×

சுந்தரத் தமிழுக்காக தன்னையே அடகுவைத்த ஈசன்

வயல்களில் நெல்மலிந்து இருக்க, வீதி எங்கும் தமிழ் சொல் செழித்து இருக்க, வெஞ்சமாகூடல் நகரமே அழகாகக் காட்சி தந்தது. குபேரனின் அளகாபுரி இதுதானோ! என்று காண்போரை மலைக்க வைக்கும் அழகு. வீரமும், செல்வமும், ஞானமும், யோகமும் செழித்து விளங்கும் அந்த அற்புத நகரத்தில் வந்து சேர்ந்தார், தமிழ் வாழவந்த சுந்தர மூர்த்தி நாயனார். திருவாரூரில் தில்லைக்கு வா என்று அழைத்து, தில்லையில் ‘‘எம்மை உனக்கு தோழனாக தந்தோம்’’ என்று, ஈசனால் அருளி ஆட்கொள்ளப் பட்ட தம்பிரான் தோழர். இவரது காதலி பரவை, இவர் மீது கோபம் கொண்ட போது, சுந்தரரோடுக் கொண்ட தோழமைக்கும், அவரது தேன் சொல் தமிழுக்கும் அடிப் பணிந்து, மாலும் அயனும் தேடியும் காணா மலரடிகள் திவாரூர் வீதியில் தோய பல முறை தூது போனார் ஈசன்.

சுந்தரருக்கு உனது தந்தை, தாயை கூர்ந்துபலவாறு அருளி இருக்கிறார். அப்படிப்பட்ட ஈசனின் வழியில் வந்த முருகா, நீ என்னை கைவிடலாகாது என்று அருணகிரிநாதரும்கூட சுந்தரருக்கு ஈசன் அருளிய மகிமையை பின்வரும் படி பாடுகிறார்.

‘‘பரவைக் கெத்தனை …… விசைதூது
பகரற் குற்றவ …… ரெனமாணுன்
மரபுக் குச்சித …… ப்ரபுவாக
வரமெத் தத்தர …… வருவாயே’’

இப்படி பெருமைகள் பல உடைய சுந்தரர், வெஞ்சமாடக்கூடல் ஈசனை, கண்ணாரக் கண்டு, வாயாரப் பாடி, மனமார வழிபட்டு, அழுதார், தொழுதார், துதித்தார். அப்படி ஈசனை துதிக்கும் போதுதான் அவருக்கு ஒரு நினைவு வந்தது. தனது இல்லத்தில், சிவனடி யார்களுக்கு தொண்டு செய்ய வேண்டி வைத்திருந்த நிதி அத்தனையும் தீர்ந்துவிட்டது என்று, பரவை நாச்சியாரும் சங்கிலி நாச்சியாரும் சொன்னது சுந்தரரின் நினைவில் வந்து நிழலாடியது.

இறைவனைத் தவிர வேறு புகழ் ஏதும் அறியாத சுந்தரர், சிவனடியார்களுக்கு சேவை செய்ய, பொருள் தந்து உதவுமாறு ஈசனை வேண்டிக்கொண்டார். அவரது பிரார்த்தனைக்கு செவி சாய்த்த ஈசன், ‘‘அப்பனே உனக்கு தரும் அளவு என்னிடம் பொன்னும் பொருளும் இல்லை’’ என்று கருவறையில் இருந்து குரல் கொடுத்தார். ஈசன் சொன்ன பதிலை நம்பி ஆரூரரால் நம்பவே முடியவில்லை.

‘‘ஈசனே நீ வாழ்வது வெள்ளிப் பனிமலை. உனது மாமனார் மலைகளுக்கு எல்லாம் அதிபதியான இமவான். உனது வில்லோ, தங்க மலையான மேருமலை, குபேரன் உனது நண்பன், காமதேனு உனது தொண்டன், கற்பகமரம் கைலாயத்தில் உனது இல்லத்தின் புழக்கடையில் இருக்கிறது. இப்படிப் பட்ட உன்னிடம் செல்வம் இல்லை என்று சொன்னால் யார் நம்புவார்கள்.? நம்பினாற் கெடுவதில்லை என்பது நான்மறை தீர்ப்பு. அந்த தீர்ப்பை பொய்யாக்க சித்தமோ? `அப்பனே என்னிடம் பரிகாசம் வேண்டாம். ஏழை என்மீது உனக்கு பரிதாபம் ஏற்படவில்லையா?’. `விளையாடியது போதும். சிவனடியார்களுக்கு சேவை செய்ய பொன்னும் பொருளும் மணியும் தந்தருள வேண்டும், பொன்னார் மேனியனே!’’ என்று இறைவனிடம் உளமார இறைஞ்சினார்.

ஆனால், இறைவனது சித்தம் வேறாக இருந்தது. அவர் ஒரு திருவிளையாடல் செய்ய எண்ணினார். அந்த திருவிளையாடல் மூலம் சுந்தரரின் பக்தியை உலகறியச் செய்யவும், அதே சமயம், சுந்தரரின் கோரிக்கையை நிறைவேற்றவும், திருவுள்ளம் கொண்டார். அதன்படி ஒரு கிழ அந்தணர் வடிவம் தாங்கினார். பழ மறைகள் பழகி, சிவந்த பதாம்புயம் கொண்ட இறைவி, கிழவி வடிவம் தாங்கினாள். வேழமுகனும் வேலவனும் அந்த முதிய தம்பதிகளின் குழந்தையாக மாறினார்கள். தனது மொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு, கடைவீதிக்கு வந்தார் இறைவன். அவ்வூரில் சிவபக்தியில் சிறந்த ஒரு ஆய்ச்சி இருந்தாள். அவளுடைய கடையைத் தேடிச் சென்றார் இறைவன்.

அவளிடம் சென்ற பெருமான், தனது மனைவியையும் மக்களையும் ஈடாக வைத்துக்கொண்டு, பொன்னும் பொருளும் தரவேண்டும் என்று வேண்டினார். அந்த முதியவரின் முகத்தில் இருந்த தேஜஸ், அந்த ஆய்மகளின் உள்ளத்தை கொள்ளை கொண்டது. தன்னையும் அறியாமல் இறைவனை கைகுவித்து வணங்கியவள், இறைவன் சொன்னவாறே பிள்ளைகளை பெற்றுக் கொண்டு பொன்னும் பொருளும் தந்தாள். அந்த பொன்னையும் பொருளையும் சுந்தரரின் தமிழுக்கு ஈடாக தந்தார், இறைவன். மறுநாள் கோயிலில் விநாயகர் சிலையும், முருகன் சிலையும் காணாமல் ஊரே அல்லோலகல்லோலப்பட்டது.

ஆனால், ஆய்மகள் இல்லத்தில் அடமானம் வைக்கப்பட்ட பிள்ளைக்கு பதில், கோயில் விக்ரகங்கள் இருந்தன. அதைக் கண்ட ஆய்மகளும் ஊர் மக்களும் அதி சயித்து நின்றார்கள். அப்போது அசரீயாக இறைவனின் குரல் ஒலித்தது.‘‘தம்பிரான் தோழனின் பெருமையை உலகறியச் செய்யவே இந்த நாடகத்தை யாம் ஆடினோம். பக்தியால் உருகி என்னை வணங்கிய ஆய்மகளுக்கும் அருள எண்ணினோம், அதன் பொருட்டே இந்த நாடகம். கலக்கம் நீங்கி, அமைதி அடையுங்கள்.

ஆசிகள்’’ என்று ஈசனின் குரல் வானில் ஒலித்து, அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. ஈசனின் ஈடில்லாக் கருணையையும், தமிழ்மீது அவருக்கு இருந்த காதலையும், போற்றியும் புகழ்ந்தும் மக்கள் பரவசமடைந்தார்கள். பெரிய புராணத்தில் இல்லாத இந்த அற்புதத் தகவல், ‘‘திருவெஞ்சமாகூடல்’’ தலபுராணத்தில் உள்ளது. இந்த அற்புதத்தை கொங்கு மண்டல சதகம் பின் வருமாறு பாடுகிறது.

‘‘கிழவேதிய வடிவாகி விருத்தையைக் கிட்டி எந்தன்
அழகாகு மக்களடகு கொண்டம் பொனருடி என்றெற்ற
எழுகாதலால் தமிழ் பாடிய சுந்தரர்க்கு ஈந்த ஒரு
மழு ஏந்திய விகிர்தேசுரன் வாழ் கொங்கு மண்டலமே.’’

வெஞ்சமாகூடல் தலத்திற்கு பெருமைகள் பல உண்டு. இங்கு எழுந்து அருளி இருக்கும் ஆறுமுக எம்பெருமானை, அருணகிரிநாதர் பாடி இருக்கிறார். மணிமுத்தாறு குடகனாறு என்ற இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் ஊர் என்பதால், கூடல் என்று இந்த தலத்திற்கு பெயர். இந்த தலத்து இறைவனின் திருநாமம் விகிர்தீஷ்வரர் என்பதாகும். அதாவது நன்மைகள் தரும் இறைவன் என்று திருநாமம். இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இறைவனை தரிசித்துவிட்டு, திரும்பும் அடியவர்கள் படிகளில் ஏறி வெளியே வரும் படியாக ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த இறைவனை தரிசித்த உடனேயே வாழ்கையில் இனி ஏறுமுகம்தான் என்று இந்த அமைப்பு சொல்லாமல் சொல்கிறது.

கவுதம முனிவருக்கு அபச்சாரம் செய்து, அவரிடமிருந்து சாபம் பெற்ற இந்திரன், இங்கே வந்து இத்தல இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக வரலாறு. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப் பட்ட தலம். தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலத்தில் இது ஐந்தாவது தலம் என்பதும், குறிப்பிடத் தக்கது. அடியாருக்கு அருளும் பொருட்டு தனது மக்களையே அடகு வைத்த கருணைக் கடலான இறைவனை நாமும் சென்று வழிபட்டு பெரும் பேறு அடைவோம்.

ஜி.மகேஷ்

The post சுந்தரத் தமிழுக்காக தன்னையே அடகுவைத்த ஈசன் appeared first on Dinakaran.

Tags : Eason ,Venjamakoodal ,Kuberan ,Alakapuri ,
× RELATED புத்திர தோஷம் நீக்கும் திருத்தலம்