×

காரணம் கேட்டு வா

“காரணம் என்னவாக இருக்கும்.. வாலியின் வதத்திற்கு? “மிதிலை அரசர், ஜனகரின் துணைவி சுனைனா, தனக்குள் நீண்ட நாளாக இருந்த கேள்வியை தன் மகள் ஊர்மிளையிடம் கேட்டாள். தன்னுள் உள்ள கேள்வி இப்போது தன் தாய்க்கும் உள்ளதை எண்ணி ஊர்மிளை வியந்தாள். ராமன் ஏன் வாலியை வதை செய்ய வேண்டும்? தவிரவும் நம் மூத்த புதல்வனுக்கு அங்கதன் எனப் பெயர் வைக்க என்ன காரணம்? ஊர்மிளை மனதில் கேள்விகளோடு அந்த முன்னிரவில் இலக்குவன் அருகில் அமர்ந்து அவன் முகத்தைப் பார்த்தபடி இருந்தாள்.

“என்ன ஏதோ இன்று முதன் முதலாய்ப் பார்ப்பது போல பார்க்கிறாய். என்ன விஷயம்?’’
“ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை’’ என்று வழக்கமாய்ப் பெண்கள் கூறுவது போலப் பதிலளித்தாள்.“எதற்கு இந்த பாசாங்கு?’’ என்று இலக்குவன் கேட்டான்.“இந்த உலகமே உங்களைப் பார்த்தால் பயப்படுகிறது. எப்போது சீறுவீர்களோ என்று…”“என் ராமன் மேல் நான் கொண்ட பக்தி. அவரை நான் என் உயிரினும் மேலாக காக்க வேண்டும் என்ற என் கடமை. அதற்கு எனக்கு நானே போட்டுக் கொண்ட வேடம்தான் அந்த கோபமும், சீற்றமும் என் ப்ரியசகி நீ.

உனக்கு இது புரியாதா? சரி. என்ன கேட்க விரும்புகிறாய்?’’
“வாலி வதம் பற்றியும் நம் மூத்த புதல் வனுக்கு அங்கதன் என்று பெயர் வைத்ததற்கு காரணமும் கூறுங்கள்”“முதலில் வாலி மோட்சம் பற்றிக் கூறுகிறேன். வாலி வதம் என்பதைவிட வாலி மோட்சம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஊர்மிளா உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். ராமனுடன் எப்போதும் நான் இருக்கிறேன் என்ற ஒரு தகுதியே ராமனைப் பற்றிக் கூறமுடியும் என்று நினைத்து விடாதே! எனக்கு ராமன் சகோதரன் மட்டுமல்ல, தாய், தந்தை, குரு, ஏன் என் கடவுளே ராமன்தான்.”

“உங்களுக்கு ராமபிரான்தான் எல்லாமும் என்பது உலகுக்கே தெரியுமே! இந்த பூமி சுழலும் வரை சகோதரர்களை வாழ்த்தும் போதெல்லாம் ‘நீங்கள் ராமன் லட்சுமணன் போல வாழ வேண்டும்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். எனக்குத் தெரியாததா?”“நல்லது ஊர்மிளா. நான் குறிப்பிடப் போகும் எல்லா விஷயங்களும் எனக்கு தெரிந்த விஷயங்கள். அவ்வளவே! இதில் தவறு ஏதும் இருப்பின், என் புரிதலில்தான் குறை என்பதை நீ புரிந்துகொள்.

வாலியின் இறப்பைப்பற்றி அப்பொழுதே கிஷ்கிந்தையில் பேசிக் கொண்டார்கள். யுத்த சமயத்தில் இலங்கையில் பேசிக் கொண்டார்கள். பட்டாபிஷேகம் முடிந்த பின் அயோத்தியில் அமைச்சர்களும் மக்களும்கூட பேசி வருகிறார்கள். ஏன் இன்னமும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் ராமன் – வாலியைப் பற்றி பேசுவார்கள். விவாதம் செய்வார்கள். என்னைப் பொறுத்தவரையில், ராமன் எது செய்தாலும் அது தர்மத்துக்கும் மாண்புக்கும் உரித்ததாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. இதைக் கேட்க இருக்கிற உனக்கும் அந்த நம்பிக்கை இருந்தால் போதும்.”

“முதலில் நீ வாலியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ராமகாதை முழுவதிலும் எந்த ஒருவரும் பார்க்காத கோணத்தில் ராமனைப் பரம்பொருளாக உணர்ந்தவன் வாலி மட்டுமே! வாலியின் பராக்கிரமத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம். வாலியின் மைந்தன் அங்கதன் குழந்தையாகத் தொட்டிலில் இருந்த பொழுது அவனுக்கு விளையாட்டு காட்டும் பொருட்டு, ராவணனை கயிற்றில் கட்டி சிறு பொம்மையைப்போல ஆடவிட்டவன். அப்படிப்பட்ட வாலியிடம், ராவணனுக்கு எப்போதுமே ஒரு பயம் உண்டு.

வாலியின் வால் இருக்கும் இடத்தைக் கூட நெருங்க அவன் மிகவும் அச்சப்படுவான். ஒருமுறை பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் மந்திர மலையை மத்தாக்கி வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கிக் கடைந்தபோது சோர்ந்து போனார்கள். அந்தச் சமயம் தேவர்கள் அசுரர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு வாசுகி பாம்பின் தலையைத் தன் வலது கையாலும் வால் பகுதியை இடது கையாலும் கடைந்து அமுதம் எடுக்கும் அளவிற்கு அவன் பராக்கிரமம் படைத்தவன்.’’“ஓ.. அப்படியா?” என ஊர்மிளா வியந்தாள்.

“முன்னொரு சமயம் சீதாதேவியைப் பிரிந்து ராமன் தவித்திருந்த காலம் அது. நானும், ராமனும் கிஷ்கிந்தைக் காட்டினுள் நுழைந்தோம். நாங்கள் வருவதைப் பார்த்த சுக்ரீவன், அவனைக் கொல்ல வாலி எங்களை அனுப்பியதாக எண்ணி பயந்தான். அவனருகில் இருந்த அனுமன் எங்களைக் கண்டான். அருகில் வந்தான். ‘வாயு புத்திரன் அனுமன்’ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு எங்களை வரவேற்றான்.

எங்களைச் சந்தித்த அனுமனுக்கு, ராமனின் கல்யாண குணங்கள் எல்லாமும் தெரிந்திருந்தது. எங்களை சுக்ரீவன் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அனுமன் சுக்ரீவன் அருகில் சென்று வாலியைக் கொல்ல எமன் வந்திருப்பதாக கூறினான். சுக்ரீவன் எங்களைப் பார்த்தவுடன், குறிப்பாக ராமனின்
கண்களைக் கண்டான். அவன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?‘மானுடம் வென்றதம்மா!’ ஊர்மிளா! இதன் உள் அர்த்தம் உனக்கு விளங்குகிறதா?”“புரியவையுங்கள்.”

“சொல்ல முயல்கிறேன். அது வரையில் சுக்ரீவன் மனதில் கடவுளாக அறியப்பட்ட சிவன் முதலானோர்கள் மட்டுமே வணங்கு தலுக்கு உரியவர்கள் என்று நினைத்திருந்தான். அந்த எண்ணம் ராமன் மனித உருவில் வந்த பின்பு இறைவனை விடவும் வணங்கக் கூடிய மானுடனாக ராமன் தெரிந்ததால் மானுடம் வென்றதாக குறிப்பிடுகிறான். சுருங்கக் கூறினால் ராமனை மனித உருவில் வந்த கடவுளாகவே உணர்ந்தான் என்பதுதான்.”“உண்மை ஸ்வாமி! உண்மை!” இலக்குவன் தொடர்ந்தான். “ராமன் சுக்ரீவனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றான். சுக்ரீவன் சின்னக் குழந்தையைப் போல் என்னை வாலி இடுப்பில் உதைத்து விட்டான். கையை முறுக்கினான். பல்லை உடைத்துவிட்டான் எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். இதை உணர்ந்த அனுமன் இடையில் குறுக்கிட்டான். வாலியைப் பற்றி ராமனிடம் விவரிக்க ஆரம்பித்தான்.

“வாலி மிக வலிமையானவன். இவனைக்கண்டால், ராவணனுக்கு நடுக்கம்தான். மேலும், வாலியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், ராவணன் பயப்படுகிற ஒரே விஷயம் வாலிதான். வாலியின் வால் இருக்குமிடத்தில், ராவணன் நிற்கவே அஞ்சுவான். இப்படி இருந்த ராவணனை ஒரு நாள் வாலியே ‘இனி நான் உனக்கு எந்தத் தொல்லையும் தர மாட்டேன்’ என ஒரு அற ஒப்பந்தம் செய்து கொண்டான். இதன் பிறகுதான் ராவணன் நிம்மதியாக இருக்கிறான். இன்னுமொரு செய்தி. வாலி, யாருடன் போர்செய்தாலும் எதிரியின் பலத்தில் அவனுக்குப் பாதி வந்துவிடும். இது ஒரு புறம் இருக்க, கிஷ்கிந்தா காட்டில் வாலி அரசனாகவும் சுக்ரீவன் அவனுடனும் நான் அமைச்சனாகவும் இருந்து வந்தோம். நாங்கள் எல்லோருமே நன்றாகத்தான் இருந்தோம். எல்லாமும் நலமுடன்தான் சென்றுகொண்டிருந்தது.

ஆனால், கெட்ட காலம் மாயாவி எனும் அரக்கன் ரூபத்தில் வந்தது. மாயவிக்கும் வாலிக்கும் சண்டை. வாலி துரத்தியபடி வர, மாயாவி ஒரு குகைக்குள் நுழைந்து விட்டான். அவனைத் துரத்திய படி வந்த வாலி என்னையும், சுக்ரீவனையும் எங்கும் செல்ல வேண்டாம் எனக் கூறி குகை வாசலில் காவலாக இருக்கச் சொன்னான். நாங்களும் காத்திருந்தோம். நாட்கள் கழிந்தன. மாதங்கள் கழிந்தன. இனிமேல் வாலி வருவதற்கு வாய்ப்பில்லை, அவனை மாயாவி கொன்றிருப்பான் என்று நாங்களே ஊகம் செய்து கொண்டோம். ஒரு பெரிய பாறையை நகர்த்தி குகையின் வாயிலை மூடிவிட்டு திரும்பிவிட்டோம். சுக்ரீவனை அரசனாக்கினோம். ஆனால், அதன் பின் நடந்ததோ வேறு.

மாயாவியைக் கொன்றுவிட்டு, வாலி திரும்பி வருகையில் குகையை அடைத்திருந்த பாறையை உதைத்து வெளியில் வந்தான். விவரம் அறிந்து விபரீதம் புரிந்து சுக்ரீவன் கலங்கிப் போனான். நேராக வாலி இருக்குமிடம் சென்றான். நெடுஞ்சாண் கிடையாக வாலியின் காலில் விழுந்தான். மன்னிக்கச் சொல்லியும் நடந்த விவரங்களைக் கூறியும் கதறினான்.வாலிக்கு அவனை மன்னிக்க மனமில்லை. சுக்ரீவனை துவம்சம் செய்தான். அதோடு மட்டுமல்ல சுக்ரீவன் மனைவி உருமையையும் தூக்கிச் சென்றுவிட்டான். நீங்கள்தான் சுக்ரீவனைக் காத்தருள வேண்டும்.” அனுமன் கூறியதைக் கேட்டு ராமனுக்கு மிகுந்த கோபம் வந்தது. தன் துணைவியை மற்றொருவன் தூக்கிச் சென்றுவிட்டால் அந்த ஆணின் மனநிலை கொடுமைதான். தன் நிலைமையில் சுக்ரீவன் இருப்பதாக நினைத்ததுகூட ராமன் சுக்ரீவனை நட்பு பாராட்டுவதற்கு, ஒரு காரணமாய் இருக்கலாம்.

ராமன், சுக்ரீவனை அருகில் அழைத்து அவனுக்குத் துணை நிற்பதாக வாக்குக் கொடுத்தான். உன்னுடன் என்றும் நான் இருப்பேன் என உறுதி அளித்த பின்பும், சுக்ரீவன் ராமனை முழுதும் நம்ப முடியாமல் தவித்தான். காரணம், அவன் வாலியிடம் வாங்கிய அடியும் உதையும்தான். அவன் உடல் வலி மனதையும் நோக வைத்திருந்தது. அனுமன் சுக்ரீவனை தனியே அழைத்து “நீ ராமனிடம் சென்று உன் வில் வலிமையை சோதிக்க வேண்டும் என்று சொல்.’’ சுக்ரீவன் ராமனிடம் சென்றான். “இதோ ஏழு மரங்கள் இருக்கின்றன. உன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு எல்லாவற்றையும் துளைத்து வரட்டும். அதன் பின் உன் சொல் நாங்கள் ஏற்கிறோம்” என்றான்.

நான் அப்போது மனதில் நினைத்தேன். ராமனை, அவன் வில்லின் வலிமையை ஒருவர் சோதித்துதான் உணர வேண்டுமா? இது ராமனின் புகழுக்கு களங்கமில்லையா? ராமன் புன்முறுவல் பூத்தபடி வில்லை எடுத்தான். அம்பு தொடுத்தான். கோதண்டம் என்ற அந்த வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு, ஏழு மரங்களையும் துளைத்தது மட்டுமில்லாமல் ஏழு என்ற கணக்கில் உள்ள எல்லாவற்றையும் துளைத்தபடி சென்றது. இதைக் கண்டு பயந்த சுக்ரீவன், ராமனை வேண்டிய பின்பு அம்பு ராமனிடம் திரும்பியது. வானரக் கூட்டம் மொத்தமும் கைதட்டி வியந்தது. ராமன் சுக்ரீவனைப் பார்த்தான். “நீ உடனே வாலியை போருக்கு அழை!’’ வாலியின் அரண்மனையை சுக்ரீவன் அடைந்தான். வாசலில் நின்று ஓங்கி அறைகூவல் விடுத்தான்.

“வாலி! என்னுடன் போர் புரிய நீ தயாரா? உனக்கு நெஞ்சில் துணிவிருந்தால் என்னுடன் மோதிப்பார்! உன் எலும்புகளை ஒடித்து அனுப்புவேன். நீ செய்தது தவறு என உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வரை நான் ஓய்வதில்லை!” துடையைத் தட்டியபடி உரக்கக் கூச்சலிட்டுக் குதித்தான். உறங்கிக் கொண்டிருந்த வாலி குரல் கேட்டு விழித்தான். இது வெறும் பிரமை. சுக்ரீவன் என்னைப் போருக்கு அழைப்பதா? வியந்தான்.

மீண்டும் உறங்கத் துவங்கினான். சுக்ரீவன் மீண்டும் உரக்கக் குரல் கொடுத்தான். குரல் கேட்டு வாலி வாசலுக்குச் செல்ல முற்பட்டான். அவனை அவனின் மனைவி தாரை தடுத்தாள். கொஞ்சம் யோசியுங்கள். இவ்வளவு நாள் உங்களைக் கண்டு பயந்து நடுங்கியவன், இன்று போருக்கு உங்களை அழிப்பதன் காரணம் என்ன தெரியுமா?அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் வாலி “தாரையே! நீ எதற்காக என்னைத் தடுக்கிறாய்! நான் இதோ வாசலில் அறிவின்றி கத்திக் கொண்டிருக்கிறானே அவனை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?

அவன் முதுகு எலும்பை மத்தாக்கி வலது இடது கைகளைப் பிடித்து பாற்கடலை கடைந்தது போல சுக்ரீவன் உடம்பை கடைந்து அவன் உயிர் எனும் அமுதம் எடுப்பேன்!” தாரை, “நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா? அவனுக்கு யாருடைய உதவி இருக்கிறது தெரியுமா?’’“யார்? யார்?”“அந்த ராமன்தான். உங்கள் உயிரை எடுப்பதுதான் குறிக்கோள் என வந்திருக்கிறான்.”

“என்ன? சூரிய குலத்து ராமன் என்னை அழிக்கவா? இருக்க முடியாது. அவன் போல் உடன் பிறந்தோர் மேல் பாசம் வைப்பவன் யாருமில்லை. அயோத்தியில் பரதனை நாட்டை ஆளவைத்து, உடன் சத்ருக்ணனை இருக்க வைத்துள்ளான். இங்கே அவனுடன் இலக்குவன் என்ற உடன் பிறப்புடன் வந்துள்ளான். அவன் இந்தச் சகோதரர்களுக்கு இடையில் உள்ள சண்டைக்கா வரப்போகிறான்? இருக்கவே முடியாது. அவன் அருளின் ஆழியான் கருணைக் கடல்!.” “ஊர்மிளா! வாலியின் இந்த மாற்றம் எதனால் வந்தது தெரியுமா? தாரை சொன்ன அந்த மந்திரச் சொல்! ஆம். ராமநாமம்தான்.”“ஆம் ஸ்வாமி. பிறகு என்ன ஆயிற்று?’’

(தொடரும்…)

கோதண்டராமன்

 

The post காரணம் கேட்டு வா appeared first on Dinakaran.

Tags : Wally ,Sunaina ,King Janagar ,Mithila ,Urmila ,Raman ,
× RELATED ரீரிலீசாகும் காதலுக்கு மரியாதை, வாலி