கோவை, நவ. 10: தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 7வது படை வீடாக கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று, படிக்கட்டு வழியாக நடந்து செல்லலாம். இன்னொன்று மலைப்பாதையில் வாகனங்கள் மூலம் செல்லலாம்.
வாகனங்கள் வழியாக மலையின் மேம்பகுதிக்கு சென்றாலும், கோவிலை சென்றடைய மீண்டும் சுமார் 20 மீட்டர் உயரம் படிக்கட்டுகள் ஏறி, இறங்க வேண்டும். எல்லா தரப்பினரும் இந்த படிக்கட்டுகளைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால், இந்த படிக்கட்டில் ஏறுவதற்கு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
அதனால், இதுபோன்ற மக்களுக்காகவும், பக்தர்களின் வசதிக்காகவும் லிப்ட் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு லிப்ட் அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கிவைத்தார். இக்கோவிலின், ராஜகோபுரம் அருகே தலா 10 மீட்டர் இடைவௌியில் மொத்தம் 20 மீட்டர் உயரத்துக்கு, ரூ.5.20 கோடி மதிப்பில் 2 லிப்ட் அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 75 சதவீதம் பணி நிறைவுபெற்றுள்ளது. இப்பணியை இன்னும் வேகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, இன்னும் 2 மாதத்தில் இப்பணியை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘’இந்த லிப்ட் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில், ஒரே நேரத்தில் 20 பேர் செல்ல முடியும். முதல் லிப்ட் மூலம் 10 மீட்டர் உயரத்துக்கு சென்ற பின்னர், அங்கிருந்து சற்று தூரம் நடந்துசென்று மற்றொரு லிப்ட் மூலம் மீண்டும் 10 மீட்டர் உயரம் செல்லவேண்டும். இப்படி பயணிக்கும்போது, கோவில் சன்னதி வரை எளிதாக சென்றுவிடலாம். இன்னும் 2 மாதத்தில் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இக்கோவில் வளாகத்தில் ரூ.1.60 கோடி மதிப்பில் கொடிமரம் மண்டபம் கட்டுமான பணியும் துவங்கி, வேகமாக நடந்து வருகிறது’’ என்றனர்.
The post மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைக்கும் பணி 2 மாதத்தில் முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.