×
Saravana Stores

விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

 

கோவை, மார்ச் 20: கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் திக்ஷன்யா, காவியா, ஆகாஷ், மிர்ஜன் ஆதித்தியா ஆகியோர் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் வரை மாதம் ரூ.1000 என மொத்தம் ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெறவுள்ளனர்.

இப்பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் மாணவர்கள் யாரும் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மாணவர்கள் பயிற்சியில் மாற்றங்கள் செய்ததுடன், தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் விமானத்தில் அழைத்து செல்லப்படுவார்கள் என பள்ளியின் தலைமை ஆசிரியை மைதிலி உறுதியளித்து இருந்தார். இந்நிலையில், நடப்பாண்டில் நடந்த தேசிய வருவாய் வழி தேர்வை 21 மாணவர்கள் எழுதினர். இவர்களில், 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து, அந்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் சுகுணா, மேரி திவ்யா ஆகியார் மாநகராட்சி கமிஷனர் அனுமதியுடன் கடந்த 18ம் தேதி பெங்களூருக்கு விமானத்தில் தலைமை ஆசிரியர் அழைத்து சென்றார். பெங்களூரில் விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், கர்நாடக சட்டமன்றம், திப்பு சுல்தான் கோட்டை ஆகிய இடங்களை பார்வையிட்டு பேருந்தில் மாணவர்கள் மீண்டும் கோவை வந்தனர்.

இந்நிலையில், முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்த மாணவர்கள் தங்களின் அனுபவத்தை பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். இந்த பயணத்திற்கு தலைமை ஆசிரியர் ரூ.40 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Diksanya ,Kavya ,Akash ,Mirjan Aditya ,Coimbatore Masakkalipalayam Corporation School ,Dinakaran ,
× RELATED உடைந்த பாலத்தால் மக்கள் தவிப்பு