×

சென்னையின் முதல் பேனா கண்காட்சி!

நன்றி குங்குமம் தோழி

‘‘உழுத நீலக் குருதியிழப்பு, உலகின்
பழுது சுட்டி, அழுக்கு விலக்கும்.
புத்துணர்வு பதியமிடும் கூர்முனை
பேனாவை உடைத்து அழிக்கலாம்,
அதில் ஊனாகும் உயிர்க் கனவு அழியாது” என்னும் கவிஞர் வேதாவின் வரிகளுக்கு ஏற்ப, பேனா ஒவ்வொரு மனிதரின் வாழ்வில் முக்கியமானது. அது சிலரின் தலையெழுத்தை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதமாகவும் உள்ளது. இத்தகைய பேனாவும் நாட்குறிப்பும்தான் நம்முடைய முதல் நண்பன். பலரிடம் சொல்ல முடியாத வார்த்தைகளையும் கூட இந்த பேனாக்களின் மூலம் நாம் பகிர்ந்து கொண்டிருப்போம். அதுபோக, பலரின் சிந்தனையை தூண்டும் வகையில் இதே பேனாவை கொண்டு புரட்சியும் செய்திருப்போம்.

தொலை தூரத்தில் இருக்கும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள நினைப்பதை எழுத்து வடிவமாக கொடுப்பதாக இருந்தாலும், நம் எண்ணங்களை பகிர்வதாக இருந்தாலும், அங்கு பேனா முக்கியமானதாகத்தான் இருக்கும். ஆனால் தற்போது எந்த ஒரு விஷயத்தையும் உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலமாக பகிர்ந்து வருகிறோம். தற்போது எந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து வருகிறதோ அதே அளவிற்கு எழுத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது.

ஒரு புத்தகம் அல்லது கவிதை எழுதுவதாக இருந்தாலும், போனில் உள்ள ஆப்புகளை பயன்படுத்தி நிமிடத்தில் எழுதி முடித்து விடுகின்றனர். இருப்பினும் ஒரு சில எழுத்தாளர்கள் இன்றும் பேனாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தாங்கள் அதை பயன்படுத்துவதோடு, வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரையும் பயன்படுத்த ஊக்குவிக்கின்றனர். அத்தகைய பேனாக்களை தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களை ஒன்றுதிரட்டி சென்னையில் ஒரு பேனா கண்காட்சியினை நடத்திகாட்டியுள்ளனர் சேஃபர் (Sheaffer) மற்றும் எண்ட்லெஸ் (Endless) நிறுவனங்கள். பேனா கண்காட்சியினை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் எண்ட்லெஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான தீரஜ், சாய் மாளவிகா தீரஜ் மற்றும் ஆதித்யா பன்சாலி.

‘‘சேஃபர் மற்றும் எண்ட்லெஸ் இரு நிறுவனங்களும் இணைந்துதான் இந்த கண்காட்சியினை சென்னையில் நடத்தி உள்ளனர். இங்கு ரங்கா, காமா, எ.எஸ்.ஏ என 100க்கும் மேற்பட்ட பேனா பிராண்டுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டு இருந்தனர். பொதுவாக கண்காட்சி என்றால் சின்னச் சின்ன ஸ்டால்ஸ் மாதிரியான அமைப்பு இருக்கும். அதில் சில ஸ்டேஷ்னரி பொருட்கள் கொண்ட கடைகள் ஒன்று இரண்டு கடைகள் கொண்டு நடத்துவது வழக்கமாக இருந்தது.

ஆனால் இந்த பேனா கண்காட்சியில் அப்படி இருக்கக்கூடாது என்று நாங்க நினைத்திருந்தோம். மற்ற கண்காட்சிகளை விட மாறுபட்டு இருக்க வேண்டும் என்று நினைத்துதான் நாங்க இந்த கண்காட்சியினை நடத்தினோம். இங்கு இருக்கும் பேனாக்கள் மற்றும் அதன் நிறுவனங்கள் கிட்டதட்ட 50 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருப்பவை. அதன் டிசைனுக்காகவே வாங்குபவர்களும் இருக்காங்க. சிலர் மிகவும் பழமையான பேனாக்களை தேடிப் போய் வாங்குவார்கள். இவர்கள் இருவருக்கும்தான் இந்த கண்காட்சியினை நாங்க நடத்தினோம். இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கு’’ என்ற தீரஜை தொடர்ந்து பேசத் துவங்கினார் எண்ட்லெஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஆதித்யா பன்சாலி.

‘‘26 நாடுகளில் எங்களுடைய பேனா பிராண்ட் பயன்பாட்டில் இருக்கு. நாங்கள் இது போன்று வெளிநாடுகளில்தான் அதிக அளவில் கண்காட்சியினை நடத்தி இருக்கிறோம். நாங்க இந்தியாவை குறிப்பாக சென்னையை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம் என்று குறிப்பிட்டாலும், இதுவரை சென்னையில் இப்படி ஒரு பேனா கண்காட்சியினை நடத்தியதில்லை. அதுமட்டும் இல்லாமல் சென்னையில் அதிக பெனோபில்ஸ் (Penophiles) இருக்காங்க. எனவே, இந்த பேனா கண்காட்சியினை இந்த வருடம் சென்னையில் நடத்த திட்டமிட்டு, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் விட்டோம். சென்னையில் இதுவே முதல்முறை. இதில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பேனாக்களும் இடம் பெற்றுள்ளது. இந்தியா தவிர பிற நாடுகளில் தயாரிக்கப்படும் பேனாக்களும் உண்டு’’ என்றவர் சில முக்கியமான பேனாக்களை பற்றி விளக்கினார்.

‘‘இந்தக் கண்காட்சியில் நம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பயன்படுத்திய பேனா மாதிரிகள், இசைக் குறிப்புகள் எழுத தனிப்பட்ட பேனாக்கள், நீள முனை கொண்ட பேனாக்கள் முதற்கொண்டு ஜப்பானில் தயாரிக்கப்படும் உருஷி பேனாக்கள் (Urushi Pens) வரை அனைத்து நாடுகளிலும் தயாரிக்கப்படும் பேனாக்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒரு உருஷி பேனாவினை தயாரிக்க அதிகபட்சம் ஒரு வருட காலமாகும்.

காரணம், இது பல லேயர் கொண்ட பேனா. மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஜெல்லினைக் கொண்டு ஒவ்வொரு லேயர் அமைத்துதான் இந்த பேனா தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் ஒரு பேனாவினை தயார் செய்ய இவ்வளவு காலம் எடுக்கிறது’’ என்றவர், அங்குள்ள மற்ற பேனாக்களின் வரலாறு, அதன் தொன்மை மற்றும் அதன் விலை குறித்தும் விளக்கினார்.

‘‘இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டு இருக்கும் பேனாக்களின் ஆரம்ப விலை ரூ.500ல் துவங்கி ரூ.2.16 லட்சம் வரை உள்ளது. அதன் பாரம்பரியம் மற்றும் தொன்மையின் அடிப்படையில்தான் இதற்கான விலையினை அந்த நிறுவனம் நிர்ணயிக்கிறது. சென்னையைச் சார்ந்த பல ஸ்டேஷ்னரி நிறுவனங்களும் கலந்து கொண்டதில் பெரும்பாலானவர்கள் இளம் தலைமுறையினைச் சேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் அனைவரும் வளர்ந்து வரும் தொழிலதிபர்கள் என்று குறிப்பிடலாம்.

ஒரு சிலர் பேனாக்களின் மேல் கொண்ட ஆர்வத்தினால் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வெளிநாட்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுக்க முழுக்க பேனாக்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்க நிறுவனமான எண்ட்லெசில் நாங்க ஸ்டேஷ்னரி சம்பந்தப்பட்ட பேப்பர், நோட்புக், லெதர் கேஸ், பேனாக்கள் வைக்கும் பௌச், இங்க் தயாரித்து வருகிறோம். அதில் முக்கியமாக பேப்பர் விற்பனைதான் அதிகம். தற்போது நாங்க உருவாக்கியுள்ள இங்க் பாட்டில் மற்றும் பென் பௌச் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், எளிதில் கவரக்கூடிய டிசைன்களில் தயாரித்து இருக்கிறோம். இந்த இங்க் பாட்டில் தயாரிப்பதற்கு நாம் விளையாடும் பம்பரம்தான் அடிப்படையாக இருந்தது.

இந்த கண்காட்சி வைக்க திட்டமிட்டபோது, இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று நாங்க எதிர்பார்க்கவில்லை. ஸ்டேஷ்னரி பொருட்கள் மற்றும் பேனாக்கள் மேல் ஈடுபாடு ெகாண்டவர்கள்தான் வருவாங்கன்னு யோசித்தோம். ஆனால் இதில் பெரியவர்களுக்கு நிகராக சிறியவர்களும் கலந்து கொண்டதுதான் எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. கண்காட்சியில் இருப்பது போல் சாதாரணமாக ஒரு ஸ்டால் போல் அமைக்கக்கூடாது என்பதில் நாங்க உறுதியா இருந்தோம்.

அதனால்தான் நாங்க ஒரு காபி ஷாப்பினை தேர்வு செய்தோம். மேலும் வருபவர்களை ஈர்க்கும்விதமாக, சில வர்க் ஷாப்களையும் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் காலிகிராப்பி மூலம் எழுதுவது மற்றும் ஆர்ட் குறித்த வர்க் ஷாப்களை நடத்தினோம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தது. மேலும் கவிஞர்கள், திரைத்துறை சார்ந்தவர்கள், பேனாக்களின் மேல் ஆர்வம் உள்ளவர்களும் கலந்து கொண்டனர்’’ என்று குறிப்பிட்டார் சாய் மாளவிகா தீரஜ்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

படங்கள்: சதீஷ்

The post சென்னையின் முதல் பேனா கண்காட்சி! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Veda ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...