×
Saravana Stores

கிண்டியில் பெண் தவறவிட்ட 40 சவரன், ரூ.61 ஆயிரத்தை ஒப்படைத்த முதியவர்: கமிஷனர் பாராட்டு

ஆலந்தூர்: கிண்டியில் பெண் தவறவிட்ட 40 சவரன் நகை, ரூ.61 ஆயிரத்தை ஒப்படைத்த முதியவரை கமிஷனர் பாராட்டி வெகுமதி அளித்துள்ளார். ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சுந்தரம் (68). இவர் நேற்று முன்தினம் மாலை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு வந்தபோது தனது இருசக்கர வாகனத்தில் கைப்பை தொங்கிக் கொண்டிந்ததைப் பார்த்துள்ளார்.

அதனை திறந்து பார்த்தபோது அதில் தங்க நகைகள், கட்டுக்கட்டாக பணம், வெள்ளிக்காசு போன்றவை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பரங்கிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அங்கு வந்த உதவி கமிஷனர் புருசோத்தமன், குற்றப்பிரிவு ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் கைப்பையை வாங்கி திறந்து பார்த்தபோது, அதில் 40 சவரன் தங்க நகைகள், 2வெள்ளிக் காசுகள், ரூ.61 ஆயிரத்து 404 பணம் மற்றும் ‘வங்கி ஏடிஎம் கார்டு, ஐ.டி. கார்டு’ போன்றவை இருந்தன.

இதனையடுத்து போலீசார் சுந்தரத்தின் நேர்மையை பாராட்டி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வங்கி ஏடிஎம் கார்டு மற்றும் ஐடி கார்டை வைத்து நகைகளை தொலைத்தவரை போலீசார் அடையாளம் கண்டனர். அவர் கிண்டி வண்டிக்காரன் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி ஜான்சிராணி (54) என்பதும், பணம் நகை, போன்றவற்றை வைத்திருந்த கைப்பையை ஞாபக மறதியால் தனது வாகனத்துக்கு பதிலாக சுந்தரத்தின் வாகனத்தில்ல் தொங்கவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து சென்னை மாநகர போலிஸ் கமிஷனர் சந்திப்ராய் ரத்தோர் ஜான்சி ராணி சற்று மனநிலை சரியில்லாதவர் என்ற காரணத்தால் அவரது கணவர் சிவகுமாரிடம் தொலைந்து போன பொருட்களை ஒப்படைத்தார். இதில் நகை, பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த சுந்தரத்தின் நேர்மையை பாராட்டிய கமிஷனர், அவருக்கு வெகுமதி வழங்கினார். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவலர்களையும் கமிஷனர் பாராட்டினார்.

The post கிண்டியில் பெண் தவறவிட்ட 40 சவரன், ரூ.61 ஆயிரத்தை ஒப்படைத்த முதியவர்: கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kindi ,Alandur ,Sundaram ,Adambakkam Thiruvalluvar Nagar Main Road ,Kindi Kathipara ,
× RELATED சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் நீர்நிலை...