×

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய, மாநில அமைச்சர்களுக்கான கட்டுப்பாடுகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

சென்னை: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அமைச்சர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
* ஒன்றிய அமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ அலுவல் ரீதியாக தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிக்கு வந்து செல்லவும், நடத்தை விதிகள் அமுலுக்கு உள்ள காலங்களில் அமைச்சர்கள் எவரும் தேர்தல் நடத்தும் பணியில் உள்ள அலுவலர்களை அழைப்பதற்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கு வரச் சொல்லவோ அல்லது அரசு விருந்தினர் மாளிகைக்கு வரச் சொல்லவோ கூடாது.

* அமைச்சர்கள் எவரேனும் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டாலோ அல்லது தேர்தல் முன்னிட்டு தொகுதிக்குள் வந்து சென்றாலோ அவை அலுவலக ரீதியாக கருத்தில் கொள்ளப்படமாட்டாது. தேர்தல் ரீதியாக கருத்தில் கொள்ளப்படும்.

* அலுவலக பணி ரீதியாக அமைச்சர்கள் வருகை தரும் நிகழ்வுகளில் தொகுதிக்குள் தங்க அனுமதியில்லை. தேர்தல் பணி ஏதும் அவர் கவனிக்கக்கூடாது.

* நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பொழுது காவல் பாதுகாப்பு பைலட் வண்டி அல்லது சைரன் வண்டி ஏதும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. அமைச்சர்கள், சேர்மன், வாரிய உறுப்பினர்கள் அரசு வாகனங்களைப் பயன்படுத்திட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

* அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வரும்போது தங்களது தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தங்களது உதவிக்காக நியமிக்கப்பட்ட அரசு அலுவலர்களை கூட அழைத்து வருவதற்கோ அல்லது அவர்களின் உதவியினை பெற்றுக் கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

* எதிர்பாராத நிகழ்வுகளான சட்டம், ஒழுங்கு பராமரித்தல், பேரிடர் நிகழ்வுகள் அல்லது அவசர நெருக்கடி நிலைமைகளில் அரசு வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தடையேதுமில்லை.

* உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான ஒன்றிய அல்லது மாநில அமைச்சர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பாதுகாப்பு படை பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பெண்களின் கவுரவம் மற்றும் கண்ணியத்திற்கு கேடு விளைவிக்கும் எந்தவொரு செயல்/ செயல்பாடுகள்/ சொற்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* உண்மைக்கு மாறான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய விளம்பரங்களை ஊடகங்களுக்கு கொடுக்கக்கூடாது. செய்திகள் போல போலியான விளம்பரங்களை கொடுக்கக்கூடாது. போட்டியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகப்பதிவுகள் அல்லது மோசமான அல்லது கண்ணியத்திற்கு குறைவான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிடவோ அல்லது பகிரவோ கூடாது. மேற்கண்ட நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்கள் பயன்படுத்தும் முறை
* முழு தொகுதிக்கும் தனது சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகனமும், முழுத் தொகுதிக்கும் தனது முகவர் ஒரு வாகனமும் பயன்படுத்தலாம்.

* வேட்பாளரின் முகவர், தொண்டர்கள் எவரேனும் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு வாகனம் பயன்படுத்தலாம்.

* வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. வேட்பாளரின் வாகனத்துடன் கூட வரும் வாகனங்களில் பயணிப்போரின் தேர்தல் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்படும்.

* பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் வீடியோ வாகனங்களுக்குண்டான அனுமதியினை அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ தேர்தல் ஆணையத்திடமிருந்து கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அனுமதி ஆணை முன்புறமாக பார்வைக்கு ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

* பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் சைக்கிள் ரிக்சாவும் வேட்பாளரின் செலவினத்தில் கணக்கில் கொள்ளப்படும்.

* வேட்பாளரின் சார்பில் அவருக்கு வாக்கு கோரி பயன்படுத்தப்படும் வீடியோ வாகனத்தின் செலவானது வேட்பாளரின் செலவினத்தில் கணக்கில் கொள்ளப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் தனக்காகவும், முகவருக்காகவும் மற்றும் கட்சி நடவடிக்கைக்கும் கூடுதலாக 2 வாகனங்களை மட்டும் முன்அனுமதி பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

* தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அனுமதி ஆணையின் அசல் வாகனத்தின் முன் முகப்புப் பகுதியில் கட்டாயம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களை பிரச்சார நடவடிக்கைகளில் பயன்படுத்திட அனுமதியில்லை.

* 4 சக்கர வாகனங்களை தவிர பிற அமைப்புள்ள வாகனங்களை கட்சி வேட்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதியில்லை. அனுமதிக்கப்பட்ட வாகனங்களிலும் ஓட்டுநர் உள்பட 5 நபர்கள் மட்டும் பயணிக்க அனுமதியுண்டு. அதற்கு மேல் பயணிக்கக்கூடாது. மேற்கண்ட நடைமுறைகள் இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.இவ்வாறு தெரிவித்தார்.

* விளம்பரங்கள்
* வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அளிக்கும் சுயஉறுதிமொழி ஆவணத்தில் தனது சமூக வலைதள கணக்கு பற்றிய விவரங்கள் அளிக்க வேண்டும்.

* சமூக வலைதளங்களில் அளிக்கப்படும் அரசியல் விளம்பரங்கள் முன் அனுமதி பெற்றதாக இருக்க வேண்டும். தேர்தல் பரப்புரை மற்றும் சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்குண்டான செலவு தொகையினை தேர்தல் செலவுக் கணக்கில் காண்பிக்கப்பட வேண்டும்.

* அரசியல் கட்சியினை சார்ந்த இறந்து போன தலைவர்களின் சிலையினை மறைத்திட வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் சிலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் தேசிய கொடியினை பயன் படுத்த அனுமதி இல்லை. பொது இடங்களில் கட்சி கொடிகள், கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள் இருக்கக் கூடாது. அவற்றை உடனடியாக அகற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

* அரசியல் கட்சி விளம்பரங்கள், தட்டிகள், போர்டுகள், கொடிகள், கம்பங்கள் உள்ளிட்ட பிற இனங்கள் அகற்றப்பட்டமைக்கான அறிக்கையினை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

* பொதுமக்களின் பார்வைக்குரிய பகுதி என்பது தனியார் இடங்கள், கட்டிடங்கள், தனிநபர்கள் பார்க்கக்கூடிய அல்லது அதன் வழியே கடந்து செல்லத்தக்க பொது இடங்கள் ஆகும்.

* மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் சுவர்களின் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை. அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி பெற்று இருந்தாலும், சுவம் விளம்பரம் எழுதுதல், போஸ்டர்கள் ஒட்டுதல் போன்ற செயல்களைக் செய்யக் கூடாது. சொந்த இடத்தில் பேனர்கள், கொடிகள் கட்டி விளம்பரம் செய்தல், தனியார் வாகனங்களில் வாக்காளர்களை கவரும் வகையில் கட்சிக் கொடி, தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்ள அனுமதியில்லை.

The post தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய, மாநில அமைச்சர்களுக்கான கட்டுப்பாடுகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...