×

திருமண வரம் அருள்வான் திருப்பரங்குன்ற சுப்பிரமணியன்

ஆறுமுகப்பெருமானின் அறுபடைவீடுகளுள் முதலாவது படைவீடாக திகழ்கிறது திருப்பரங்குன்றம். 300 அடி உயரமும் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்ட குன்றின் மேல் குடைவரைக் கருவறையில் நின்ற கோலத்தில் அருள்கிறார் பெருமான். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்களில் 4ம் இடம் வகிப்பது முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம். சூரபத்மனை வென்று தேவர்களை மீட்டார் முருகன். சூரசம்ஹாரத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்தது திருப்பரங்குன்றம் தலத்தில்தான். ஆனால், இத்தலம் ஒரு சிவஸ்தலம். இங்கு அவருடைய பிரதிநிதியாக முருகன் திகழ்கிறார். நாளடைவில் இத்திருத்தலம் முருகன் கோயிலாகவே திகழ ஆரம்பித்தது.

கோயிலின் மூலஸ்தானத்தில் கணபதி, முருகன், சிவன், துர்க்கை, சூரியன், விஷ்ணு என 6 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் ஷண்மத வழிபாட்டு முறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது தெரியவருகிறது. இந்த அறுவரும் குடவரைச் சிற்பங்களாக காட்சியளிக்கிறார்கள். சைவக்கடவுளான சிவனும், வைணவக்கடவுளான விஷ்ணுவும் ஒருங்கே மூலஸ்தானத்தில் இடம்பெற்றிருப்பது அக்காலத்திய மக்களின் சமய நல்லிணக்கத்தை உணர்த்துகிறது.

மூலஸ்தானத்தில் லிங்க ரூப சத்தியகிரீஸ்வரர், பின்னால் சோமாஸ்கந்தர், அடுத்தடுத்து கணபதி, துர்க்கை ஆகியோர் குடவரை சிற்பங்களாகக் காட்சி தருகின்றனர். பின்னர் முருகன், தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து கலியுக வரதனாய் வேண்டுவோர்க்கு வேண்டுவன அளித்து வருகிறார். இவரை சுற்றி நாரதர், சந்திரன், சூரியன் – தேவியர் சிற்பங்களாகக் காணப்படுகிறார்கள். இவர்களை அடுத்து பவளக்கனிவாய் பெருமாள் மகாலட்சுமியுடன் வீற்றிருக்கிறார்.

பரன் எனும் சொல் ஈசனைக் குறிப்பதாகும். லிங்க வடிவில் இருக்கும் இக்குன்று பரங்குன்றம் என முன்பு அழைக்கப்பட்டது. பிறகு பாடல் பெற்ற தலமாதலால் திருப்பரங்குன்றம் என்றாயிற்று. ஆலயம், முக மண்டபம், திருவாட்சி மண்டபம், மகா மண்டபம், கம்பத்தடி மண்டபம், வசந்த மண்டபம் மற்றும் அர்த்த மண்டபத்தோடு விளங்குகிறது. முகமண்டபம் 48 தூண்கள் கொண்டது. அதில் ஒரு தூணில் இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜப் பெருமானின் திருவுரு மனதைக் கவர்கிறது. ஆலயத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நதி இல்லை. சனி பகவான் மட்டும் மகாமண்டபத்தில் கோயில் கொண்டுள்ளார். இத்தல முருகன் சுப்பிரமணிய சுவாமி எனும் திருநாமம் கொண்டு அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவரின் திருவுருவின் இடதுபுறம் தெய்வானையும், வலதுபுறம் நாரத முனிவரும் வீற்றுள்ளனர்.

முருகப்பெருமானின் திருவுருவின் முன் அவரது வாகனங்களான யானை, ஆடு உருவங்களும் முருகனின் காவல் தெய்வங்களும் பாறையில் வடிக்கப்பட்டுள்ளன. யானை இந்திரனின் வாகனமான ஐராவதம் என்றும், அவன் மகளான தெய்வானையைப் பிரிய மனமில்லாமல் முருகப் பெருமானுக்குத் தொண்டு செய்ய வந்ததாகவும் ஐதீகம். பரங்கிநாதர், ஆவுடைநாயகி, கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், மகாலட்சுமி ஆகியோருக்கான ஐந்து சந்நதிகளும் ஐந்து குகைக் கோயில்களாக அமைந்து தனித்தனியே இருக்கின்றன. இத்தல பவளக்கனிவாய் பெருமாள் சித்திரை மாதம் மதுரை மீனாட்சி திருமணத்திற்கு 4 நாட்கள் முன்னதாகவே மதுரைக்குச் சென்று பின் திரும்புவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைகாசி மாத விழாவின் நிறைவுநாளில் பக்தர்கள் ஷண்முகருக்கு பால்காவடி எடுத்து வந்து பாலபிஷேகம் செய்கிறார்கள். சிறியதும், பெரியதுமான இரு தேர்கள் இத்தலத்தில் உள்ளன. தை மாதம் தெப்பம், கார்த்திகைத் திருவிழாவில் சிறிய தேரிலும், பங்குனித் திருவிழாவில் பெரிய தேரிலும் முருகப் பெருமான் நான்கு ரதவீதிகளிலும் வலம் வருவார். சூரசம்ஹார நிறைவிற்குப் பின் முருகப்பெருமான் தன் படைவீரர்களுடன் இத்தலத்தில் தங்கியிருந்ததாக புராணம் சொல்கிறது. இத்தலத்திற்கு திருப்பணி செய்த மன்னர்களைப் பற்றி ஆலயத்தில் 41 கல்வெட்டுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்புகழ், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் இத்தல மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தக் குன்றின் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை முருகனின் கை வேலால் உண்டாக்கப்பட்டதாக ஐதீகம். இதைத்தவிர சித்த, மண்டல, கல்யாண, பாண்டவ, லட்சுமி, பிரம்ம, புஷ்பமாதவ, புத்திர, சத்ய, பாதாள கங்கை போன்ற தீர்த்தங்களும் உள்ளன. கல்லத்தி மரம் இத்தலத்தின் தல விருட்சமாக விளங்குகிறது. மதுரைக்குத் தென்மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.

தொகுப்பு: மகி

The post திருமண வரம் அருள்வான் திருப்பரங்குன்ற சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Tiruparangunra Subramanian ,Tiruparangunram ,Lord ,Arumuga ,Kolam ,Pandyan ,
× RELATED ஆவின் பாலகத்தை உடைத்து நெய், பால், பணம் திருட்டு