புதுடெல்லி: ஜன் அதிகார் கட்சியின் தலைவர் பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததோடு தனது கட்சியையும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். பீகாரில் முக்கிய அரசியல் தலைவராக கருதப்படுபவர் ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்பு யாதவ். 5 முறை எம்பியான பப்பு யாதவ், காங்கிரஸ் மாநிலங்களவை எம்பியான ரஞ்சித் ரஞ்சனின் கணவர். மேலும் சீமாஞ்சல் பகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்கவர். இந்நிலையில் பப்பு யாதவ் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் தனது கட்சியையும் அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார். தனது முடிவை அவர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து பப்பு யாதவ் மற்றும் அவரது மகன் சர்தாக் ரஞ்சன் மற்றும் கட்சியின் இதர தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இது குறித்து யாதவ் கூறுகையில்,‘‘ சர்வாதிகாரிக்கு எதிரான ராகுல்காந்தியின் போராட்டத்தில் இணைவதை தவிர வேறு வழியில்லை” என்றார். இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் அம்ரோகா மக்களவை தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியான டேனிஷ் அலி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன்னிலையில் டேனிஷ் அலி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
The post காங். கட்சியில் சேர்ந்தார் பப்பு யாதவ் appeared first on Dinakaran.