற மாற்றங்கள் உண்டாகின்றன.

என்ன பலன்?

பெரிடாட், உடல் வலிமையை அதிகரிக்கும். மெட்டபாலிசத்தை உயர்த்தும். நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு, இந்த ரத்தினம் புதிய அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடம்பில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும். பெரிடாட் அணிவதால், மன உறுதியும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். படபடப்பு குறையும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படும் நிலை உருவாகும். அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் உருவாகி, அன்பும் நலமும் உண்டாகும்.

எப்போது எங்கு அணியலாம்?

பெரிடாட் பதித்த நகைகளை தினமும் அணியலாம். பெரிடாட், இருட்டிலும் பிரகாசமாக ஒளிவீசும் தன்மை உடையது. பசுமஞ்சள் நிறம் என்பது பெரிடாட்டின் நிறம் என்பதால் சிலர் இதனை “டோபாஸ்’’ என்றும், வேறு சிலர் “மரகதம்’’ என்றும் கருதுகின்றனர். இதனால், மேலைநாடுகளில் சிலர் “மாலை நேரத்து மரகதம்’’ என்று அழைப்பார்கள். (ஈவ்னிங் எமரால்டு) இதற்கு இந்த பசு மஞ்சள் நிறமே காரணமாகும்.

அதிர்ஷ்ட எண்

பெரிடாட் ஐந்தாம் எண்ணுக்குரிய ரத்தினம் ஆகும். 5,14,23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெரிடாட் ராசிக் கல்லாக அமைகின்றது. ராசி, லக்னம் தெரியாதவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரிடாட் வாங்கி அணியலாம். பெரிடாட் பதித்த மோதிரத்தை எந்த விரலிலும் எந்தக் கையிலும் அணியலாம் என்றாலும், இடது கையின் சுண்டுவிரலில் அணிவது மிகவும் பொருத்தமானதாகும்.

அனாகதத்தை எழுப்பும்

கழுத்தில் தங்கச்சங்கிலியில் பதக்கத்திலும், பெரிடாட் பதித்து வெளிநாட்டில் பெண்கள் அதிக அளவில் அணிகின்றனர். பெரிடாட் இதயத்தில் உள்ள அனாகதச் சக்கரத்தை எழுப்பும் சக்தி படைத்தது. இதயத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை சிந்தனைகளை விலக்கிவிடும். எனவே, நெஞ்சில் படுகின்ற வகையில் டாலர் செய்து அதில் பெரிடாட்டைப் பதித்து அணிவதால், மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். அனாகதச் சக்கரம் அடைபடும்போதுதான், மனதில் அச்சமும் தயக்கமும் உண்டாகும். யாரையும் நம்பாமல் எல்லோர் மீதும் சந்தேகம் தோன்றும். பெரிடாட், அனாகதச் சக்கரத்தை எழுப்பி செயல்படத் தூண்டுவதால் தன்னம்பிக்கை அதிகரித்து மனக்குழப்பம் நீங்கும்.

எப்போது அணியலாம்?

பெரிடாட் பதித்த நகைகளை இரவிலும் பகலிலும் எந்த நேரமும் அணியலாம். பெரிடாட் சிறந்ததா? மரகதம் சிறந்ததா? என்று கேட்டால், பார்ப்பதற்கு மரகதத்தைவிட பெரிடாட் பிரகாசமாக ஜொலிப்பதால், பலரும் இதனை விரும்புகின்றனர். ஆனால், மரகதத்திற்கு விலை மதிப்பு அதிகம், பெரிடாட்டுக்கு குறைவு.

மரகதமும் பெரிடாட்டும்

சிலர், மரகதக்கல் என்று சொல்லி பெரிடாட் கற்களை விற்று விடுவார்கள். காரணம், பெரிடாட் 500, 600 ரூபாய்க்குகூட கிடைக்கும். மரகதமணி என்று சொல்லாமல், வேறு பெயரில் பச்சை மணி என்று சொல்வார்கள். உலக அழகி கிளியோபாட்ரா அணிந்திருந்த நகை களில், மரகதக் கற்கள் நிறைய இருந்தன என்று பல நூற்றாண்டுகளாக நம்பி வந்தனர். ஆனால் சமீபத்தில்தான் அந்த கற்கள் மரகதங்கள் அல்ல பெரிடாட் ரத்தினங்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கண்டறிந்தனர்.

கண்ணீர்த் துளிகள்

உலக நாடுகளில் பெரிடாட், ஹவாய் தீவுகளில் அதிகம் விரும்பி அணியப்படுகின்றது. அதற்குக் காரணம், அங்குள்ள கடற்கரையில் இந்த பெரிடாட் கற்கள் துகள்களாகவே நிறைய கிடைக்கின்றன. அங்கு இதனை “பெலி’’ என்ற தேவதையின் கண்ணீர் என்று அழைக்கின்றனர். பெலி என்பவள், ஹவாய்த் தீவுக்குச் சென்று அங்கு பல எரிமலைகளை உற்பத்தி செய்தாள். அவளுடைய சகோதரி அங்கு வந்து மிகப் பெரிய வெள்ளத்தைக் கொட்டி, கடல்நீரைக் கொட்டி, அந்த எரிமலைகளை அணைத்தாள். அப்போது பெலியின் கண்ணீர்த் துளிகள் கீழே விழுந்துபச்சை நிறக் கற்களாயின. கடற்கரை ஓரமெங்கும் தெறித்தன, என்று ஒரு தொன்மக்கதை நிலவுகின்றது. ஹவாய்க்குச் சொந்தமான எந்த பொருளையும் ஹவாய் தீவிலிருந்து வெளியே எடுத்துச் சென்றால், அது அவர்களுக்கு பெரிய சாபம் ஆகிவிடும் என்றும், பெலி சாபமிட்டாள்.

எங்கெங்கு கிடைக்கும்?

பாகிஸ்தான், லங்கா, சவுதி, அரேபியா, சீனா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, அரேபியா, இந்தியா போன்ற நாடுகளிலும் பெரிடாட் சுரங்கங்கள் உள்ளன.ஆனால், பர்மாவில் கிடைக்கும் பெரிடாட்தான், பெரிடாட் வகைகளிலேயே மிகச் சிறந்ததும், விலை உயர்ந்ததும் ஆகும்.

எகிப்தின் சூரிய ரத்தினம்

எகிப்தியர்கள், பெரிடாட்டை “சூரிய ரத்தினம்’’ என்று அழைத்தனர். முதன் முதலில் எகிப்தின் செங்கடலுக்கு அருகிலுள்ள டோபாஸ் தீவில், பெரிடாட் கண்டறியப்பட்டது. எகிப்தில், கி.மு.1500ல் பேப்பிரஸ் சுருள்களில் எழுதப்பட்ட பதிவுகளில், பெரிடாட் சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டது பற்றிய குறிப்பு உள்ளது. எகிப்து நாட்டு மன்னர்கள், பெரிடாட் கிடைத்த தீவுக்குள் யாரையும் அனுமதிக்காமல், வெட்டி வெட்டி எடுத்தனர். பெரிடாட்டை நுணுக்கி தூளாக்கி அதனை ஆஸ்துமாவை சுகப்படுத்தவும், அக்காலத்தில் பயன்படுத்தினர்.

இந்தியாவில் பெரிடாட்

இமயமலையின் அடிவாரத்தில், பெரிடாட் சுரங்கங்கள் உள்ளன. இங்கு அதிகளவில் பெரிடாட் வெட்டி எடுக்கப் படுகின்றது. எரிமலை உருகிக் குளிர்ந்து இறுகிக் காணப்படும் பாறைகளில்தான், பெரிடாட் கிடைக்கும். பெரிடாட் ரத்தினத்தை ஜெர்மன் சில்வரில் மோதிரம் செய்து விரலில் அணிந்து கொள்பவர்கள் ஏராளம்.

எந்தத் தொழிலுக்கு ஏற்றம் தரும்?

பெரிடாட் பச்சை நிறத்தில் இருப்பதால், இதனை புதன் கிரகத்தோடு தொடர்பு கொண்டு, புதன் கிரகத்தின் சக்தியை பெற விரும்புகின்ற கணக்கர், வங்கிப் பணியாளர், நிதியாளர், மாணவர்கள், வக்கீல், பிரசங்கி, பாடகர், பேச்சாளர், விற்பனை பிரதிநிதிகள் போன்றவர்கள் மரகதத்திற்குப் பதிலாக, பெரிடாட் வாங்கி அணிவதால், தங்களின் தொழிலில் மேன்மை அடைவர். பெரிடாட் புத்தி ஏற்றத்துக்குரிய ரத்தினம் என்பதால், புத்தித் தெளிவை கொடுக்க வல்லது. இது மனக் காயத்தை ஆற்றும் மனக்குழப்பத்தை நீக்கி, வார்த்தையில் தெளிவும் உள்ளத்தில் அமைதியும் உண்டாக்கும். சிலர் ருத்ராட்சத்தோடு சேர்த்தும் அணிவர். இவ்வாறு அணிந்து கொள்வதால், மனம் அமைதியும் நிதானமும் பெறும். ஆன்மிக சிந்தனை பெருகும்.

 

The post மன உறுதியை தரும் பெரிடாட் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…